திங்கள், 25 அக்டோபர், 2010

கொழும்பிலிருந்து இவ்வளவு ஈசியா யாழ்ப்பாணத்துக்கு ‘வானி’லை வருவம் எண்டு நினைச்சே

வெளிநாட்டுப் பணம்
-அஞ்சனா அருந்தவராசா-
“இளம் சமுதாயம் பொருளாதார விருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் காலமிது”
“வரும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள். யுத்த காலங்களில் வேலைவாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் தவித்தபோது நாம் அங்கிருந்து உங்களுக்குக் கைகொடுத்தோம். இனி உங்கள் உழைப்பால் உயருங்கள்”

“அங்க என்ர பிள்ளையளை தனியறைக்குள்ள விட்டுப் பூட்டீட்டு நாலு மணத்தியாலம் உழைக்கிற 300 யூரோவைத் தான் இங்க அனுப்புறனான்”

இந்த முறை நல்லூர்த் திருவிழா முன்னெப்போதும் இருந்திராதளவுக்குக் களைகட்டியிருந்தது.  நீண்ட காலத்துக்குப் பின்னர் பெருந்தொகைச் சனம்.  ஒவ்வொரு நாள் திருவிழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

திருவிழா களை கட்டினதுக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு யாழ்ப்பாணம் வந்திருந்த எமது புலம்பெயர் உறவுகளும் ஒரு காரணம். ஜுலை, ஓகஸ்ட் மாதங்கள் பெரும்பாலான புலம்பெயர் நாடுகளில் வேனிற்கால விடுமுறை. இங்கே நாட்டுச் சூழலும் மாறியிருக்கிறது. எல்லாம் சேர்த்து நல்லூர் திருவிழாவை களைகட்டச் செய்தது.

நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ் வந்தவர்களின் மன உணர்வுகள் பரவசப்பட்டன.

“கொழும்பிலிருந்து இவ்வளவு ஈசியா யாழ்ப்பாணத்துக்கு ‘வானி’லை வருவம் எண்டு நினைச்சே இருக்கேல்லஸ.. இவ்வளவு கெதியா யாழ்ப்பாணம் இப்பிடி மாறும் எண்டு கனவிலையும் நினைக்கேல்லைஸ.” என்கிறார் கனடா வாழ் புலம் பெயர் தமிழர் கிருபாகரன்- சியாமிளா.

1995ம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்கு சென்றவர், அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது கசூரினா பீச், நயீனாதீவு, நல்லூர் ஆலயம் என்று எல்லா இடமும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டே திரும்பினார்.

போக்குவரத்து, பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும், யாழ் நகர்ப் புறத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாகவும் கூறும் அவர்,   “மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப் பார்க்க சந்தோ~மாக இருக்கிறது” என்று சிலாகிக்கிறார்.

நிலைமைகள் பெருமளவு சீரான பின்னரும் யாழ்ப்பாணச் சூழ்நிலை தொடர்பாக பரவிய பல்வேறு வதந்திகளால் குழம்பியிருந்தவர்களுக்கு, நேரடி அனுபவம் வித்தியாசமாகவே இருந்தது.

“யாழ்ப்பாணத்தில வெள்ளைவானில் கடத்துறாங்கள். போறது கவனம் எண்டாங்கள். ஆனா இங்க வந்து பாத்தால் அப்படியில்லைஸஸ. கொள்ளைகள்தான் கூடவா இருக்குதுஸஸ..” என்று கூறுகிறார் கனடா வாசியான ஆரூரான் ஞானசௌந்தரி.

கனடாவுக்குப் புலம்பெயர்ந்து 14 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்னேரே தான் வர இருந்தபோதும், கடத்தல் பீதிகளால் பயந்துபோய் இருந்ததாகவும் கூறுகிறார் அவர்.

“ரவுனிலை பழையபடி கடைகளெல்லாம் ஓரளவு இயங்குது.. இரவெல்லாம் கூட சன நடமாட்டமா இருக்குது.” என்று மகிழ்ச்சி வெளியிட்டார் 1980ம் ஆண்டு ஜேர்மன் சென்றபின் முதல் தடவையாக இங்கு வந்திருந்த கனகரட்ணம் சண்முகரட்ணம்.

சனநடமாட்ட அதிகரிப்பும், வியாபார விருத்தியும், புதிய கம்பனிகளின் வரவும்; வேலையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான வரப்பிரசாதம் என்று மகிழ்ந்த அவர், “இளம் சமுதாயம் பொருளாதார விருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் காலமிது” என்றார் ஆணித்தரமாக.

“வரும் புதிய தொழில் வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள். யுத்த காலங்களில் வேலைவாய்ப்பின்றியும், வருமானங்கள் இன்றியும் தவித்தபோது நாம் அங்கிருந்து உங்களுக்குக் கைகொடுத்தோம். இனி உங்கள் உழைப்பால் உயருங்கள்” என்று இன்றைய சந்ததியினருக்கு ஆலோசனை சொல்கிறார் அவர்.

நெருக்கடியான காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாடுபட்டு உழைத்து இங்குள்ளவர்களுக்கு செய்த உதவிகள் இங்கே அதிகளவு விரயமாக்கப்படுவதாக வந்திருந்த பலரும் அங்கலாய்த்தார்கள்.

“இங்க உழைக்கிறது செலவுக்கே காணாது என்டீனம் இங்க வந்து பாத்தா முத்தம் கூட்டுறதுக்கும் வேலைக்காரி. சந்தைக்கு போறது ஆட்டோவில என்டு எங்கட வீட்டுக் கூத்தைப் பார்த்தா தலை சுத்துது.” என்று புளுங்குகிறார் ஸ்ரீஸ்கந்தராசா- ஜெயந்தி.

1992இல் திருமணத்துக்காக ஜேர்மனிக்கு சென்றவர், தாய் மண்ணையும், தன் உறவுகளையும் பார்;க்க வந்திருந்தபோது, தனது தங்கை வீட்டில் பணம் படும் பாட்டைப் பார்த்தே இப்படி வெதும்பினார்.

“தொலைக்காட்சி போடுவதே தங்கையின் மூத்த மகனின் காலைக்கடன். பார்ப்போர் இல்லாமலே அது ஓடிக்கொண்டிருக்கும். விடிந்தால் பொழுது பட்டால் செல்போனோடு தான் இளைய மகனின் பொழுது கழிகிறது. மாபிள் பதித்த ஹோலை யார் கூட்டுவது என்ற பிடுங்குப்பாட்டுக்குள் வேலைக்காரி முத்தம் கூட்டி முடித்துவிடுவாள். ஹீற்றரில் ரீ போட்டு பாண் வேண்டி மிக்சியில் சம்பல் அரைப்பதற்கே தங்கை அலுத்துக்கொள்கிறாள்” என்று பாடுபட்டு உழைத்து அனுப்பும் பணம் கரைந்துபோகும் விதத்தைப் பார்த்து அங்கலாய்த்தார் அவர்.

“அங்க என்ர பிள்ளையளை தனியறைக்குள்ள விட்டுப் பூட்டீட்டு நாலு மணத்தியாலம் உழைக்கிற 300 யூரோவைத் தான் இங்க அனுப்புறனான்”என்று காசுழைக்கத் தான் படும் பாட்டை விபரிக்கிறார் அவர்.

300 யூரோ என்றால் இங்கே கிட்டத்தட்ட 45 000 ரூபா கிடைக்கும். இதுவே ஸ்ரேலிங் பவுண் என்றால் அண்ணளவாக 55 000 ரூபாவும், கனடா டொலர் என்றால் சுமார் 30 000 ரூபாவும் கிடைக்கும். இவ்வாறு உண்டியல் மூலம் இங்குள்ளவர் கைசேரும் பணம் பெருமளவுக்கு இப்படித்தான் இங்கே கரைந்து போகிறது.

“மாதா மாதம் உடல் உழைப்பின்றி மேலதிக வருமானமாய் ‘சும்மா’ கிடைப்பதால் உழைப்பின் பெறுமதி இங்குள்ளவர்களுக்குத் தெரியவதில்லை. ஆடம்பரமான சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்கள், பிறந்தநாள் வைபவங்கள், கோயில் திருவிழாக்கள் என்று அதைக் கரைத்துவிடுகின்றனர்” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத உள்ள+ர்வாசியொருவர்.

காலை எழுந்து மனைவி வேலைக்குச் செல்கிறாள். கணவனுக்கு இரவிலும் இரண்டாவது வேலை. இங்குள்ள தமது உறவுகளுக்கு உதவுவதற்காக இப்படி தமது குடும்ப வாழ்க்கையையே பரஸ்பர அன்பும் ஆதரவுமின்றி நகர்த்துகின்றார்கள் புலம்பெயர் மக்கள். இதனால், குடும்ப நிம்மதியையும், அன்பையும்கூட அவர்கள் இழந்துவிடுகிறார்கள்.

“ஒரு நாளைக்கு நாலு மணத்தியாலம் மட்டும் நித்திரை கொண்டு, நேரம், காலம் பார்க்காமல் பனிக்குளித்து உழைத்து அனுப்பும் பணம் இது என்ற உணர்வு அதை இங்கே கரைப்பவர்களுக்குத் தெரிகிறதா?” என்கிறார் ஒரு புலம்பெயர் வாசி.

இந்தப் பணத்தை அவமே கரைத்துவிடாமல், கல்வி உபகரணங்கள் வாங்கவோ, பிரயோசனமான முதலீடுகளைச் செய்யவோ அதைப் பயன்படுத்தினால், காலம் முழுக்க வெளிநாட்டு உழைப்பை நம்பியிராமல் சுயமாக உழைத்து, கௌரவமாக வாழ்ந்திடலாம்.

சிறியதொரு கைத்தொழில் முயற்சி, ஒரு கடையை நடத்தலாம். அல்லது ஒரு முச்சக்கரவண்டியை வாங்கி ஓடி உழைக்கலாம்.

1980 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சுமார் 5,000 கைத்தொழில் முயற்சிகளில் சுமார் 600 வரையில்தான் இன்று செயற்படுவதாக முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் அண்மையில் கூறியிருந்தார். இவ்வாறு நின்றுபோன ஆயிரக்கணக்கான கைத்தொழில்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்கு இந்த வெளிநாட்டுப் பணத்தை முதலீடு செய்தால், நாமும் வருமானமீட்டி, இன்னும் பலருக்கும் வேலைவாய்ப்புக்களை வழங்கி, படிப்படியாக ஒரு தொழிலதிபராகவே உயர்ந்துவிடலாம்.

உலகெங்கும் பரந்துவாழும் புலம்பெயர் தமிழர்களின் வருமானத்தையும் சேர்த்தால், இலங்கைத் தமிழர்களின் தலா வருமானம் ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் என்கின்றனர் பொருளியல் வல்லுநர்கள். இழந்துபோன எல்லாவற்றுக்கும் அப்பால், கிடைத்திருக்கும் இந்தப் ‘பொன்’னான வாய்ப்பை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து இளைஞர்களாகிய நாம் சரியாகப் பயன்படுத்தினால் பொருளாதார ரீதியாக நமது மண்ணை சிறப்பாக உயர்த்திடலாம்.

இவ்வாறு பொருளாதார ரீதியாக நாம் உயர்ந்துவிட்டோமென்றால், ஊருக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், நாமே வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு பரந்த உலக அறிவையும், அனுபவத்தையும் பெற்றுவிடலாம். இன்று வெளிநாட்டிலிருந்து வந்து நம்மை பார்க்கும் உறவுகளை அப்படியே ஒரு சுற்றுச் சென்று பார்த்துத் திரும்பவும் முடியும்.

எங்களுடைய பலத்தையும், வளத்தையும் சரியாகக் கணிக்கத் தெரியாதவர்கள்  இதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லக்கூடும். அவர்களைப் பொருட்படுத்தாமல், இப்போதே பணத்தை மீதப்படுத்தி, முதலீடு செய்து, உழைத்து வருமானமீட்டி, குடும்பத்தோடு வெளிநாட்டுச் சுற்றுலா ஒன்றுக்கு தாயாராகுங்கள்..!

என்ன? தயார்தானே?
நன்றி: யாழ்ப்பாணம் இன்று

கருத்துகள் இல்லை: