மாலை மலர் : டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இரவும் போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் மாணவர்களை வலுகட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். இதில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தடியடி நடத்தி 40 பேரை கைது செய்தனர்.
மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
ராம்லீலா மைதானத்தில் அமைதியாகப் போராடிய எஸ்.எஸ்.சி. தேர்வர்கள் மற்றும் ஆசியர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தடியடி, வெட்கக்கேடானது மட்டுமல்ல, கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளமாகும்.
இளைஞர்கள் தங்கள் உரிமைகளான வேலை வாய்ப்பு மற்றும் நீதியை மட்டுமே கோரினர். ஆனால், அவர்களுக்கு தடியடிதான் கிடைத்தது.
மோடி அரசுக்கு நாட்டின் இளைஞர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது.
முதலில் அவர்கள் வாக்குகளைத் திருடினார்கள். பின்னர், தேர்வுகள், வேலைகளைத் திருடுகிறார்கள். தொடர்ந்து, உங்கள் உரிமைகளையும் குரலையும் நசுக்குகிறார்கள்.
அவர்களுக்கு இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு தேவையில்லை, எனவே உங்கள் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அவர்கள் முன்னுரிமை அளிக்கமாட்டார்கள். தற்போது போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பயப்படாமல் உறுதியாக நின்று போராடுங்கள்.
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக