ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 117 ஆவது பிறந்த நாள் 14.04.1907 -

May be an image of 1 person

Soma Ilangovan  :   " கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதே"
பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் 117 ஆவது பிறந்த நாள் 14.04.1907 - 17.09.1979 இவர் ராஜகோபாலன் நாயுடு - ராஜம்மாள் இணையர்களுக்கு 2 வது மகனாக சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை ரஷ்ய நாட்டில் இராணுவவீரராகப் பணியாற்றி வந்தபோது உருசிய எல்லையில் பஸ்ஸோவியா  என்னுமிடத்தில் போரில் வீர மரணமடைந்தார்.
தாயின் கண்டிப்பிலே வளர்ந்த ராதாவுக்கு தாயின் கண்டிப்பு பிடிக்காமல் தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் பாரம் சுமக்கும் பணியாளராக வேலை செய்து வந்தார்.


அப்போது ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியின் உரிமையாளர் ரங்கநாதன் அவர்கள் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ராதா மூன்று கனமான சூட்கேஸ்களை ஒரே நேரத்தில் தூக்கி கொண்டு செல்லும் அழகை பார்த்து,
 தனது நாடக கம்பெனியில் சேரும்படி ராதாவிடம் கேட்க ராதாவும் அந்த நாட கம்பெனியில் இணைந்தார். அங்கு சிறிய  வேடங்களில் நடித்துக்கொண்டு ஓய்வு நேரங்களில் பல வேலைகளை கற்றுக்கொண்டார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.
வீட்டினர் வந்து அழைத்ததால் வீட்டிற்கு திரும்பிய ராதா பிறகு உடன்பிறந்தோரையும் அழைத்துக்கொண்டு மைசூர் சென்று நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

அவ்விடத்தில் சுயமரியாதையோடு நடத்தப்படாததால் அங்கிருந்து வெளியேறி சாமண்ணா ஐயர் கம்பெயில் சேர்ந்தார்.
அங்கு படிக்காதவர்களுக்கு மரியாதை இல்லாததால் ஜெகந்நாதய்யர் கம்பெனியில் சேர்ந்தார் ராதா. யாருக்கும் பயப்படாத மற்றும் கட்டுப்பாட்டிற்குள் அடங்காத ராதாவவின் தன்மை மற்ற நடிகர்களுக்கு அவர் பால் அச்சத்தையே தோற்றுவித்தது.

ஆனால் அவரது நடிப்பு, கற்பனை வளம் ஆகியன மக்களிடம் செல்வாக்கை ஏற்படுத்தியிருந்ததால் அவரை தவிர்கவும் முடியவில்லை.
நாடகத் துறையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்த ராதாவிற்கு ஈரோட்டில் நாடகம் நடந்த போது பெரியாரும் அவரது குடியரசு இதழும் அறிமுகம் ஆனது .

 மரபுகளின் புனிதத்தன்மை குறித்து ஒரு ஏளனப்பார்வை அவரிடம் இயல்பாகவே நிலவி வந்திருக்கிறது.
1942 இல் ராதா நடித்த "இழந்த காதல்" எனும் நாடகம் நிலவுடமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது.

சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த 'போர்வாள்' நாடகம் மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது.

மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமெனக் கோருகிறது .
இக்கருத்து பிரிட்டிஷாருக்கு எதிரானது என்பதால் தடை செய்தது.

1947 ல் கலைஞர் எழுதிய 'தூக்குமேடை' பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், ஆகியவற்றை அம்பலப்படுத்தியது.

ராதாவின் திராவிட மறுமலர்ச்சி நாடக சபாவில் நாடகம் துவங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்திற்குப் பதில் இன உணர்ச்சி பாடல்கள்,
பெரியார் தொண்டு பற்றிய நிழற்படங்கள்,
'உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்' என்ற வாசகத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் கையில் சுத்தியல் அரிவாள் பிடித்தபடியுள்ள படத்துடன் திரையும் இருக்கும்.

பொன்மலை இரயில்வே தொழிலாளர் போராட்டமும்,
அதைத் தொடர்ந்து வந்த போலீஸ் துப்பாக்கிச்சூடும்
அரசின் அடக்குமுறையும் ராதாவை மிரட்ட முடியவில்லை.

ரத்தக்கண்ணீர் ஆரம்பத்தில் நாடகமாகவும் 1954 நவம்பரில் திரைப்படமாகவும் வெளிவந்தது.
ராதா என்ற ஆளுமையின் தாக்கம் அவர் ஏற்று நடித்த எல்லாப் பாத்திரங்களின் மீதும் பதிந்திருந்தது. அதுதான் வில்லன் என்ற பாத்திரத்தையும் தாண்டி சீர்திருத்தக் கருத்துகளையும், பகுத்தறி கருத்துகளையும் நாடகம் மற்றும் திரையுலகின் மூலம் ராதாவின் பகுத்தறிவு கருத்துகள் மக்களிடம் கொண்டு சேர்த்தது.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திய கம்பராமாயணம் நாடகம் அன்று மக்கள் மத்தியில் மூடநம்பிக்கையை விதைத்து வருகையில் சென்னையில் 28.08.1954 அன்று உண்மையான ராமாயண நாடகம் நடத்த ராதா முன்வந்தார்.

அரசு நாடகத்திற்கு தடை விதித்தை அறிந்ததும் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பெரியார் சென்னை திரும்பினார்.
ராமாயண ஆராய்ச்சி பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.
சட்டப்பூர்வமான போராட்டத்தை மேற்கொண்டதுடன், சட்டத்தை மீறி நாடகம் நடத்தி சிறை செல்லவும் தயார் என அறிவித்தார் ராதா.

அரசு பணிந்தது. ராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் 15.09.1954 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடந்தது.
வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ராமாயணங்களிலிருந்தும் தனது நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோளாக எழுதி அரங்கின் நுழைவு வாயிலில் வைத்து எதிரிகளின் வாயை அடைத்தார் ராதா.

18.12.1954 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார்.
பெரியாருக்கு கிடைத்த கல்லடியும்,சொல்லடியும் ராதாவுக்கும் கிடைத்தது.

கும்பகோணத்தில் நாடகம் நடத்திய போது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா.
 'ராமன் வேடத்தை கலையுங்கள் ' எனக் கூறிய காவல்துறையினரிடம் " வேடம் கலையாது,
வில் கீழே விழாது,கலசம் கீழே வராது" எனக் கூறி,
 ஒருக் கையில் கள்ளுக் கலயமும், மறுகையில் சிரெட்டுமாக காவல் நிலையம் நோக்கி நடந்தார் 'ராதா' ராமன். வீதியையும் மேடையாக்கும் வித்தையைக் கொண்டிருந்தார் ராதா.

பல ஊர்களில் ராதாவின் நாடகத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
தடையை மீறி நாடகம் நடத்தியதற்காக ஆறு வழக்குகள் போடப்பட்டன.
ராதாவின் நாடகத்திற்காக சென்னை மாகாண சபை ஒரு புதிய நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டுவந்தது.

அதற்கான விவாதம் நடந்த போது சட்டமன்றத்திற்கும் சென்றார் ராதா. மன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். தனக்காகவே சட்டம் வருவதால் அவ்விவாதத்தைத் தானும் பார்க்க வேண்டும் என்று கோரினார் ராதா.

ஒரு கலைஞனுக்காக தடைச்சட்டம் இயற்றியவர் சி.சுப்ரணியம் அவர்கள்.
"எங்களால் பழைய ராமாயணத்தை பல நூற்றாண்டுகளாக தாங்கிக் கொள்ள முடிந்தது.
அவர்களால் புதிய ராமாயணத்தை அய்ந்து ஆண்டுகள் கூடத் தாங்க முடியாது" என்று சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அண்ணா.

" நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான்.
சினிமாவில் கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறான் " என்று பொது மேடையிலேயே பேசியிருக்கிறார் ராதா.

சினிமா பகல் நேர காட்சியை எதிர்தார்.நடிகர்களுக்கு மன்றம் ஆரம்பித்து கொள்ளை நோயாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் " கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதே" என்றார்.

அப்போதைய திராவிடர் கழக மாநாடுகளில் ஊர்வலத்தின் முன்னால் கருஞ்சட்டை அணிந்து குதிரையின் மீது வருவார் ராதா.
மாநாட்டில் சமூக நாடகங்களை நடத்தினார். பிள்ளையார் சிலை உடைப்ப்புப் போராட்டம்,
பிராமிணாள் ஓட்டல் பெயர் அழிப்பு போராட்டம் சட்ட எரிப்புப் போராட்டம் போன்றவற்றை ஆதரித்து பிரச்சாரம் செய்ததுடன் சிலவற்றில் கலந்தும் கொண்டார்.

 " என்னைப் பொறுத்த அளவில் நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதைப் பகுத்தறிவு கொள்கைகளுக்காக என்றுமே இதைவிட அதிகத் தொல்லைகளை ஏற்க வேண்டியிருந்தாலும் சரி,
அந்த விலைகள் எனது உயிராக இருந்தாலும் சரி, அதற்கு நான் எப்போதுமே தயார் " என்று 1964 இல் வெளியான பகுத்தறிவு ஆண்டு மலரில் எழுதினார் ராதா.
 கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே ' என்று முழக்கமிட்ட ராதாவின் பெயரில் மன்றம் திறக்கப்போவதாகப் பெரியார் கூரியபோது அதை தன்னடக்கத்துடன் நிராகரித்தார் ராதா.

1963 இல் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது " மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இம்மன்றத்தைத் திறந்து வைக்கிறேன்" என்று பெரியார் பேசினார்.

" நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் " என்று பிரகடணம் செய்த எம்.ஆர்.ராதா
வாழ்க ! வாழ்க ! ! திராவிட மறுமலர்ச்சி என்னும் நாடகக் குழுவின் மூலம் ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய பலிபீடம் உள்ளிட்ட பல நாடகங்களை நடத்தினார்.

தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, " குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது " என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நிதீமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

கருத்துகள் இல்லை: