புதன், 25 பிப்ரவரி, 2026

தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கு தலித்துகள் தான் காரணம்!

 Suresh Bhim  :  தலித்துகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பதற்கு யார் காரணம்?  இந்துக்களா?  இல்லை,
தலித்துகள் தான் காரணம்!
தம்மை இந்துக்கள் என நினைத்துக்கொண்டு, இந்துக்களோடு மல்லுக்கட்ட நினைப்பது தான் தலித்துகளை இந்துக்கள் அடக்கி வைக்க நினைப்பதற்கு காரணம். 
தான் ஒரு பெளத்தன், அதனால் தான் இந்து நம்மை ஒதுக்குகிறான் என்பதை உணர்ந்து ஒரு பெளத்தனாக வாழ ஆரம்பித்தால், தலித்துகள் தாழ்த்தப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
இந்துக்களின் பார்வையில் அவர்கள் வேற்று மதக்காரர்களாகிப்போய்விடுவார்கள். தலித்துகளாய் தெரிய மாட்டார்கள்.
எனவே, தலித்துகளாய் இருப்பதற்கு, தலித்துகளே காரணம்.
தீண்டாமை ஒரு மன நோய்! 
யாருக்கு மன நோய்? தீண்டாமையை கடைப்பிடிக்கும் சாதி இந்துக்களுக்கா?


இல்லை! தீண்டாமையை (எந்த சொரனையுமின்றி) 'அனுபவிக்கும்' தலித்துகளுக்குத்தான் மன நோய். தான் இந்து இல்லையென தெரிந்தும், (தெரியவில்லையென்றால் இந்நேரம் அண்ணல் அம்பேத்கர் புத்தகங்களை படித்து தெரிந்து கொண்ட பிறகும்), இந்துவாகவே தொடர முயற்சிப்பது ஒரு மன நோய் தானே? நம்மை உதாசீனப்படுத்துகிறார்கள் என தெரிந்த பிறகும், அவர்களிடமே மல்லுக்கு நிற்பதும் யாசிப்பதும் நம் குழந்தைகளுக்கு நாம் காட்டும் வழியாகுமா?
நம் வழி தனி வழி அல்லவா?
இந்து மதத்திலிருந்து வெளியேறுவது தான் இந்த மன நோய்க்கு தீர்வு.
கவுண்டர்கள், தேவர்கள், முதலியார்கள், நாயக்கர்கள், வன்னியர்கள், வேளாளர்கள் இவர்கள் எல்லோரும் உயர்ந்த சாதியினரா?
இவர்கள் எல்லோரும் இந்து மத சூத்திரர்கள்.(www.bcmbcmw.tn.gov.in)
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பவர்கள் எப்படி உயர்ந்த சாதி ஆக முடியும்? நியாயப்படி இந்து மதத்தின் கடைசி படிநிலையில் இருப்பவர்கள்.
அவர்கள் உயர்ந்த சாதியாக இருப்பதற்கு யார் காரணம்? தலித்துகள் தான் காரணம்.
ஒரு கோடு பெரிய கோடாய் தெரிவதற்கு பக்கத்திலுள்ள சின்ன கோடுதான் காரணம்.
இந்து மதத்திலிருந்து வெளியே வந்துவிட்டால் சூத்திரர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பது உணரப்படும். 
பட்டியலினத்திருந்து இந்து மதத்தின் படிநிலையில் நுழைய தற்போது முயற்சி செய்து கொண்டிருக்கும் தலித்துகள் கடைநிலை படியில் இருப்பார்கள்.
மற்ற தலித்துகள் இந்து தலித்துகளாகவே இருக்கும்பட்சத்தில், இங்கிருந்து மேலே போய் சூத்திரர்களோடு இணையும் தலித்துகள் உயர்ந்த சாதியாய் தெரிவார்கள். அதை நோக்கித்தான் அவர்களும் செல்கிறார்கள்.
ஆனால், கீழேயுள்ள இந்து தலித்துகள் எல்லோரும் இந்து மதத்திலிருந்து வெளியே வந்து விட்டால், சூத்திரர்களுக்கு கீழே யாரும் இல்லையென்றால், சூத்திரர்கள் தான் கடைசி படியில் இருப்பார்கள். 
அப்போது இங்கிருந்து சென்ற தலித்துகள் தான் நசுக்கப்படுவார்கள். இதனால் தான், தம்மை உயர்த்திக்காட்டிக்கொள்வதற்கு, தம்மை விட தாழ்ந்த நிலையில் ஒருவன் இருக்க வேண்டும் என நினைத்து, சூத்திர்ர்களோடு இணைய முற்படும் தலித்துகள் மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.
இவர்களை தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பதுதான் தலித்துகளுக்கு வேலையா?
தலித்துகள் இந்துக்கள் அல்ல என்பதை உணர்ந்து வெளியேறினால் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
சரியான மொழிபெயர்ப்புப்படி பார்த்தால், நாம் தற்போது உயர்ந்த சாதி என நினைத்துக்கொண்டிருக்கும் சூத்திர சாதிகள் எல்லாமே, ஆங்கிலத்தில் Backward Communities (BC) அதாவது பிற்படுத்தப்பட்ட அல்லது பின்தங்கிய வகுப்புகள். இவர்கள்தான் இந்து மதத்தில் பிற்பட்ட வகுப்பில் உள்ளவர்கள்.
மாறாக, எஸ். சி எனப்படுவதன் அர்த்தம் அட்டவணை பிரிவு அல்லது பட்டியல் பிரிவு என்பதுதான். அதாவது இந்து மதத்திலோ அல்லது வேறு எந்த மதத்திலோ இல்லாதவர்களின் பட்டியல். (அந்த சமயத்தில் 1930 களில், இவர்கள் பெளத்தர்கள் என அறியப்படவில்லை. தெரிந்திருந்தால் பெளத்தர்கள் என பட்டியல் உருவாகியிருக்கும். இதற்கு பின்னர்தான் அண்ணல் அம்பேத்கர் ஆராய்ச்சி செய்து, அதிகாரப்பூர்வமாக பட்டியலினத்தவர்கள் எல்லோரும் பெளத்தர்கள் என அறிவித்தார்)
இதில் 'தாழ்த்தப்பட்ட' என்கிற வார்த்தை எங்கிருந்து வந்தது?
பட்டியலினம் என்பது, ஆங்கிலேய அரசாங்க ஆணைப்படி, இந்துக்கள் அல்லாத, வேற்று மதங்களான சீக்கியம், கிருத்துவம் மற்றும் இஸ்லாமும் அல்லாதவர்களின் பட்டியல் தானே தவிர, தாழ்த்தப்பட்டவர்களின் பட்டியல் அல்ல.
எனவே, நாம் யார் என்பதை உணர்ந்து கொண்டு பட்டியலினத்தை பெளத்தர்கள் என அறிவிப்போம். அல்லது பட்டியலினத்தவர் எல்லோரும் பெளத்தர்களாக மதம் மாறி அறிவிப்போம்.
இதற்கு சம்மதம் உள்ளவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பெயரிலிருந்து விடுபடட்டும். சர்வதேச மதமான பெளத்தர்கள் என பெருமைப்படட்டும்.
சம்மதமில்லாதவர்கள் இந்து தாழ்த்தப்பட்டவராகவோ அல்லது ஒரு படி மேலே ஏறி இந்து பிற்படுத்தப்பட்டவராகவோ தொடரட்டும்.
ஆனால் ஒன்று, இனிமேல் இந்து தாழ்த்தப்பட்டவர்களை ஏறி மிதிக்க இங்கிருந்து அங்கே செல்லும்
தலித்துகளும் சேர்ந்துகொள்வார்கள் என நினைவிருக்கட்டும்.
அதே சமயத்தில், இங்கிருந்து மேலே செல்ல நினைக்கும் தலித்துகளே, உங்களுக்கு கீழே இருப்பார்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் மற்ற தலித்துகள் எல்லோரும் பெளத்தர்களாக மாறிவிட்டால், நீங்கள் மிதிக்க இங்கே யாரும் இருக்க மாட்டார்கள். எனவே மீண்டும் நீங்கள் தான் மிதிபட போகிறீர்கள் என்பதும் நினைவிருக்கட்டும்.
சாதி என்பதும் தீண்டாமை என்பதும் பிராமணர்களால் மிகவும் தந்திரமாக உருவாக்கப்பட்டு மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்று.
இதனை ஆராய்ந்து அறிவுப்பூர்வமாக அலசி தீர்வு கண்டவர் பாபாசாகேப் அம்பேத்கர். அவரை படிப்போம். யோசிப்போம். முடிவெடுப்போம்.

கருத்துகள் இல்லை: