திங்கள், 19 டிசம்பர், 2016

காவேரியில் கலைஞர் பார்த்தது பராசக்தி .. பாட்சா அல்ல!

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். அங்கு அவருக்கு கொடுத்துவரும் சிகிச்சையின் ஒரு பகுதியாக, கருணாநிதியின் பழைய நினைவுகளை அவருக்கு மீண்டும் நினைவுபடுத்தி, அவரது நினைவாற்றலை திரும்பக் கொண்டுவரும் வகையில் அவருக்கு, பராசக்தி திரைப்படத்தை லேப்டாப்பில் போட்டுக் காண்பித்தார்கள் மருத்துவர்கள். வெளியில் எல்லோரும் இதனைத்தான், கலைஞர்  பாட்சா படம் பார்த்தார் என்று செய்தி பரப்பினார்கள்.
ஆனால், கலைஞர்  பார்த்த சினிமா, பாட்சா அல்ல பராசக்தி. ஏனென்றால், அவரின்  நினைவிடுக்குகளில் ஏராளமான மறத்தற்கரிய நிகழ்வுகள் நிறைந்திருந்தாலும் பராசக்தி திரைப்படம் தொடர்பான பழைய நினைவுகள் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. தமிழ் திரைப்பட வரலாறு என்பதில் பராசக்தி திரைப்படத்துக்கென தனிப்பெரும் சிறப்புகள் பல உண்டு.

நடிப்புக்கு அகராதியான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம்தான் பராசக்தி. முற்போக்கு சிந்தனைகளுடன் சமுதாயத்தில் மண்டிக் கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்கள், பிற்போக்கு சிந்தனைகள், பகுத்தறிவிற்கு ஒவ்வாத நம்பிக்கைகள் போன்றவற்றை புரட்டிப் புறந்தள்ளும் நெருப்பு வசனங்களை கலைஞர்  அத் திரைப்படத்தில் தீட்டியிருப்பார்.
அவரின்  அனல் பறக்கும் வசனங்களை சிவாஜிகணேசன் பேசி நடித்திருக்கும் காட்சிகள், காணும் அனைவரையும் இருக்கையின் நுணிக்கே இழுத்துவிட்டுவிடும். அந்தளவுக்கு உணர்ச்சி பொங்க வைக்கும் அளவுக்கு காட்சியில் நடிப்பும் வசனமும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும். பராசக்தி படம் என்பது, அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே அது வாழ்வில் மறக்க இயலாத வரலாற்று நினைவுகளின் தொகுப்பு ஆகும். எனவேதான், கலைஞரின் நினைவாற்றலை மீட்கும் சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு பராசக்தி திரைப்படத்தை மருத்துவர்கள் லேப்டாப்பில் போட்டுக் காட்டினார்கள்.

கருத்துகள் இல்லை: