திங்கள், 18 ஜூலை, 2011

காஞ்சி சங்கராசாரி :சங்கரராமன் கொலையில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை

சங்கரராமன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர்.

சங்கரராமன் கொலை வழக்கு மிக மிக நிதானமாக, மெதுவாக நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்புதான் சாட்சிகள் விசாரணையும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்தது.

இனி அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.

இதற்காக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் ராமசாமி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ஜெயேந்திரர், விஜேயந்திரர், அவரது தம்பி ரகு, சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 24 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர் அவர்களிடம் குறுக்கு விசாரணை தொடங்கியது.

முதலில் ஜெயேந்திரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மொத்தம் 196 பக்கங்கள் அடங்கிய 554 கேள்விகள் அவரிடம் கொடுத்து விளக்கம் கோரப்பட்டது. அதற்கு அவர் அத்தனை கேள்விகளுக்கும் மறுப்பு தெரிவித்தார். தனக்கும், சங்கரராமன் கொலைக்கும் எந்தத் தொடர்பும், சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு என்ன?

காஞ்சி மடத்திற்குச் சொந்தமான வரதராஜ பெருமாள் கோவிலில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் அலுவலகத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

இந்த வழக்கில் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரி கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. இதுவரை189 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 81 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர்.

சங்கரராமனின் மனைவி, குழந்தைகள், தலைமை விசாரணை அதிகாரி எஸ்.பி. சக்திவேலு ஆகியோர் விசாரிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

வழக்கின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றவாளிகளிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

காஞ்சி சாமியார்கள் புதுச்சேரி கோர்ட்டுக்கு வந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: