புதன், 17 ஏப்ரல், 2024

ஆ.ராசா VS எல்.முருகன்.. திமுக நம்பிக்கை, பாஜக எழுச்சி! நீலகிரி தொகுதியில் என்ன நடக்கிறது தெரியுமா?

 tamil.oneindia.com - Veerakumar :  ஊட்டி: திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன் ஆகியோர் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாகியுள்ளது நீலகிரி (தனி). நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயகுமார் போட்டியிடுகிறார்.
தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் வெல்ல முடியும் என்ற திமுக கூட்டணியின் திடமான நம்பிக்கைக்கு ஓரளவுக்கு சவாலாக இருக்கக் கூடியவை மொத்தம் 6 தொகுதிகள்.
தென் சென்னை
வேலூர்
நாமக்கல்
ஈரோடு
நெல்லை
நீலகிரி (தனி)


இதில் நீலகிரி ஆ.ராசா போட்டியிடும் தொகுதி என்பதால் திமுகவின் கவுரவ பிரச்சினையுடன் தொடர்புடையதாகும். இந்த நிலையில்தான் ஒன்இந்தியாதமிழ் குழு, நீலகிரி தொகுதியின் பல பகுதிகளிலும் பயணித்தது. அப்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க முடிந்தது.

பாஜக எழுச்சி: நீலகிரி தொகுதியில் முன்பு எப்போதும் இல்லாத மாற்றமாக பார்ப்பது பாஜகவின் எழுச்சிதான். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய காலம் தொட்டே இந்த பகுதிகளில் முருகன், இந்த பகுதி மக்களுடன் பயணத்தை தொடங்கியிருந்தார். கடந்த இரு வருடங்களாக இங்கு தீவிரமாக களப் பணிகளில் ஈடுபட்டும் வந்தார். இதற்கு பலன் கிடைத்திருப்பதை களத்தில் பலரிடம் கருத்து கேட்டபோது தெரிந்து கொள்ள முடிந்தது.

இங்குள்ள 4 சட்டசபை தொகுதிகள் அதிமுக வசமுள்ளன, இரண்டு தொகுதிகளை திமுக கைப்பற்றியிருந்தது. ஆனால் அதிமுகவை மறந்துவிட்டு, திமுக VS பாஜக என்றுதான் இங்கு போட்டியிருப்பதாக மக்களே பேசிக்கொள்வது பாஜகவின் மிகப்பெரிய வெற்றிதான். ஆ.ராசாவை, முருகன் வீழ்த்த முடியுமா, முடியாதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அதிமுகவை பின்னுக்கு தள்ளி தன்னைப் பற்றி பேச வைத்திருப்பது முருகன் சாதனைதான். எனவே நீலகிரி தொகுதியை திமுகவால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றே தெரிகிறது.

காங்கிரசின் நிலை: நீலகிரி லோக்சபா தொகுதியில் அதிமுக முறை, அதாவது 8 முறை காங்கிரஸ் வென்றது வரலாறு. திமுக 3 முறையும் அதிமுக மற்றும் பாஜக தலா இரண்டு முறை வெற்றிபெற்ற தொகுதியாகும். ஆனால் தொகுதிக்குள் இந்த முறை காங்கிரஸ் சார்பில் தீவிர பிரச்சாரம் முன்னெடுக்கப்படவில்லை என்ற பேச்சுக்கள் உள்ளன. மிதமிஞ்சிய நம்பிக்கை இதற்கு காரணமா எனத் தெரியவில்லை.

பிரச்சாரம்: அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தாலும், திமுக மற்றும் பாஜக சார்பில்தான் பிரச்சார வாகனங்கள் அடிக்கடி சுற்றிவருகின்றன. பாஜக சார்பில் மோடியின் பெருமைகளை விளக்கி பேசுகிறார்கள். திமுக சார்பில் அதே மோடி ஆட்சியை விமர்சிக்கிறார்கள். இன்னொரு பக்கம், அதிமுக சார்பில், எடப்பாடியோடு சேர்த்து, வேலுமணியையும் போஸ்டரில் போட்டு பிரச்சாரம் நடக்கிறது. வேலுமணியின் மலைவாழ் மக்களுடனான நல்ல உறவை பயன்படுத்த அதிமுக முயல்வதை பார்க்க முடிகிறது..
Who will win in Nilgiri Lok Sabha constituency BJP s L Murugan giving tough fight to DMK s Raja

கிராமங்கள்: பன்முகமான நிலப்பரப்பை உள்ளடக்கிய பரந்து விரிந்த தொகுதி நீலகிரி. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதாவது சமதள பகுதிகளிலுள்ள சட்டசபை தொகுதிகளும் நீலகிரி லோக்சபா தொகுதிக்குள் அடங்குகின்றன. சுமார் 60 சதவீதம் அளவுக்கான வாக்காளர்கள் சமதளப்பரப்பைச் சேர்ந்தவர்கள். எனவேதானோ என்னவோ, ஊட்டி, குன்னூர் போன்ற நகர்ப்புற மலைப்பகுதிகளிலுள்ள பகுதிகள் மட்டுமின்றி, மலைக் கிராமங்களிலுள்ள குரல்கள் எடுபடுவதேயில்லை. ஆனால் இந்த இடத்தில்தான் பாஜக கோல் அடிக்கிறது. கிராமப்புற மக்கள் குறிப்பாக படுகர் இனத்தவர்களிடம் பாஜக நெருங்கியுள்ளது. இந்த வாக்குகள் இம்முறை முக்கிய பங்காற்றும் என தெரிகிறது.

இதுதான் கள நிலவரம் என்றாலும் திமுகவின் கூட்டணி பலம், பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சி போன்றவை ஆ.ராசாவுக்கு வெற்றிக்கான நம்பிக்கையை தக்க வைத்துள்ளது. ஜூன் 4ல் உற்று கவனிக்கப்படப்போகும் தொகுதிகளில் ஒன்றாக நீலகிரியும் இருக்கும் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை: