திங்கள், 26 செப்டம்பர், 2011

எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியும்'.. ராசா 'பகீர்'!

P Chidambaram and Raja

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கும் தெரியும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.
அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயவில்லை என்றும், அவருக்கும் எல்லாமும் தெரியும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது பேசிய ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை என்பது மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ராசா குற்றவாளி என்றால் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு தான், அடுத்தடுத்து வந்த அரசுகள், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் வழி மொழியப்பட்டது. உண்மை இப்படியிருக்க ராசா மட்டும் எப்படி குற்றவாளியாக்கப்பட்டார்?.

இதனால் பிரிவு 311ன் கீழ் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்து விசாரியுங்கள். பிரதமரின் முன்னிலையில் அவர் ராசாவுக்கு அட்வைஸ் தந்தாரா இல்லையா என்பதைத் தெரிவிக்கட்டும். அதன் பின்னர் தேவைப்பட்டால் பிரதமரையும் அழைத்து விசாரியுங்கள்.

அதே போல டிராய் விதிமுறைகளை ராசா மீறிவிட்டதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. அப்படி அவர் விதிமுறையை மீறியதை நிரூபிக்க எதிர்க் கட்சிகள் ஏதாவது ஆதாரங்களை தாக்கல் செய்யத் தயாரா? என்றார் ராசாவின் வழக்கறிஞர் குமார்.

சிதம்பரத்துக்கு எதிரான சுவாமியின் மனு ஒத்திவைப்பு:

இந் நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

2ஜி வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் தொடர்புள்ளதாகவும், அவரை இந்த வழக்கில் சிபிஐ குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்றும் கோரி சாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து அக்டோபர் 12ம் தேதி தீர்மானிக்கப்படும் என்று அறிவித்தார்

கருத்துகள் இல்லை: