திங்கள், 26 செப்டம்பர், 2011

30sep வெள்ளவத்தையில் இருந்து யாழ் பஸ்கள் புறப்படாது

30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பஸ்கள் புறப்படக்கூடாது : வெள்ளவத்தை பொலிஸார்!

யாழ்ப்பாணம் கொழும்புக்கிடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்கள் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தைப் பகுதியிலிருந்து புறப்படக்கூடாது. அப்பகுதியில் பயணிகளை ஏற்றவும் கூடாது என்று வெள்ளவத்தைப் பொலிஸார் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையிலீடுபடும் சொகுசு பஸ்களின் உரிமையாளர்களுக்கும் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இந்த பேச்சு வார்த்தையின்போதே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபடும் தனியார் சொகுசு பஸ்கள் வெள்ளவத்தை பகுதியிலிருந்தே பயணிகளை ஏற்றிக்கொண்டு இதுவரை காலம் சேவையில் ஈடுபட்டு வந்தன. பொலிஸாரின் இந்த அறிவிப்பினால் 30ஆம் திகதிக்குப் பின்னர் வெள்ளவத்தையிலிருந்து புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பிரதேசத்திலிருந்து பஸ்கள் புறப்படுவதனை 30ஆம் திததிக்குப் பின்னர் தாம் அனுமதிக்கப்போவதில்லை என்றும் வெள்ளவத்தைப் பிரதேசத்துக்கு வெளியிலிருந்து புறப்படுவது தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனைவிட சொகுசு பஸ்களுக்கு சட்டவிரோதமாக ஆசனப் பதிவு செய்வது தவறு என்றும் அத்தகைய நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் பாதை அனுமதிப் பத்திரம் பெறாத பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படக்கூடாது. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்த அறிவிப்பையடுத்து யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபடும் பஸ்களின் உரிமையாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை பாதை அனுமதிப்பத்திரம் இல்லாது யாழ்ப்பாணத்துக்கு சேவையிலீடுபட்டுவந்த 8 பஸ்களை வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றியதுடன் அவற்றை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்றிருந்தமையும் குறிப்பிடத்கத்கதாகும்.

கருத்துகள் இல்லை: