tamil.oneindia.com - Mathivanan Maran : டெல்லி: "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சுமூகமான தொகுதி உடன்பாட்டை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகுமாம்.
"இந்தியா" கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அத்துடன் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தப்பி ஓடினார். உ.பி.யில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக அணிக்கு தாவியது.
இதனால் லோக்சபா தேர்தலை "இந்தியா" கூட்டணி எதிர்கொள்ளுமா? "இந்தியா" கூட்டணி உயிர்ப்போடு இருக்குமா? என ஆரூடங்கள் கிளம்பின.
இதற்கு பதிலடி தரும் வகையில் 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் அதிரடியாக தொகுதி பங்கீட்டு முடிவை அறிவித்தன.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வலிமையாக இருப்பதால் தனித்தே போட்டியிட முடிவெடுத்தன. உத்தரப்பிரதேசத்திலும் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் சுமூகமாக தொகுதி உடன்பாட்டை எட்டின.
தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. ஆந்திராவில் இடதுசாரிகளுடன் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஷர்மிளா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரஸிம் வலிமையான கட்சிகள் என்பதால் தனித்தே போட்டியிடுகின்றன.
இதேபோல ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கட்சி நடத்திய முதல் கட்ட தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவித்தார். ஆனாலும் காங்கிரஸ் கட்சி இடைவிடாமல் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. தற்போதைய நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3, காங்கிரஸ் 2, மக்கள் ஜனநாயகக் கட்சி 1 இடத்தில் போட்டியிடுவது என உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகுமாம். பாஜக கனவில் இவ்வளவு மண்ணையா அள்ளி போடும் காங்கிரஸ்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக