ராதா மனோகர் : இந்த தமிழ் பாடல் ஒரு காலத்தில் தமிழ் மக்களை மட்டுமல்ல தெலுங்கு மலையாளம் கன்னட மக்களையும் கட்டி போட்டது!
தமிழுக்கு அழகு சேர்த்த இசை மன்னர்களும் காவிய நாயகர்களும் வாழ்ந்த காலம் அது!
ஏனோ இது கடந்த பல வருடங்களாக பொது வெளியில் கொஞ்சம் காணமல் போய்விட்டது.
யார் பையன் என்ற படத்தில் இடம்பெற்ற சுயநலம் பெரிதா பொதுநலம் பெரிதா என்ற இந்த பாடல் இரண்டு நாட்களாக என்னை தூங்க விடாமல் செய்கிறது.
இப்போது மீள் பதிவு செய்யும் போதுகூட என்னை என்னவோ செய்கிறது இப்பாடல்.
ஒரு யுகத்துக்கு இப்படி ஒரு பாடல்தான் உருவாக முடியும் என்று கூறக்கூடிய ஒரு காந்தர்வ காவியம் இந்த பாடல் என்று கூறினால் மிகையாகாது.
இதை எழுதியவர் அ.மருதகாசி.அவர்கள்.
இசை அமைத்தவர் பெரியவர் தக்ஷிணாமூர்த்தி அவர்கள்
இதை பாடியிருப்பவர் கண்டசாலா.
அந்த காலத்து பாடல்களில் இசை அமைப்பாளரின் மென்மையும்
பாடல் வரிகளின் கருத்தும் பாடியவரின் குரல்வளமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டு ஒட்டி உறவாடும்.
இசையமைத்த தக்ஷணாமூர்த்தி அவர்கள்,
அந்த காலத்திலேயே எவ்வளவு நேர்த்தியாக மேல்நாட்டு இசையின் வாசனையை அங்கங்கே தூவி அசல் கர்நாடக இசையில் படு வேகமாக அதே சமயம் சோகமும் அவலமும் கொப்பளிக்கும் உணர்ச்சி குழம்பை அள்ளி நீர்வீழ்ச்சி போல கொட்டியுள்ளார்.
அந்த கதையின் காட்சி அப்படி ஒரு அவலம் நிறைந்தது.
ஒரு சிறுவனை ஆற்றில் தள்ளி விட்டு கொலை செய்யும் நோக்கத்தோடு கதாநாயகன் ஜெமினி கணேசன் காரில் போகும் காட்சி. எவ்வளவு சிக்கலான காட்சி?
கதாநாயகனோ ஒரு கொடியவன் அல்ல.
ஆனாலும் அவன் அந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடிக்கும் முடிவுக்கு வந்து விடுகிறான் .
மிகவும் நுட்பமான சிக்கலான காட்சி .
அதைவிட அதில் வெளிப்பட வேண்டிய உணர்சிகள் வார்த்தைகளால் வர்ணித்து விடமுடியாதவை .
அப்பேர்ப்பட்ட கடுமையான சவால் நிறைந்த காட்சியை இந்த மூவரும் எப்படி கரை சேர்த்திருக்கிறார்கள் என்று எண்ணும் போது வார்த்தைகளே வரவில்லை.
எந்தரு மாகானுபாவு அந்தரிக்கி வந்தனமு என்று தியாகராஜா சுவாமிகள் இது போன்ற உன்னத மேதைகளைதான் பாடியிருக்கவேண்டும்.
வசனங்களால் விளக்கி முடியாத அவலம்,
இந்த அவலத்தை ஜெமினியின் மன கொந்தளிப்பை தக்ஷினாமூர்த்த்தி அவர்கள் இசையில் வார்த்துள்ளார்
இதை பாடிய திரு கண்டசாலாவின் குரலோ அப்படியே அந்த கதாயகனின் உடலுக்குள் கூடு விட்டு கூடு பாய்ந்து நின்று கொண்டு பாடுவது போல் பாடியுள்ளார் .
என்ன ஒரு பாவம் ... ஒருவரின் unconscious மைண்டுக்குள் ஊடுருவி நின்று கொண்டு பாடும் ஆற்றல் இந்த் கண்டசாலா சாருக்கு எப்படித்தான் கிடைத்ததோ தெரியவில்லை.
ரொம்பவும் அழவைக்கிறார்.
இவர்களை எல்லாம் தூக்கி அடிக்கிறார் பாடலாசிரியர் மருதகாசி அவர்கள் ..
ஒவ்வொரு சொல்லும் மிக சாதரணமாக நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சலித்து போன சொற்கள்தான் .
ஆனால் இந்த பாடலில் அவற்றின் அர்த்தங்கள் அத்தனையும் ஒவ்வொரு டைனமைட் போல மனதை நொறுக்குகிறது.
எப்பேர்ப்பட்ட மகா கவிஞனை காலம் சரியாக கவனிக்க வில்லை .
இந்த மேதைக்கு தமிழ் உலக வரலாற்றில் உரிய கௌரவம் இன்னும் வழங்க படவில்லை என்றே கருதுகிறேன் .
மருதகாசி அவர்கள் சில பாடல்களில் அப்படியே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை விழுங்கி விட்டார் போல தோன்றுகிறது.
சுயநலம் பெரிதா பொதுநலம் பெரிதா இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
மதி மயக்கத்திலே வரும் தாயகத்திலே மனம் தடுமாறி தவிக்கும் மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
துன்பம் இல்லாமலே இன்பம் உண்டாகுமா அன்பு இல்லாத இதயம் இதயமா ?
நல்ல தேமாங்கனி என்றும் வேம்பாகுமா ? இந்த சொல்லின் உண்மை தன்மை எண்ணி பாரடா
நாம் தேடாமலே வந்த செல்வம் என்றால் அதை தெருமீது வீணே எறிவதா?
தென்றல புயலாவதா உள்ளம் தீயாவதா?
பிற்சேர்க்கை .. இப்படம் ஸ்ரீ தரின் கதை வசனத்தில் டி ஆர் ரகுனாந்தின் இயக்கத்தில் உருவானது. இதில் பையனாக நடித்தவர் டெய்சி இராணி என்ற வடநாட்டு சிறுமி .இவரின் மகள்தான் பின்பு ஹிந்தி படவுலகை கலக்கிய பிரபல நடிகை அருணா இராணி ..
மீள்பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக