திங்கள், 26 பிப்ரவரி, 2024

தூத்துக்குடியில் கனிமொழி : பாஜக மீண்டும் வந்தால்.. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது!

 tamil.oneindia.com - Mani Singh S :  தூத்துக்குடி: பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக கனிமொழி எம்பி பேசினார். மேலும்,
மத்திய அரசு ரூ. 20,000 கோடி ஜிஎஸ்டி வரியை தரவில்லை என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது கனிமொழி பேசியதாவது:- நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும் தான் மருத்துவராக முடியும் என்ற நிலை இருந்தது.
அதையெல்லாம் மாற்றியது திராவிட இயக்கம்.

டெல்லியில் இருக்கக்கூடிய மோடி தலைமையிலான மத்திய அரசு நாம் கஷ்டப்பட்டு போராடி பெற்ற உரிமைகளை பறிக்கின்றனர். ஏழை- எளிய மக்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவ கல்லூரி இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டம் தோறும் அரசு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்தது.
if-bjp-wins-again-kalaignar-magalir-urimai-thogai-scheme-forced-to-stopped-says-kanimozhi

புதிய கல்விக் கொள்கை: இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில் தான். இதையெல்லாம் ஒழிக்க கூடிய வகையில் தான் நீட் கொண்டு வந்துள்ளனர். நமக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் நமது குழந்தைகள் படிக்க முடியாத நிலையை கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கை சட்டத்தில், அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர துடிக்கிறார்கள்.

புதிய கல்விக் கொள்கையை மோடி அரசு கொண்டு வந்தால் நமது பிள்ளைகள் எந்த கல்லூரிக்கும் போக முடியாத நிலை ஏற்படும். வரும் தேர்தல் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கூடிய தேர்தல். நம்முடைய அடுத்த தலைமுறை வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழகத்தில் எல்லோரும் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ்கின்றனர். தமிழக அரசு மக்களை பாதுகாக்கிறது.

மகளிர் உரிமை தொகை: 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மேலும் அந்த திட்டத்திற்கான நிதி உதவிகளை தொடர்ந்து குறைத்துக் கொண்டிருக்கிறது. பல மாநிலங்களிலும் இதே நிலைதான் நடக்கிறது. மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ளம் பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்க வில்லை.

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரிப்பாக்கி என்பது ரூ 20 ஆயிரம் கோடி உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும் என்று நம்முடைய முதல்வரே சொல்லக்கூடிய அளவிற்கு தொடர்ந்து தமிழகத்திற்கு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

நிதி எங்கே என கேளுங்கள்: தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை. தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு இங்கு இருக்க கூடிய சகோதர- சகோதரிகளுக்கு எதிராகவே இருக்கக்கூடிய ஆட்சி தான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எங்கே என்று கேளுங்கள்.

மழை, வெள்ளத்தினால் சென்னை, தூத்துக்குடி பாதிக்கப்பட்ட போது எங்கே போயிருந்தீர்கள் என்று கேளுங்கள். மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டிற்கு எங்கள் முதல்வர் 4 லட்ச ரூபாய் கொடுத்தார். நீங்கள் என்ன கொடுத்தீர்கள் என்று கேளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: