திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அதிமுகவினர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கு! 10 ஆண்டுவரை சிறை!

 மின்னம்பலம் ஈஸ்வரி : ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்குவோர் மீது ஜாமீனில் வெளியே வராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி துறையூரில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நேற்று (ஆகஸ்ட் – 24) நடைபெற்றது.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை சுற்றி வளைத்த அதிமுக தொண்டர்கள் ஆம்புலன்ஸ் கதவை திறந்து பார்த்து நோயாளி இல்லை என்பதால் ஓட்டுநரை தாக்கியதாக செய்திகள் வெளியானது. மேலும் 8 மாத கர்ப்பிணியான ஆம்புலன்ஸ் உதவியாளரையும் அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது

இந்த தாக்குதலுக்கு பல தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் வாகனத்தை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜாமினில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,“108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம். அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கிறது.

108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்ட வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகளின் மீது வழக்கு

இந்நிலையில் திருச்சி துறையூரில் ஈபிஎஸ் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் தாக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக நகர செயலாளர் அமைதி பாலு, துறையூர் நகர் மன்ற உறுப்பினர் தீனதயாளன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது பணியாளர்களை சேவை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: