ஞாயிறு, 24 அக்டோபர், 2010

மாகாணசபைகளுக்கான முழு அதிகாரங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும் : சிவநேசத்துரை சந்திரகாந்தன்

13ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். முழுமையாக அதிகாரங்களை வழங்குவதன் மூலம் மட்டுமே பிரதேச மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் ஆட்சி நடத்திய தலைவர்கள் இழைத்த பிழைகளே ஆயுத போராட்டத்திற்கு வழிகோலியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் சகல மக்களினதும் உரிமைகளை பாதுகாப்பதற்கான சரியான தருணம் இதுவெனவும், அரசாங்கம் இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருப்பதாகவும் இதனால் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த காலத்தில் பிரதேசத்தை விட்டு வெளியேறியவர்கள் மீளவும் அதே காணிகளை கோர முடியாது எனவும், சில வேளைகளில் அவை வேறும் நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரிதொரு இடத்தில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரியான காணி உறுதிகள் காணப்பட்டால் அவர்களுடைய காணிகளை வழங்குவதில் சிக்கல் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தனவும், ரணசிங்க பிரேமதாசவும் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு முனைப்பு காட்டவில்லை எனவும், அவர்கள் தேசத்திற்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் சிவநேசத்துரை சந்திரகாந்தன்  குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: