திங்கள், 19 டிசம்பர், 2016

நான் தலித் என்று கூறி கண்களை பார்ப்பேன்.அதில் தெரியும் பாருங்கள் ஒரு சைலென்ஸ்.....

Image may contain: 2 people, people playing musical instruments
யாராவது என்னிடத்தில் நீ என்ன ஆளு என்று இப்போது கேட்டால் தலித் என்று கூறி அவர்களது கண்களை பார்ப்பேன்.அதில் தெரியும் பாருங்கள் ஒரு சைலென்ஸ்.அதை ரசிக்க ஆரம்பித்தேன்.நான் 11 ம் வகுப்பு படிக்கும்போது வகுப்பு ஆசிரியர் என்னிடத்தில் நீ என்ன சாதி என்று கேட்டார்.நான் அமைதியாக எழுந்து தலை குனிந்து நின்று கொண்டு இருந்தேன்.கொஞ்சம் நேரம் கடந்து அந்த ஆசிரியர் நீ சாதி சொல்ல வெட்கப்படுகிறாய் என்றால் எஸ்.சி.யா என்று கேட்டார்.எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது.அன்று என்னுடன் படிக்கும் சில மாணவர்கள் என்னிடம் பேசாமல் சென்றுவிட்டனர்.நான் பள்ளிக்கூட வளாகத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டே இருந்தேன்.இரவு 7 மணி இருக்கும் என் அப்பா என்னை தேடி வந்தார்.என்ன பா ஆச்சு என்று என் அப்பா என் கைகளை பிடிக்க அவரது கைகளை உதறிவிட்டேன்.என் அப்பாவை மட்டும் அல்ல யாரையும் பார்க்க பிடிக்காத நாட்கள் அவை.இது போன்ற கொடுமையை எல்லா தலித் குழந்தைகளும் அனுபவித்து இருப்பார்கள்.
இதற்கு மாற்று என்ன ? அடையாளத்தை வலுவாக சொல்லுவதுதான்.கிரிக்கெட் பிளேயர் ரிக்கி பாண்டிங் சொல்லுவார்.இந்திய மைதானங்களில் எப்போது எல்லாம் நான் பந்தினை பவுன்டரிக்கு அடிப்பேனோ அப்போது எல்லாம் இந்திய ரசிகர்கள் சைலண்டாக இருப்பார்கள்.அந்த சைலென்ஸ் எனக்கு பிடிக்கும் என்பார்.அது போல் யாராவது என்னிடத்தில் நீ என்ன ஆளு என்று இப்போது கேட்டால் தலித் என்று கூறி அவர்களது கண்களை பார்ப்பேன்.அதில் தெரியும் பாருங்கள் ஒரு சைலென்ஸ்.அதை ரசிக்க ஆரம்பித்தேன்.
சாதியை கடைபிடிப்பவன் தன்னுடைய சாதி அடையாளத்தை சொல்ல வெட்கப்பட வேண்டும்.சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது அடையாளத்தை வலுவாக சொல்ல வேண்டும்.இதுதான் சாதி ஒழிப்பு.ஒடுக்கப்படுறவன் தன்னுடைய அடையாளத்தை சொல்லுவது சாதி உணர்வு அல்ல.விடுதலை உணர்வு. இப்போது எல்லாம் எல்லா மேடைகளிலும் நான் எவிடென்ஸ் கதிர்.தலித் சமூகத்தை சேர்ந்தவன் என்றுதான் பேச ஆரம்பிக்கிறேன்.  முகநூல் பதிவு வின்சென்ட் ராஜ்

கருத்துகள் இல்லை: