ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

வேலணைப் பகுதியில் நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!


தீவகத்தின் வேலணைப் பிரதேச சபைக்குட்பட்ட இரண்டு முக்கிய நீர்நிலைகளை ஆழமாக்கும் பணிகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் இன்றைய தினம் சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இன்றைய தினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இணைந்து தீவகப் பகுதிக்கான நன்னீர்த் தேவைக்கு தீர்வு காணும் வகையில் நீர் நிலைகளை ஆழமாக்கும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதன் பிரகாரம் இன்றைய தினம் வேலணைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்களும் ஆளுநர் அவர்களும் பிரதான வீதிப் பகுதியில் அமைந்துள்ள இடிவிழுந்து குண்டு பகுதியில் புனரமைக்கப்பட்டுள்ள நீர் நிலையினைப் பார்வையிட்டதுடன் அது தொடர்பில் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இதேபோன்று அராலிச் சந்திப் பகுதியின் அதிசய வயிரவர் கோயிலுக்கு அருகாமையிலுள்ள குளத்தின் புனரமைப்புப் பணிகளும் இன்றைய தினம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

முன்பதாக அதிசய வயிரவர் கோயிலில் இடம்பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களுக்கும் ஆளுநர் அவர்களுக்கும்ம் மக்கள் பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து புனரமைப்பு பணிகள் சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் வேலணைப் பெரிய குளம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு அண்மையாகவுள்ள பெருங்குளத்தின் புனரமைப்புப் பணிகளும் சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

தீவக மக்களின் கோரிக்கைக்கு அமைவாக தீவகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் மழைநீரை சேமிப்பதனூடாக தீவக மக்களினது குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமென்பதுடன் கால்நடைகளுக்கும் விவசாயச் செய்கைக்கும் தேவையான நீரையும் பெற்றுக் கொள்ள முடியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் வேலணைப் பிரதேச சபைத் தலைவர் சிவராசா (போல்) வேலணைப் பிரதேச சபை செயலாளர் தவராசா வாழ்நாள் போராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: