புதன், 25 பிப்ரவரி, 2026

திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி! .. கூட்டணிக்கு அழைத்த விஜய்.. கிரிஷ் சோடங்கர் சொன்னது என்ன?

 மின்னம்பலம் - Mathi :  “அதிகாரப் பகிர்வை வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சி சொல்லும்? காங்கிரஸ் NGO அல்ல.. விஜய்யின் தவெக காங்கிரஸை கூட்டணிக்கு அழைத்துள்ளது” என்று அக்கட்சியின் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளரும் திமுகவுடனான பேச்சுவார்த்தை குழுவின் தலைவருமான கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
Indian Express நாளிதழுக்கு கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி:
கேள்வி: திமுக தனது கூட்டணிக் கட்சிகளைத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸிற்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு வந்துள்ளதா?
கிரிஷ் சோடங்கர்: இல்லை, திமுக இன்னும் எங்களை அழைக்கவில்லை. பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.



கேள்வி: காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் என்ன?

கிரிஷ் சோடங்கர்: பேச்சுவார்த்தை தொடங்கிய பின்னர் அதைத் தெரிவிக்கிறோம். நாங்கள் என்ன கேட்கிறோம்.. அதற்கு அவர்கள் என்ன தருகிறார்கள் என்பதை அப்போதுதான் எங்களால் துல்லியமாகத் தெரிவிக்க முடியும்.

கேள்வி: திமுகவுடன் அதிகாரப்பூர்வமாக பேசுவதற்கு முன்பே, நீங்கள் திமுக தலைவர் கனிமொழியைச் சந்தித்தீர்கள். அவருடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றனவா?

கிரிஷ் சோடங்கர்: சுமூகமான ஒருங்கிணைப்புக்காக இத்தகைய பேச்சுவார்த்தைகள் பொதுவாக நடப்பதுதான். எங்களுக்குச் சில எதிர்பார்ப்புகள் இருக்கலாம், அந்த எதிர்பார்ப்புகள் எந்த அளவிற்குச் செல்லலாம் என்பது குறித்து நாங்கள் விவாதிக்கலாம். அவர் எங்கள் தலைவர்களுடனும் தொடர்பில் இருக்கிறார், எங்கள் விருப்பங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம்.

கேள்வி: அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே டெல்லி, சென்னைக்கு தலைவர்கள் பயணங்கள் மேற்கொள்கின்றனர். உண்மையில் என்னதான் நடக்கிறது?

கிரிஷ் சோடங்கர்: கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்டாலினை கேசி வேணுகோபால் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அப்போது. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை; பேச்சுவார்த்தைகள் தொடரும்.

உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது குறித்து விவாதித்துள்ளனர். தொகுதிப் பங்கீடுதான் எங்களது முக்கிய நிபந்தனை. இரு கட்சிகளின் பேச்சுவார்த்தை குழுக்களும் சந்திக்கும் போது, அது குறித்துத் தெரிவிக்க முடியும்.

கேள்வி: உள்ளாட்சிகளில் அதிகாரப் பகிர்வுக்கு திமுக ஒப்புக் கொண்டதா?

கிரிஷ் சோடங்கர்: ஆமாம்.. முதல்வர் ஸ்டாலினை கேசி வேணுகோபால் சந்தித்த போது எந்த பிரச்சனையும் இல்லை.

கேள்வி: மாநில அளவில் அதிகாரப் பகிர்வை காங்கிரஸ் கோருகிறதா?

கிரிஷ் சோடங்கர்: அதிகாரத்தை வேண்டாம் என்று எந்தக் கட்சி சொல்லும்? நாங்கள் ஒரு அரசியல் கட்சியை நடத்துகிறோம், தொண்டு நிறுவனத்தை NGO அல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதன் சொந்த விருப்பங்கள் உண்டு. தமிழகத்தில் (ஆட்சியில் பங்கு) அத்தகைய கலாசாரம் இல்லை என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

கேள்வி: ஆட்சியில் பங்கு கோரிக்கையை கைவிட்டுவிட்டீர்களா? அல்லது இன்னமும் பேச்சுவார்த்தை மேஜையில் அந்த கோரிக்கையை வைத்திருக்கிறீர்களா?

கிரிஷ் சோடங்கர்: அரசியலில் நீங்கள் எதையுமே கைவிடுவதற்கு இல்லை.. இந்த விருப்பங்கள் அடிமட்டத்தில் இருந்து (தொண்டர்கள் நிலை) வருகின்றன. அதனை நாங்கள் கோரிக்கைகளாக முன்வைக்கிறோம்.

கேள்வி: விஜய்யின் தவெக பற்றி உங்கள் பார்வை என்ன?

கிரிஷ் சோடங்கர்: ஒவ்வொரு அரசியல் கட்சியும் சில லட்சியங்களுக்காக உருவாகின்றன. இதை ஏற்பதா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேர்தல்களே அதைத் தீர்மானிக்கும்.

40 வயதிற்குட்பட்டவர்களிடமும், குறிப்பாக இளைஞர்களிடமும் அவர்களுக்கு (விஜய் தவெகவுக்கு) பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன் தாக்கம்தான் எங்களுக்கு கவலையாக இருக்கிறது.

கேள்வி: விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் தொடர்பில் இருப்பதாக யூகங்கள் உள்ளன. தவெகவுடன் ) கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் ஏதேனும் முயற்சி செய்ததா?

கிரிஷ் சோடங்கர்: விஜய்யின் தவெக எங்களை வெளிப்படையாக அழைத்துள்ளது. எங்களுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸின் தொண்டர் பலத்தை விஜய் தவெக அங்கீகரித்துள்ளது என்பதுதான் இதன் அர்த்தம்.

கேள்வி: அதனால் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது?

கிரிஷ் சோடங்கர்: தற்போதைக்கு திமுக தலைமையுடன் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். திமுக இப்போதுதான் கூட்டணிக்கான குழுவை அமைத்துள்ளது; நாங்கள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: நீங்கள் விஜய்யுடன் தொடர்பில் இருப்பதை மறுக்கவில்லை?

கிரிஷ் சோடர்: அரசியலில் நீங்கள் அனைவரிடமும் பேசித்தான் ஆக வேண்டும்.. இது நிற்கப் போவது இல்லை. ஏன் பரம எதிரிகளிடம் கூட பேசித்தான் ஆக வேண்டும். நிகழ்ச்சிகளில் அதிமுக தலைவர்களை கூட நாங்கள் சந்திக்கிறோம்… ஹாய் சொல்லிக் கொள்கிறோம்.

கேள்வி: கூட்டணிப் பேச்சுவார்த்தையை திமுக தாமதப்படுத்துகிறது என காங்கிரஸ் அதிருப்தியில் இருக்கிறதா?

கிரிஷ் சோடங்கர்: அரசியலில் மகிழ்ச்சியோ அதிருப்தியோ எதுவும் இல்லை. நீங்கள் அரசியலில் இறங்கிவிட்டால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அவமானங்களையும் சந்திக்க வேண்டும்.

எங்களுடைய கட்சி 140 ஆண்டுகள் பழமையான கட்சி. நாங்கள் பல ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்துவிட்டோம்.. எங்களிடம் பொறுமை இருக்கிறது.. எங்களுக்கு பொறுமை இருக்கிறது.

கேள்வி: திமுகவுடனான பேச்சுவார்த்தை தாமதாகிறது என ஏற்கனவே நீங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தீர்களே?

கிரிஷ் சோடங்கர்: திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முன்னதாகவே முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அப்படி பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திருந்தால் தொகுதிகளை அடையாளம் காணவும், வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும், பிரசாரத்தைத் தொடங்கவும் எங்களுக்கு சுமார் 75 நாட்கள் அவகாசம் கிடைத்திருக்கும். கடைசி நிமிடத்தில் எங்களை ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ளி, கொடுப்பதை வாங்கிட்டு போகனும் அப்படிங்கிற கட்டாயத்திற்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை.

மகாராஷ்டிரா, பீகாரில் இது நடந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். முன்கூட்டியே தயாராகி தேர்தலைத் தகுந்த முறையில் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

கேள்வி: தமிழ்நாட்டின் அரசியல் கலாசாரம் மாறிவருவதாக கூறினீர்களே.. இதன் அர்த்தம் என்ன?

கிரிஷ் சோடங்கர்: தமிழ்நாட்டின் அரசியல் பாடத்திட்டம்- Political Syllabus என்பது மாறிக் கொண்டிருக்கிறது. யாரால் இதை வாசிக்கவும், அதற்கேற்ற வகையில் தங்களை மாற்றிக்கொள்ளவும் முடிகிறதோ, அவர்களே வெற்றி பெறுவார்கள்.

கேள்வி: ஆட்சியில் பங்கினை எதிர்பார்க்கிறது காங்கிரஸ்.. திமுகவுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

கிரிஷ் சோடங்கர்: காங்கிரஸின் உண்மையான வாக்கு வங்கி 12% முதல் 20% வரை உள்ளது. நாங்கள் சுமார் 22,000 கிராமக் குழுக்களை அமைத்துள்ளோம், இதை விரிவுபடுத்தி வருகிறோம்.

எங்களிடம் 63,000-க்கும் மேற்பட்ட பூத் முகவர்கள்- Booth-level agents உள்ளனர். ராகுல் காந்திக்கு தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய ஆதரவு இருப்பதாக சர்வே முடிவுகள் காட்டுகின்றன. காந்தி குடும்பத்துடன் ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது.. இங்கே காமராஜரின் பாரம்பரியம் என்பது இப்போதும் வலுவாகவே இருக்கிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சிக்குள் எழும் விமர்சனங்கள் மற்றும் அதிருப்தி குரல்கள் திமுகவுக்கு நெருக்கடி தரும் உத்தியா? இது காங்கிரஸ் இமேஜை பாதிக்காதா?

கிரிஷ் சோடங்கர்: எங்கள் கட்சி ஜனநாயக விழுமியங்களையும் அனைவரின் கருத்துக்களையும் மதிக்கிறது. கடந்த தேர்தலை நாங்கள் திமுகவுடன் இணைந்து சந்தித்ததால், எங்கள் மாநிலத் தலைவர் (கே. செல்வப்பெருந்தகை) திமுக தலைமையுடன் நல்லுறவைக் கொண்டிருப்பார். அதற்காக யாரும் தலைவரை விமர்சிக்கக் கூடாது.

நாங்கள் ஏன் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்? அந்த நெருக்கடி, திமுகவை பாதிக்கும் என நினைக்கிறீர்களா? நாங்கள் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கலாம்.. அவர்கள் அதற்கு ஆம் அல்லது இல்லை என பதில் சொல்லலாம்… அவ்வளவுதான்.. இது ஒன்றும் வாழ்வா? சாவா பிரச்சனை இல்லையே…

கேள்வி: தமிழ்நாட்டில் காங்கிரஸ் எப்போது தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்?

கிரிஷ் சோடங்கர்: தமிழ்நாட்டில் காங்கிரஸிற்கான நல்ல காலம் வரும். 58 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகாரம் இல்லாத நிலையிலும் வலிமையான தொண்டர் படை தமிழ்நாட்டில் காங்கிரஸிடம் உள்ளது. 234 தொகுதிகளுக்கும் சேர்த்து எங்களுக்கு சுமார் 5,000 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். அதுவே எங்களின் பலத்தைக் காட்டுகிறது. இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினர்.

கருத்துகள் இல்லை: