தமிழ் மிரர் : உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி.. அரச புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதானி சுரேஷ் சாலி கைது
கைது செய்யப்பட்ட சுரேஷ் சாலியை 72 மணித்தியால தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் (SDIG) சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கீழ் கைது செய்யப்பட்டதாகவும் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுரேஷ் சாலியிடமான எதிர்கால விசாரணைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் மூளையாக செயற்பட்டவர் பற்றிய தகவல்களை பொலிஸாரால் வெளிக்கொணர உதவும் என்றும் சஜீவ மெதவத்த குறிப்பிட்டார்.
சில மணி நேரங்களுக்குள் காரணத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறிய சஜீவ மெதவத்த, பொலிஸார் தங்கள் கடமைகளை முறையாகச் செய்துள்ளதாக கூறினார்.
இது தொடர்பாக நீண்ட விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இது தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ், ஒருவர் கைது செய்யப்படும்போது 3 நாட்கள் தடுத்து வைக்கப்படலாம் எனவும், பின்னர் பெறப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற முடியும் என்றும், இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, சட்ட பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.
அதற்கான சட்ட விதிகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியதோடு, சுரேஷ் சாலியின் கைது குறித்து பொதுமக்கள் அறிய வேண்டிய விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஜாலிய சேனாரத்ன இங்கு தெரிவித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) இன்று (25) கைது செய்யப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் 8 இடங்களில் மேற்கொண்ட 10 பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் மரணமடைந்திருந்தனர்.
Post Views: 18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக