ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

முத்துஐயன்கட்டு குளத்தில் இளைஞன் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட விவகாரம்

May be an image of 2 people

 Mahan Siva  :  முல்லைத்தீவு  முத்துஐயன்கட்டு குளத்தில் இளைஞன் ஒருவரது #சடலம் மீட்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
அந்த இளைஞனை  இராணுவத்தினரே அடித்துக் கொன்றுவிட்டு, குளத்தில் சடலமாக வீசியிருப்பார்கள்…. இல்லை… வீசினார்கள் என்ற முடிவுக்கு தமிழர்களில் பலர் வந்துவிட்டார்கள் போல தெரிகிறது!
இந்த விவகாரத்தில் 3 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ முகாமுக்கு 5 தமிழ் இளைஞர்கள் செல்கிறார்கள், அவர்களை இராணுவம் தாக்கியது, ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார், 3 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்… அப்படியானால் அந்த இளைஞனை இராணுவத்தினரே அடித்துக் கொன்றிருக்குமென கருதலாமல்லவா?

அப்படியும் கருதலாம்தான். ஆனால், அப்படி நிகழ்ந்திருப்பதற்கு குறைந்தளவான வாய்ப்பேயிருப்பதாகத்தான் முதற்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படியானால், அங்கு நிகழ்ந்தது என்ன?
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான முத்துஐயன்கட்டு குளத்தை சூழ்ந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி பற்றி தமிழ்பக்கம் திரட்டிய தகவல்களின் தொகுப்பு இதோ.
முத்துஐயன்கட்டு குளத்தின் இடதுகரையில், அலைகரையில் பெரிய இராணுவ முகாமொன்று அமைந்துள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் அமைக்கப்பட்ட இந்த முகாமில் சுமார் 1,000 வரையான இராணுவத்தினர் தங்கியிருந்துள்ளனர். பின்னர் இந்த எண்ணிக்கை குறைந்து மாறுபட்ட எண்ணிக்கையில் தங்கியிருந்துள்ளனர். அந்த பிரதேசத்தில் உள்ள பெரிய இராணுவ முகாம்களில் ஒன்று இது.
வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென தாம் கருதும் பட்சத்தில் பல முகாம்களை அண்மைக்காலத்தில் இராணுவத்தினர் அகற்றி வருகிறார்கள். இதற்காக இராணுவம் தமிழ் மக்களின் காணிகளை பிடித்து வைத்திருக்கவில்லையென அர்த்தமல்ல. அவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முகாம்களை அகற்றி வருகிறார்கள் என்ற செய்தி தமிழர்கள் மத்தியில் பேசப்படுவதில்லை.
முத்துஐயன்கட்டு இடதுகரை இராணுவ முகாமும் அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த இராணுவத்தினர் வேறிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு காவல் கடமைக்காக ஓரிரு இராணுவத்தினரே தங்கியிருந்துள்ளனர்.
இந்த இடத்தில் கசப்பான இன்னொரு யதார்த்தத்தையும் சொல்ல வேண்டும். இந்த இராணுவ முகாமுக்கு அண்மையான பகுதியில் சில பல சமூக விரோத செயல்கள் கொடிகட்டி பறக்கிறது. இதை இராணுவத்தினர் செய்வதில்லை. “இராணுவத்தினர் தமிழ் இளைஞனை அடித்துக்கொன்றுவிட்டு முத்துஐயன்கட்டு குளத்தில் வீசிவிட்டார்கள்“ என தமிழர்கள் பலர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் இருக்கையில், அவர்களின் உணர்ச்சி பிரவாகத்திற்கு தடையாக சிலவற்றை சொல்லி, அவர்களின் “பீலிங்ஸை“ குறைத்த குற்றம் நமக்கெதற்கு என்றாலும், நடந்த சம்பவத்தின் பின்னணியை வாசகர்கள் முழுமையாக புரிந்துகொள்ள அவசியம் என்பதால் குறிப்பிட்டோம்.
இராணுவ முகாமுக்குள் தொடர்ந்து பொருட்கள் திருட்டு போனதால், அங்கு சுமார் 20 இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் முகாம் பொருட்களை, கட்டுமானங்களை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு பொறுப்பாக மேஜர் தர அதிகாரியொருவர் இருந்தார்.
வடக்கில் பொருளாதாரரீதியில் பின்தங்கிய பல கிராமங்களில் அமைந்துள்ள- அதிலும் ஒதுக்குப்புறமான பகுதிகளில்- இராணுவ முகாம்களில் இருக்கும் இராணுவத்தினருக்கும், அருகிலுள்ள கிராமத்திலுள்ள தமிழர்களுக்கும் ஒரு வித்தியாசமான உறவிருக்கிறது. அந்த கிராமத்திலிருந்து இராணுவத்தினர் தமக்கு தேவையானதை பெறுகிறார்கள். இராணுவத்திடமிருந்து கிராமத்தவர்கள் தேவையானதை பெறுகிறார்கள். “சேர், சேர்“ என இராணுவத்தினரை அழைத்தபடி, வளையவரும் இளைஞர்கள் அங்கிருப்பார்கள். வடக்கில் இப்படியான பல இடங்கள் உள்ளன.
அந்த கிராமங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இருந்தால், அதற்கும் சில இராணுவத்தினர் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். சில இராணுவத்தினருக்கு லௌகீக தொடர்புகளும் இருக்கும். வேறுபல தொடர்புகளும் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும்- இது இராணுவத்துக்கும் தமிழர்களுக்குமான தொடர்பல்ல. அந்த இராணுவ முகாம்களில் உள்ள சில சிப்பாய்களுக்கும், உள்ளூரிலுள்ள சில ஆண், பெண்களுக்குமான தொடர்பு மட்டுமே. அமைப்பு ரீதியானதல்ல. இலங்கை தமிழரசு கட்சியின் கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினராக இருந்து, தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டவரான வட்டிக்கடைக்காரன் என அழைக்கப்படுபவரும் யுத்தம் முடிந்த பின்னர், இராணுவத்துடன் இணைந்து புலிகளின் முகாம்களில் இருந்த இரும்புகளையும் சேகரித்து விற்று பெரும் பணம் சேர்த்தார். அவர் சற்று பண வசதியுடையவரென்பதால், அதை ரிப்ரொப் ஆக செய்தார். அன்றாடம் காய்ச்சிகள் சிறியளவில் செய்கிறார்கள்.
இதை அப்படியே, முத்துஐயன்கட்டு இடதுகரை சம்பவத்தின் பின்னணியாக பொருத்திப் பாருங்கள்.
இடதுகரை இராணுவ முகாமிலிருந்த, இருக்கின்ற சில சிப்பாய்கள் அயல் கிராமத்திலுள்ள சில ஆண், பெண்களுடன் நல்ல தொடர்பில், உறவில் இருந்தனர்.
அப்படியான தொடர்பொன்றே, இப்போது சர்ச்சையாகியுள்ளது.
இடதுகரை, ஜீவநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அண்மைக்காலமாக இராணுவ முகாமிலிருந்து தகரங்கள், இரும்புகளை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். முகாமிலுள்ள ஓரிரு இராணுவத்தினர் அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
#கள்ளு- மரணம்
தற்போது இளைஞன் உயிரிழந்த விவகாரம்- கள்ளில் ஆரம்பித்தது என்பதே கசப்பான உண்மையாகும்.
கடந்த 7ஆம் திகதி, அந்த முகாமிலுள்ள இராணுவச்சிப்பாய் ஒருவர் ஜீவநகரை சேர்ந்த இளைஞன் ஒருவரிடம் ரூ.1,000 பணத்தை கொடுத்து, கள்ளு (கள்ளு அல்லது வேறு உள்ளூர் மதுபானமாக இருக்கலாம்) வாங்கி வருமாறு கேட்டுள்ளார். பணத்தை வாங்கியவர்தான், தற்போது உயிரிழந்த எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் (வயது 32).
வீதியால் சென்ற கபில்ராஜை இராணுவச்சிப்பாய் அழைத்து, கள்ளு வாங்கிவருமாறு கட்டளையிடவில்லை. அவர்களுக்குள் இந்தவிதமான தொடர்பு சிலபல காலங்களாக இருந்துள்ளது. கபில்ராஜ் #யாழ்ப்பாணம், #கொக்குவில் பகுதியை சேர்ந்தவர். அவர் ஏதோ அலுவலாக ஜீவநகர் பகுதிக்கு சென்ற சமயத்தில் அங்குள்ள சிறு பெண்ணொருவருடன் ஓரிரு வருடங்கள் காதலாகி திருமணமாகி, இப்போது 7 மாத குழந்தையின் தந்தை. 20 வயதுகளுக்குட்பட்ட அந்த பெண் இப்பொழுது கைக்குழந்தையுடன் அந்தரிப்பதாக கிராமத்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.
 

கபில்ராஜின் சகோதரர் ஒருவரும் சில வருடங்களின் முன்னர்  கொக்குவில்-  தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவச்சிப்பாயிடம் பணம் வாங்கிய கபில்ராஜினால், அன்றைய தினம் ஏதோ காரணத்தினால் கள்ளை கொண்டு செல்ல முடியவில்லை. இராணுவச்சிப்பாய் பலமுறை தொலைபேசியில் அழைத்தார். கபில்ராஜ் பதிலளிக்கவில்லை. விடாக்கண்டனான சிப்பாய் சலிக்காமல் அழைத்தார். கபில்ராஜ் தொலைபேசியை தொடவேயில்லை.
இன்னொரு சிப்பாயின் தொலைபேசியிலிருந்து அந்த சிப்பாய் அழைத்தார். பதிலில்லை.
மிக நீண்டநேரத்தின் பின், இரவு 7.30 மணியளவில் இன்னொரு சிப்பாயின் தொலைபேசியிலிருந்து இராணுவச்சிப்பாய், கபில்ராஜை அழைத்தார். கபில்ராஜ் சிக்கினார். 

ஏன் கள்ளுக்கொண்டு வரவில்லையென இருவரும் பேசிய பின்னர், சரி இன்று கள்ளு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, முகாமுக்கு வந்தால் தகரம் எடுக்கலாம் என சிப்பாய் கூறியுள்ளார்.
இதை நம்பி கபில்ராஜ் மற்றும் சிலர் பின்பகுதியால் முகாமுக்குள் சென்றுள்ளனர்.
 

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்- அந்த முகாமிலிருக்கும் பொருட்களை இரகசியமாக எடுத்துச் செல்லுங்கள் என கபில்ராஜ் குழுவுடன் இலங்கை இராணுவம் கூறவில்லை. இராணுவத்திலிருந்த ஒரு சிப்பாய் கூறினார். அவரும் ஓரிருவருமே இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள். முகாமிலிருந்த ஏனையவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை.
 

கபில்ராஜ் குழுவினர் முகாமுக்குள் நுழைந்து தகரம் எடுத்த போது, அப்போது காவல் கடமையிலிருந்தை சிப்பாய் ஒருவர் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார். இதுதான் கபில்ராஜ் குழுவினர் இராணுவத்திடம் சிக்கிய பின்னணி.
அந்த சந்தர்ப்பத்தில்- முகாமுக்குள் நுழைந்த திருடர்களை பிடித்து விட்டதாகத்தான் சிப்பாய்கள் கருதியிருக்க வேண்டும். சிப்பாய்கள் அந்த குழுவினரை தாக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் இளைஞர்கள் இராணுவத்திடமிருந்து தப்பியோடினர்.
 

கபில்ராஜ் முகாமின் பின் பகுதியால் ஓடினார். அந்த கிராமத்தில் வசிப்பவர்கள், அந்த முகாமின்ற்கு அடிக்கடி சென்று வருபவர்கள் என்ற அடிப்படையில்- தப்பியோடிய அனைவருமே அந்த பிரதேசத்தின் அமைப்பை நன்கறிந்தவர்கள்தான். கபில்ராஜூம் மற்றொரு இளைஞனும் குளத்தின் இடதுகரை அலைகரை பகுதிக்கு ஓடி, குளத்தில் மறைந்திருந்ததாக விசாரணையில் ஈடுபட்ட பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. கபில்ராஜூக்கு நீச்சல் தெரியாது. மற்றைய இளைஞனுக்கு நீச்சல் தெரியும். “நான் குளத்திற்குள் மறைந்திருந்துவிட்டு பின்னர் வருவதாக வீட்டில் சொல்லிவிடு“ என மற்றைய இளைஞனிடம் அவர் கூறியதாகவும், நீச்சல் தெரிந்த இளைஞன் நீந்தி வீடு சென்று தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டனர்.
இதனடிப்படையிலேயே மறுநாளான 8ஆம் திகதி கிராம மக்கள் குளத்தில் தேடுதல் நடத்தினர்.
மறுநாள் (ஓகஸ்ட் 9) அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
 

கபில்ராஜின் உடல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலையில் பிரேதப்பரிசோதனை நடக்கவுள்ளது. அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான தடயங்கள் நிச்சயம் காணப்படும். ஆனால் அதுதான் மரணத்திற்கான காரணமா, அல்லது கபில்ராஜ் நீரில் மூழ்கி இறந்தாரா, ஏன் நீரில் மூழ்கினார், யாராவது நீரில் அழுத்தினார்கள் அல்லது அவர் மதுபானம் ஏதேனும் அருந்தியதால் சுதாகரிக்க முடியாமல் போனதா போன்ற சாத்தியங்கள் பற்றிய தெளிவு பெரும்பாலும் இன்று கிடைக்கலாம். ஆனால், பிரேதபரிசோதனை சவாலாக இருக்குமென்றும், உடல் பழுதடைந்துள்ளதென்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று (10) காலையில் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.
 

கபில்ராஜ் காணாமல் போனதை தொடர்ந்து இராணுவத்துக்கும் பிரதேசவாசிகளுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டது. சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, இராணுவத்தினரை கைது செய்ய பொலிசார் முயன்றனர். முதலில் இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை. பின்னர், பொலிசார் விடாப்பிடியாக நிற்க, ஒரு சிப்பாயை கையளித்தனர்.
 

எனினும், இராணுவத்தலைமையின் உத்தரவின் பேரில், இராணுவத்தினர் ஒத்துழைக்க ஆரம்பித்தனர். முதலில 6 பேர் பொலிசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், அந்த முகாமின் பொறுப்பதிகாரியான மேஜர், வாயில் காவல் கடமையில் இருந்தவர் உள்ளிட்ட 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்திய 3 தொலைபேசிகளுக்குமுரிய சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், கள்ளுக்கு 1000 ரூபா கொடுத்தவர் தவிர்ந்த மற்றைய இரண்டு சிப்பாய்களும், தமக்கு எதுவும் தெரியாது என்றும்- தமது தொலைபேசியை அந்த சிப்பாய் வாங்கி ஒரு அழைப்பேற்படுத்தினார் என்றும் விசாரணையில் தெரிவித்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.
 

அந்த இளைஞர்களை தாக்கிய இராணுவத்தினர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அதை கைதான இராணுவத்தினரும் வெளிப்படுத்தவில்லை. தம்மை தாக்கிய இராணுவத்தினர் யார் என தப்பித்த இளைஞர்களும் வெளிப்படுத்தவில்லை. இரவில் சம்பவம் நடந்ததால் அவர்களால் அடையாளம் காண முடியாமலும் போயிருக்கலாம்.
 

இராணுவத்தின் தாக்குதலின் பின் தப்பியோடும் போது, முகாம் முள்வேலியில் சிக்கி காயமடைந்த ஒரு இளைஞன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் தற்போதுள்ள சந்தேகம்- தகரம் எடுக்க சென்ற இளைஞர்கள் இராணுவத்திடம் சிக்கியது தற்செயலானதா அல்லது உரிய நேரத்தில் கள்ளு வாங்கிச் செல்லாததால் கோபமடைந்த சிப்பாய், வேறு சிப்பாய்களின் காவல் கடமை நேரத்தில் அழைத்து சிக்க வைத்தாரா என்பதே.
 

மற்றும்படி, தற்போது சமூகவலைத்தளங்களில் குறிப்பிடப்படுவதை போல, செம்மணியில் தொடங்கி முத்துஐயன்கட்டு வரை…. மாறாத இராணுவம் போன்ற வசனங்கள் உணர்ச்சியூட்டலாமே தவிர, உண்மையை சொல்லாது. யுத்தகாலத்தில் இராணுவம் தமிழர்களை கொன்றார்கள் என்பது உண்மைதான். அது யுத்தமனநிலை. யுத்தம் இல்லாத இன்றைய காலத்தில் இராணுவம் அப்படியே இருக்குமென்பது அறிவியல்பூர்வமற்றது. தற்போது கைதான சிப்பாய்கள் யுத்தம் முடிந்த பின் படையில் சேர்ந்த, இளையவர்கள். யுத்தகால மனநிலையில் இராணுவம் இருந்திருப்பின், 

அத்துமீறி முகாமுக்குள் நுழைந்தார்கள் என கூறி, கண்ட இடத்திலேயே அந்த இளைஞர்களை சுட்டுக்கொன்றிருக்கலாம்.
தவிரவும், அடித்துக் கொன்றுவிட்டு நீரில் வீசினால் மறுநாள் சடலம் மிதக்குமென்பதை கூட சிப்பாய்கள் அறியாமலிருப்பார்கள் என தமிழர்கள் நினைக்கிறார்களா?
ஆக, ஏதோ ஒரு விபத்தோ, சம்பவமோ நடந்துள்ளது… நடந்த சம்பவத்தை அரசியலாக அணுகாமல், குற்றமாக அணுகினால் மட்டுமே உண்மையை கண்டறியலாம்.
-தமிழ்பக்கம் இணையம்-  

கருத்துகள் இல்லை: