ஹிருனியுஸ் : உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பேசப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட விடயம் இன்று தற்காலிகமாகத் தணிந்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்ததை அடுத்தே, ஏற்பட்டிருந்த தீவிர நிலை தணிந்துள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ரணில் விக்ரமசிங்க, கடந்த வெள்ளிக்கிழமையன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, பிரதிவாதியின் நோய் நிலைமையைக் கருத்திற்கொண்டே இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி மதியம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் அவருக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த 22 ஆம் திகதி காலை அவர் அங்கு முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
தனது பதவிக் காலத்தில் தனது மனைவி, மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரச நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றமை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணையின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.
சுற்றுப் பயணத்தை முடித்து நாட்டுக்குத் திரும்புவதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.
இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜோன் ரோப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகத்தினூடாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரபூர்வமாக அழைப்பிதழை வழங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப் பயணத்தின்போது அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி பொதுமகன் ஒருவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவிடமும் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேராவிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள், கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.
இதன்போது, வி.எஸ்.கருணாரத்ன என்பவர் 2025 மார்ச் 17 ஆம் திகதி ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாகத் திலீப பீரிஸ் மன்றுரைத்தார்.
பின்னர் 2025 மே 23 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரால் காவல்துறைமா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 2023 செப்டம்பர் 13ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
பின்னர், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அவர் 166 இலட்சம் ரூபாய் வரையான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் திலீப பீரிஸ் குற்றம் சுமத்தினார்.
தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபின்னர், நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேகநபராகப் பெயரிட்டு கைது செய்ததாக மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் மன்றுரைத்தார்.
இந்தநிலையில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராகச் சாட்சியங்களை முன்வைப்பதாகத் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் விசாரணை முழுமையடையாததால், பிரதிவாதியைக் காவலில் வைக்குமாறும் மேலதிக மன்றாடியார் திலீப பீரிஸ் கோரிக்கை விடுத்தார்.
எனினும், பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தமது சேவை பெறுநரின் உடல்நிலை மற்றும் அவரது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு அவரைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரினார்.
இதற்காகப் பல்வேறு காரணங்களையும் பிரதிவாதியின் சட்டத்தரணி முன்வைத்தார்.
ரணில் விக்ரமசிங்க, இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன் அவருடைய மனைவி ஒரு புற்றுநோயாளி என்றும், அவரைக் கவனித்துக்கொள்ள பிரதிவாதியைத் தவிர வேறு யாரும் இல்லையென்றும் சுட்டிக்காட்டிப் பிணை வழங்குமாறும் கோரியிருந்தார்.
இந்தநிலையில் நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டதால் வழக்கு விசாரணையை நீதிவான் மாலை 5.30 அளவில் அரை மணித்தியாலத்திற்கு ஒத்திவைத்தார்.
இதனையடுத்து, இரவில் மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 22 ஆம் திகதி 10 மணியளவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, இன்று வரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதவான் அறிவித்தார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே அடிப்படை சட்டமாக உள்ளமையால், சந்தேகநபர் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பதை இவ்வாறான வழக்கில் கவனத்திற் கொள்ள முடியாது என்றும் நீதவான் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பின்போது பிணை வழங்குவதற்குப் பாரதூரமான காரணங்களே கவனத்திற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட நீதவான், பிரதிவாதியினது மனைவியின் உடல்நிலை இதற்கான காரணமாக அமையாது என்றும் சுட்டிக்காட்டினார்
அத்துடன் பிரதிவாதியின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்துக்கு இணங்க, அவர் லண்டன் பயணத்தின்போது பயன்படுத்திய நிதி அரச நிதியல்ல என்பதைப் பிரதிவாதி தரப்பு நிரூபிக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய நிலையில் இரவு 10 மணியளவில் நீதிவான் பிணைக் கோரிக்கையை நிராகரித்து அவருக்கான விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
இதன்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் காவல்துறை கலகத்தடுப்பு பிரிவினரும் நீதிமன்ற வளாகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ரணில் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி இரவு வெலிக்கடை சிறைச்சாலை விளக்கமறியலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், நோய் நிலைமைக் காரணமாகச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு காரணமாக முன்னாள் ஜனாதிபதியை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வந்த சிறைச்சாலை மருத்துவர்களும் அவருக்கு வீட்டு உணவை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தனர்.
இதனையடுத்து, சிறைச்சாலை மருத்துவமனையிலிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வயது காரணமாக அவருடைய இரத்த அழுத்தம் சற்று அதிகமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று 26ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது நிலை ஏற்படலாமெனக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்திருந்தார்.
அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் உள்ள குருதியில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
அத்துடன், அவரை மூன்று நாட்கள் கட்டாய ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்குச் சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஒருவேளை, அவ்வாறு சிகிச்சை அளிக்காவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்பட ஆபத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து, "அடக்குமுறைக்கு எதிராக" என்ற பெயரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்த போராட்டத்தின் காரணமாகப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
நீதிமன்ற வளாகத்திற்குச் செல்லும் வீதி பாதுகாப்புப் படையினரால் மூடப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினரின் வீதித் தடைகளை உடைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயற்சித்தமையால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இதற்கிடையில், காவல்துறை நீர்த்தாரை வாகனங்களுடன், கலகத் தடுப்பு காவல்துறை மற்றும் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சூழலுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் முன்னிலையாகி இருந்தார்.
சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியிருந்தனர்.
எனினும், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை மோசமடைந்ததால் நீதிமன்றத்தில் முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், ரணில் விக்ரமசிங்க, 'ஸூ ம்' தொழில்நுட்பம் ஊடாக இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
விசாரணையின்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விரிவான மருத்துவ அறிக்கையை அவரது சட்டத்தரணிகள் மன்றில் சமர்ப்பித்தனர்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, தனது கட்சிக்காரருக்கு இதயத்தின் நான்கு முக்கிய தமனிகளில் மூன்று அடைப்புக்கள் உள்ளதாகவும், இதய திசுக்கள் நுரையீரல் தொற்றுடன் நெக்ரோசிஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சந்தேக நபரின் உடல்நிலை குறித்து மருத்துவ விபரங்களையும் ஒரு இருதய நிபுணர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கணிசமான காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதய திசுக்களின் நெக்ரோசிஸ{ம் நுரையீரல் தொற்றும் இப்போது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், வெளித்தோற்றத்தால், இது போன்ற கடுமையான மருத்துவ நிலைமைகள் இருப்பதை ஒருவர் கவனிக்க முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
ஆகவே, வழக்கின் உண்மைகளையும் சந்தேக நபரின் மருத்துவ நிலையையும் மேற்கோள்காட்டி பிணை வழங்குமாறு, பிரதிவாதியின் சட்டத்தரணிகள் கோரினர்.
எனினும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ், நீதிமன்ற நடவடிக்கைகளைச் சுற்றியுள்ள சமீபத்திய நடத்தை குறித்து நீதிமன்றத்தில் கடுமையான கவலைகளையும் எழுப்பினார்.
அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவு, காணொளிப் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சந்தேக நபரான ரணில் விக்ரமசிங்க விசாரணைக் கூடத்தில் இருந்தபோது, அவரது புகைப்படங்களும் எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டதாக மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
உத்தரவு வழங்கப்பட்ட உடனேயே, வெளியிலிருந்து குழுவொன்று, பெலவத்தையிலிருந்து தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறி சத்தமிட்டதாக, மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இது போன்ற நடவடிக்கைகள் நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், எவரையும் அவமதிக்கவோ அல்லது நீதிமன்றத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தவோ அனுமதிக்க முடியாது என்றும் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
தாங்கள் அனுரவின் ஒப்பந்ததாரர்கள் அல்லது அடுத்த சட்டமா அதிபராக ஆசைப்படுபவர்கள் என்றும் சிலர் கூறியதாகவும் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சந்தேக நபர் ஒரு மணி நேரம் கூடத் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் பிரதிவாதியின் நோய் நிலைமை குறித்து முறையான மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்திருக்க வேண்டும் என்றும் மேலதிக மன்றாடியர் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
ஆகவே, ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ந்தும் ஆட்சேபிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ரணிலுக்கான அழைப்புப் பத்திரத்தின் சட்டபூர்வத் தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அத்துடன், தனது வாய்மொழி சமர்ப்பிப்புகளில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்கும் விதிவிலக்கான சூழ்நிலைகளைப் பிரதிவாதி தரப்பு முன்வைக்காவிட்டால், விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளைப் பரிசீலித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்லக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, சந்தேக நபரைத் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையின் போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியிலிருந்து நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதனால், இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
நித்தியானந்தன் உங்கள் தோழன் : கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26, 2025) நடைபெறவுள்ளது. நீதிமன்ற வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
நீதிமன்ற அதிகாரிகளின் தகவலின்படி, உடல்நலக் காரணங்களால் ரணில் விக்ரமசிங்க நேரில் ஆஜராக மாட்டார். தேவைப்பட்டால், அவர் ஜூம் (Zoom) மூலம் விசாரணையில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும், பார்வையாளர்களும் திரண்டுள்ளனர். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “அநுர வீட்டுக்குப் போ” என அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டு, அரசாங்கத்துக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தினார்.
நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஏற்படக்கூடிய அமைதியின்மையைத் தடுக்க, பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
கொழும்பு நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. நீதிபதி முன்னிலையில் வழக்கறிஞர்கள் தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக