மின்னம்பலம் - Mathi : தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர் சரத்குமாரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான புகாரில் நடிகர் விஜய் மற்றும் அவரது 10 பவுன்சர்கள் மீது பெரம்பலூர் குன்னம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தவெக மாநாட்டு மேடைக்கு அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் வந்த போது, ரேம்ப் வாக் சென்றார்.
இதற்காக பிரத்யேகமாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. இம்மேடையில் நடிகர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு தொண்டர் ரேம்ப் வாக் மேடையில் ஏறி விஜய்யை நெருங்க முயன்றார். ஆனால் விஜய்யை சுற்றி இருந்த பவுன்சர்கள், அந்த தொண்டரை தடுத்து ரேம்ப் வாக் மேடையில் இருந்து தூக்கி கீழே வீசினர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாநாடு முடிந்த பின்னரும், விஜய் பவுன்சர்களால் தவெக தொண்டர் தூக்கி வீசப்படும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெரம்பலூரைச் சேர்ந்த தவெக தொண்டச்ர், சரத்குமார் தம்மையே பவுன்சர்கள் தூக்கி வீசியதாகவும் தமக்கு தவெக நிர்வாகிகள் ஆறுதல் கூட கூறவில்லை என்றும் விஜய்யின் பவுன்சர்கள் மீது பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் விஜய் மற்றும் அவரது 10 பவுன்சர்கள் மீது பெரம்பலூர் குன்னம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக