![]() |
![]() |
சுமதி விஜயகுமார் : மன நிறைவான நிகழ்வு. வந்திருந்தவர்களில் PATCA அமைப்பினரை தவிர ஓரிருவரை மட்டுமே தெரிந்திருந்தது.
ஆனாலும் யாருமே அந்நியமாய் படவில்லை. நிகழ்ச்சி துவங்க கொஞ்சம் காலதாமதம் ஆகியது.
பின்னால் நின்று, பேசிக் கொண்டிருந்துவிட்டு முன்னால் திரும்பினால்,
மூன்று சிறப்பு விருந்தினர்களும் வந்திருந்தார்கள்.
அவசரமாக இருக்கைக்கு திரும்புகையில், ஆஸ்திரேலியா தேசிய பாடலை தொடர்ந்து, தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தமிழ் தாய் வாழ்த்தை பள்ளிகளில் பாடிய பொழுது, அதன் அர்த்தம் புரிந்திருந்தாலும், அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டு பாடும் பொழுது மயிர்கூச்செரிப்பை தவிர்க்க முடியவில்லை.
பிரியா மிக அழகாக தொகுத்து வழங்க, நிகழ்ச்சி துவங்கியது.
சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு சென்றதும், அவர்களுக்கு பொன்னாடை (பொன்னாடை கிடைக்காத காரணத்தினால், மிக பெரிய துண்டு) போர்த்த ஒவ்வொருவராக அழைக்கப்பட்டோம்.
நான், அயலகதுறை வாரிய தலைவர் திரு கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு பொன்னாடை போர்த்திய பொழுதே 'உங்கள் நூலை வாசித்தேன்' என்றார்.
அதற்குள்ளாகவா என்று ஆச்சர்யம் தளும்ப கேட்ட பொழுது, 'முழுவதுமாக படிக்கவில்லை, சில பக்கங்களை மட்டுமே படித்தேன்' என்று கூறினார்.
அதற்கு முதல் நாளே தோழர் பொன்ராஜ் , 'ஊருக்கு வந்து இறங்கியதுமே உங்கள் நூலை கேட்டு வாங்கினார் ' என்று கூறி இருந்தார்.
அவ்வளவு வேலைகளுக்கு நடுவே படித்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணியிருந்த தருணத்தில் சில பக்கங்களை வாசித்தேன் என்று கூறியது, லேசான பெருமையுடன் பெரும் மகிழ்ச்சி அளித்தது.
அவரை தவிர அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் இருவர்.
வாரன் கிர்பி. லேபர் கட்சியின் New South Wales MP . ஹிந்து சனாதனத்தின் கோர முகம் பற்றி அறியாமல் இங்கிருக்கும் மறைமுக சங்கிகளின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவரின் கைகளில் 'சனாதனம் அறிவோம்' மற்றும் 'Hindu Nationalism ' நூலை கொடுத்து, புகைப்படங்கள் எடுத்ததில் உள்ளூர ஒரு நிறைவு. சிறப்பு விருந்தினார்களில் முதலில் உரையாடிய அவர், தமிழ்நாட்டு ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இரண்டு சிறப்பு விருந்தினர்களுக்கும் கார்த்திகேய சிவசேனாபதி , ஜல்லிக்கட்டு நூலை பரிசளித்தார்.
லீ ரியனொன். முன்னாள் New South Wales senator . இலங்கையில் ஈழ தமிழர்கள் படுகொலையை கண்டித்ததற்காக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்.
PATCA வின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கெடுத்து கொள்பவர். அவரின் உரை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல இந்திய ஜாதி அமைப்பை பற்றியே அமைந்தது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் என்னிடம் பேசிக் கொண்டிருந்தவரின் கண்கள் முழுவதும் என் மேல் ஆடையின் மேல் தான் இருந்தது.
'நிகழ்ச்சிக்கு மிக நன்றாக உடை உடுத்தி சென்றாயா ?'
என்று அலுவலகத்தில் ஒருவர் கேட்க 'இல்லை , tshirt மற்றும் skirt தான் அணிந்து கொண்டு சென்றேன்' என்ற போது ஆச்சர்யமாக பார்த்தார்.
'Break Caste. Break Class ' என்ற வாசகம் கொண்ட tshirt . 'உன் சட்டை அருமையாக இருக்கிறது.
எங்கு வாங்கினாய் ?' என்று லீ கேட்ட பொழுது , குளிருக்காக மேல் அங்கி அணிந்திருந்தேன்.
பின்னர் புழுக்கத்தின் காரணமாக அதை அகற்றிய பொழுது , சட்டையின் பின் புறம் இருந்த மார்க்ஸின் புகைப்படத்தை பார்த்து விட்டு மீண்டும் ஒருமுறை 'உன் சட்டையின் பின்புறம் மிக நன்றாக இருக்கிறது ' என்றார்.
கூடவே அழைத்து கொண்டு போய் எனக்கும் தனக்கும் அந்த thsirt வாங்கிக்கொடுத்து , அதன் பின்னர் ஐந்து முறை சண்டை போட்டு, தற்பொழுது பேசாமல் இருக்கும் நிக்கிலுக்கு நன்றி.
இருவரும் (லீயுடன்) ஒன்றாக நில்லுங்கள் நான் புகைப்படம் எடுக்கிறேன் என்று தானாக முன் வந்த பிரியாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி. எனது நூலை திறனாய்வு செய்த தோழர் கோகுலுக்கு நன்றி. முதலில் 6 நிமிடங்களும் பின்னர் நேரமின்மை காரணத்தினால் 3 நிமிடங்களாக குறைக்கப்பட்டு , தமிழில் தயார் செய்ததை ஆங்கிலத்தில் பேச கடைசி நிமிடத்தில் கேட்டுக்கொள்ள பட்டார்.
3 நிமிடங்களில் எவ்வளவு சிறப்பாக பேச முடியுமோ பேசி இருந்தார். தோழர் தினகரன் செல்லையாவின் 'சனாதனம் அறிவோம்' நூலை ஒரு பெண்ணை விட வேறு யார் சிறப்பாக திறனாய்வு செய்து விட முடியும். அந்த வகையில் தோழர் தேவிபாலா மிக சிறப்பாக திறனாய்வு செய்தார்.
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தோழர் தேவி பாலா, பொன்ராஜ் மற்றும் ஹாரூனுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்.
கார்த்திகேய சிவசேனாபதி ஊர் திரும்பும் வரையில் உடன் இருந்து அவரை கவனித்து கொண்டு, நிகழ்ச்சிகளையும் மேற்பார்வை பார்த்து மகிழ்நன் ஐயாவிற்கு நன்றி.
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் அமைந்தது திரு கார்த்திகேய சிவசேனாபதியின் உரை தான்.
உரையை இரண்டாக பிரித்து கொண்டார்.
முதல் பகுதி ஆங்கிலத்தில் (மற்ற இரண்டு சிறப்பு விருந்தினர்களும் புரிந்து கொள்ள என்பது அனைவரும் அறிந்ததே) உரையை துவங்கும் பொழுது, எதாவது ஒரு 5 நூலை கொடுங்கள் என்று கேட்டு வாங்கினார்.
அதை வைத்து ஜாதிய அடுக்குமுறையை மிக எளிமையாக, யாரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கினார்.
இரண்டாம் பகுதி, அயலக வாழ் தமிழர்களுக்கு. அதன் சாரம் :
திராவிட கட்சிகள் தமிழநாட்டின் தலை எழுத்தை எப்படி மாற்றி அமைத்தது.
அதில் தவறாமல் mgr மற்றும் ஜெயலலிதாவையும் இணைத்து கொண்டார்.
ராஜாஜியும் காமராஜரும் காங்கிரஸ்காரர்கள் தான் என்ற பொழுதும்,
ராஜாஜி சனாதனவாதியாகவும் காமராஜர், பெரியாரின் ஆதாரவாளராகவும் இருந்தது குறித்தும் விளக்கினார்.
அயலகத்தில் வாழும் தமிழர்கள், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை விட முந்தி கொண்டு , தமிழ்நாடு செய்திகளை அறிந்து கொள்வதை தவிர்த்து (முற்றிலுமாக இல்லை) , தாங்கள் வாழும் நாட்டின் செய்திகளை அறிந்து கொண்டு, ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சி முடிந்து என் உடன் வந்திருந்த தம்பி , கார்த்திகேய சிவசேனாபதியின் உரை மிக அருமையாக அரசியல் சார்பு இல்லாமல் இருந்தது என்றார்.
அதை அவரிடமே தெரிவித்த பொழுது, அந்த தம்பி anti dmk என்றேன். 'அதனால் என்ன சங்கியாக இல்லாமல் இருந்தால் போதும். பெரியாரை கொண்டு சேர்த்தால் போதும் . அவர்களே நம் பக்கம் வந்துவிடுவார்கள் ' என்றார்.
உடன் கவினும் வந்திருந்து நிகழ்ச்சி முழுவதையும் பார்த்தான்.
பொன்ராஜ் நிகழ்ச்சி எப்படி இருந்தது என்ற கேட்ட பொழுது, 'துவக்கத்தில் மிக நன்றாக இருந்தது
பின்னர் கொஞ்சம் சலிப்பு தட்டியது' என்றான். அது தமிழில் பேசிய நேரங்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. எப்போதும் அரசியலில் ஈடுபாடு கொண்டிருப்பதினால் நிகழ்ச்சி அவனுக்கு பிடித்ததில் ஆச்சர்யம் இல்லை. கார்த்திகேய சிவசேனாபதியின் உரையில் சொன்னது போல, நாளை அவனே கூட ஆட்சியில் பங்கு பெறலாம்.
மிக அழகான ஒரு மாலை நேரத்தை, PATCA உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தவர்கள் மேலும் அழகை கூட்டினார்கள் .
நிகழ்ச்சி பற்றிய செய்தி , கலைஞரின் முரசொலி முதல் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டதை பார்த்த பொழுது, ஒருசில வினாடிகள் உலகம் மறந்து போனது. இதை பார்க்க அப்பாவுடன் கலைஞரும் இருந்திருக்கலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக