வெள்ளி, 1 மார்ச், 2024

கி பி 3 நூற்றாண்டில் இருந்து கி பி 7 நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது”

இலக்கியா :  ”கி பி 3 நூற்றாண்டில் இருந்து கி பி 7 நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது” மகாவம்சத்தில் புதைந்துள்ள…உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் – ( பகுதி 27)
இன்று தமிழர்கள் பெரும்பாலும் வாழும் பகுதிகளான இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளில் காணப்படும் புத்த மத வழிபாட்டு தடயங்கள் அல்லது சான்றுகள், அங்கு சிங்களவர்கள் வாழ்ந்ததாக இலங்கை வாழ் பெரும்பான்மையான சிங்களவர்கள் இன்று நம்புகிறார்கள்.
அவர்கள் எனோ கி பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி பி ஏழாம் நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது என்ற வரலாற்று உண்மையை கவனத்தில் கொள்வதில்லை.



இரண்டாவது நூற்றாண்டில் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த கஜபாகு என்கிற மன்னனால் கண்ணகி வழிபாடு சிங்கள மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது என சிங்கள வரலாற்று நூல்களில் ஒன்றான இராஜாவளி என்ற நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தினி தெய்யோ என இது சிங்கள மக்கள் மத்தியில் வணங்கப்பட்டு வருகிறது, இந்த சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியான மணிமேகலை முழுக்க முழுக்க ஒரு தமிழ் புத்த மத நூலாகும். தமிழர்கள் அந்த காலப் பகுதியில் புத்த மதத்தை தழுவி இருந்ததிற்கு இது ஒரு வரலாற்று சான்றாகும். எனினும் புத்த மதம் சிங்களவர்களுக்கே உரிமையானது என்ற தப்பபிப்பிராயத்தை மகாவம்சம் அவர்களுக்கு ஊட்டியுள்ளதே இந்த மனப்போக்கிற்கு அடிப்படை காரணமாகும்.

கி.பி. 3ம் நூற்றாண்டளவில், மகாயான பௌத்தம் என்ற புத்த மத பிரிவு, தென்னிந்தியாவில் உருவாகி, தமிழகத்திற்குள் அறிமுகமாகியதாக அறிகிறோம். புவியியல் சூழ்நிலை காரணமாக தென்னிந்தியாவின் அரசியல் சமூக மாற்றங்கள் இலங்கையையும் பாதித்தன. எனவே இலங்கையிலிருந்த தமிழர்கள் மத்தியிலும் மகாயான பௌத்தம் பரவத் தொடங்கியது.

மணிமேகலை, குண்டலகேசி போன்ற தமிழ்ப் பெரும் காப்பியங்கள் பௌத்த தத்துவத்தை வலியுறுத்துபவையாக உருவெடுத்தன. ஆனால் இதன் பழமைவாதிகளான பௌத்தர்கள், தம்மை தேரவாத பௌத்தர்கள் என வரையறுத்துக் கொண்டனர்.

இந்தச் சமூகப் பகைப்பலத்தின் பின்னணியில், இதே காலப்பகுதியில் இலங்கை அரசன் தாதுசேனனின் மாமாவான மகாநாம தேரரால் மகாவம்சம் எழுதப்பட்டது. இப்படி இரண்டாக உருவான தேரவாத, மகாயான பௌத்த பிரிவுகள் என்பன சிங்கள மொழியின் உருவாக்கத்திற்கும் காரணமாக அன்று அமைந்திருந்ததுடன், தமிழ் மொழி என்பது மகாயான பௌத்தத்தின் ஊடகமாகக் கருதப்படவும் வழிவகுத்தது எனலாம்.

இந்த நிலையில், இலங்கையில் இந்து மதத்தால் உள்வாங்கப்பட்ட பௌத்தத்திற்கும், பழமைவாத பௌத்த மதத்திற்கும் எதிரான போராட்டமாகவே மகாவம்சம் அமைந்தது எனலாம்.

6ம் நூற்றாண்டில் உருவான புராண இதிகாசங்களின் பாணியிலான மகாவம்சம், சில நூறாண்டுகளுக்கு முற்பட்ட அதிகாரப் போராட்டங்களை, இதிகாசங்களையும் புராணங்களையும் போலவே மக்கள் மயப்படுத்த முற்பட்டது.

இதன் ஒரு வடிவமே எல்லாளச் சோழனுக்கும் துட்டகாமினிக்கும் இடையில் நடந்த போராட்டம் தொடர்பான மகாவம்சத்தின் விவரணையாகும். அது மட்டும் அல்ல, இன்று வடக்கு கிழக்கில் தொல் பொருள் ஆய்வில் கிடைக்கும் புத்த மத சான்றுகளும் இவையின் விளைவே, அதாவது தமிழ் மகாயான பௌத்தத்தின் சிதைவுகள், இதற்கும் சிங்களவருக்கு எந்தவித தொடர்பும் இல்லை.

மகாவம்சத்தில் பாடம் 22 முதல் 32 வரை துட்டகாமினி பற்றி சொல்லப்படுகிறது. 271 பக்கங்கள் கொண்ட மகாவம்சத்தில்,81 பக்கம் இவனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 30% ஆகும். ஆனால், மகாவம்சம் சொல்லும் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டு ஆட்சி காலத்தில் இவனின் ஆட்சி இருபத்தி நான்கு ஆண்டுகள் அல்லது 3% க்கு குறைவான காலமே! இந்த தவறான கையாளுதல், எமக்கு மகாவம்சத்தின் நம்பிக்கைக்கு ஒவ்வாத தன்மையையும், அதை எழுதிய நூலாசிரியரின் மனப்போக்கையும் வெளிப்படையாக காட்டுகிறது.

சமண சமயம் தமிழ் நாட்டுக்கு கி மு 300 ஆண்டுகளில் வந்திருக்கலாம்? அதை தொடர்ந்து புத்த சமயமும் அங்கு வந்து, கணிசமான காலம் அங்கு நிலைத்து நின்றது. இந்த கால பகுதியில், உதாரணமாக கி பி 300 இல் இருந்து 600 வரை காலத்தை இருண்ட காலம் என கூறப்படுகிறது. ஏறத்தாழ ஆறாம் நூற்றாண்டில் இல் இருந்து ஏழாம் நூற்றாண்டு வரை, மீண்டும் அங்கு இந்த பிராமண சமயங்களை கடுமையாக எதிர்த்து, சைவமதம் மேல் ஒங்க தொடங்கியது.

இந்த அலை, பல புத்த பிக்குகளை திரளாக இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம்? மேலும் இலங்கை வாழ் தமிழர்களும் மீண்டு சைவ சமயத்துக்கு முழுமையாக திரும்பினார்கள். அதனால் தான், தீபவம்சத்தில் தமிழருக்கு எதிராக காணாத இனத்துவேசம் மாகாவம்சத்தில் காணப்படுவதற்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்?

மற்றது தேரவாத பௌத்தம் [இலங்கை சிங்களவர்கள் இச்சமயத்தைச் சேர்ந்தவராவர்கள்] மற்றும் மகாயான பௌத்தம் [மகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியா, இலங்கை தமிழர்கள், மீண்டும் சைவ மதத்திற்கு கி பி ஆறாம் நூற்றாண்டிற்கு பின் மாறமுன், குறிப்பிட்ட காலம் வரை மகாயான பௌத்தத்தில் இருந்தார்கள்] இவைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடும் பகையும் ஆகும்.

சமஸ்கிருத பெயர்ச் சொல் ” सैंहल ” [saiMhala] என்பதன் அர்த்தம் கறுவா அல்லது இலங்கைக்கு உரியது அல்லது அங்கு உற்பத்தி செய்யப் படுவது அல்லது சிங்களவர் [cinnamon / Laurus Cassia – Bot or belonging to or produced in Ceylon or Sinhalese ] ஆகும்.

இதன் உச்சரிப்பு “சின்ஹல” ஆகும். இலங்கை கறுவா விளையும் நாடாகையால், கறுவாவின் சமஸ்கிருதப் பெயரான “சின்ஹல” என்பதே சிங்களமாக மருவியிருக்கலாம் எனவும் வாதாடலாம் என நம்புகிறேன். ஏனென்றால் சிங்கத்தின் வம்சாவளியினரே சிங்களவர் என்பது நம்பமுடியாத இயற்கைக்கு மாறான தகவலாக இருப்பதால்?
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்
மகாவம்சத்தில் புதைந்துள்ள…உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் – ( பகுதி 26)

1 கருத்து:

உண்மை விளம்பி சொன்னது…

மகாயானம் - பஞ்ச தந்திரங்களையும் கையாண்டு அடுத்துக் கெடுக்கும் ஆரிய பார்ப்பான் நாகார்ஜூனன் என்பவன் புத்தமதத்தினை இந்நாட்டிலிருந்தே அழித்தொழிக்கும் பொருட்டு அதனைத் தோற்றுவித்த புத்தரின் (originals) போதனைகளை ஹீனயானம் என்றும் (ஹீனம் என்றால் குறைபாடுள்ளது, அயனம் என்றால் வழி என்றும் பொருள்) அதன் மூலவேர் தத்துவங்கள் நீர்த்துப் போகும் வண்ணம் பார்ப்பன இடைச்சொருகல்களை கலந்து ஒரு new version of Buddhism என மாற்றி அமைத்ததே மகாயானம். ஆக இவனுங்க ஒரு நல்லதையும் உருப்பட விடாமல் செய்து உருமாற்றி நம்மை ஏய்த்து பிழைப்பதையே தொழிலாக்கிக் கொண்டார்கள்