திங்கள், 1 ஜனவரி, 2024

டாக்டர் கிருஷ்ணசாமி : பாஜக நிர்வாகியை கைது பண்ணுங்க.. தயவு தாட்சண்யமே கூடாது..

 tamil.oneindia.com  - Vignesh Selvaraj :   சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிக்கு அமலாக்கத்துறை சாதி பெயரை குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கொந்தளித்துள்ளார். தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனி வடக்கு காடு என்று அழைக்கப்படக்கூடிய காராமணி பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சின்னையன் என்ற சின்னச்சாமி என்பவரது புதல்வர்கள் கண்ணையன், கிருஷ்ணன் ஆவர். காலமான சின்ன சாமி அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட 6 ½ ஏக்கர் நிலத்தில் அவரது புதல்வர்கள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர்.


 அது மலை அடிவாரத்தில் உள்ள நல்ல வளமான நிலமாகும். வறட்சி காலங்களிலும் வற்றாத கிணற்று பாசனம் உண்டு.

கண்ணையன் திருமணமானவர்; அவருக்குக் குழந்தைகள் எவரும் இல்லை. கிருஷ்ணனுக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் குழந்தைகள் உண்டு; ஒருவர் மும்பையில் இருக்கிறார்; மற்றொருவர் சேலம் அருகே இரைச்சிபாளையத்தில் வசித்து வருகிறார்; மற்ற இரண்டு பெண்களுக்கும் திருமணம் ஆகி விட்டது. கிருஷ்ணன், கண்ணையன் ஆகிய இருவரும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதாலும், வேறு எவரும் அவர்கள் குடும்பத்தில் அந்த நிலத்தில் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாததாலும் இவர்களுடைய நிலத்திற்கு அருகாமையில் இருக்கும் சேலம் இரும்பாலை பகுதியிலிருந்து குடியேறிய குணசேகரன் என்ற நபர் அவர்களுடைய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க எண்ணியிருக்கிறார். ஆனால், கண்ணையனும், கிருஷ்ணனும் அந்த நிலத்தை விற்பதற்கு முன்வரவில்லை.

"கேப்டன் தாலி கொடுக்குறதுதான் எனக்கு நல்ல நேரம்" - Nallathambi, Ex DMDK MLA | Oneindia Tamil

மேலும், குணசேகரன் என்பவர் பாஜகவின் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும், ஏற்கனவே இதே போல தனக்கு நிலத்தை விற்க முன்வராத ஒருவரைக் கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர். பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் கிரிமினல் பின்னணியைத் தவறாகப் பயன்படுத்தி, கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோருடைய நிலத்தை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்ற தீய நோக்கில் தொடர்ந்து பல முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் நிலத்தை விற்க மறுத்திடவே, அவர்கள் ரூபாய் ஒரு லட்சத்தை குணசேகரன் இடத்தில் பணம் பெற்றதாக ஒரு போலி பத்திரத்தைத் தயார் செய்து, அதற்கு இறந்து போன பக்கத்து வயல்காரர் ஒருவரையும் சாட்சியாகத் தயார் செய்து, தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொடுக்காத பணத்தைக் கொடுத்ததாகக் கூறி அதைக் கேட்டுத் தொடர்ந்து முதியவர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அது மட்டுமின்றி கடந்த நான்கு வருடங்களாக அந்த நிலத்தின் உரிமையாளர்களான கிருஷ்ணனும் கண்ணையனும் அவர்களது நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவிற்குத் தொடர்ந்து அடியாட்களைப் பயன்படுத்தி, அதற்குத் துணையாக யார் வரினும் அவர்களையும் அச்சுறுத்தி வந்தது தெளிவாகத் தெரிகிறது. 6 ½ ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தும் அதில் விவசாயம் செய்ய முடியாமல் ரேஷன் அரிசியையே நம்பியே வாழ வேண்டிய அவலநிலை இருக்கிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் 22ஆம் தேதி விவசாயிகளுக்கு சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து ஆஜராகும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு கடிதம் அனுப்பப்படுகின்ற போது பெயர், தந்தையார் பெயர், கதவு எண், வீதி மற்றும் கிராமம், நகரம், மாவட்டம் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே குறிப்பிட வேண்டும். ஆனால் அமலாக்கத் துறையின் அந்தக் கடிதத்தில் 'இந்து - பள்ளர்' என்று சாதியின் பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளர் என்ற பெயர் தேவேந்திர குல வேளாளராக மாற்றப்பட்டு ஏறக்குறைய இரண்டு வருடம் ஆகிவிட்டது. இது அமலாக்கத் துறைக்குத் தெரியாமல் போனது ஏன் என்று தெரியவில்லை?

தெரிந்திருந்தாலும், சாதியின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் அனுப்புவது குற்றம் மட்டுமல்ல, அதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. இச்சம்பவம் நடைபெற்று நான்கு மாதங்கள் ஆயினும், வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. ஊடகங்களில் தகவலை அறிந்து இன்றே, இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டோம்.

குணசேகரன் என்ற நபர் பாஜகவின் அரசியல் பின்னணி, தன்னுடைய கிரிமினல் பின்னணி யை வைத்துக்கொண்டு, அப்பகுதியில் இருக்கக்கூடிய சாதாரண ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தித் தொடர்ந்து நில அபகரிப்பில் ஈடுபட்டு வருவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே மஞ்சுநாதன் என்பவருடைய நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு அவருடைய நிலத்திற்குச் செல்லக்கூடிய வழியை அபகரித்து அந்த வழக்கும் நிலுவையிலே உள்ளது.

ராமநாயக்கன்பாளையம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடைய நிலத்தை அபகரிக்க நடந்து வரும் திட்டமிட்ட வன்கொடுமைகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது; கண்டனத்திற்குரியது. நான்கு வருடங்களாக சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாமல் குணசேகரன் என்ற ஒரு நபர் சண்டியர் தனம் செய்கின்றபொழுது அந்த மீது நில மோசடி வழக்கை அப்பகுதி காவல்துறை பதிவு செய்யவில்லையே ஏன்?

மேலும் பட்டியல் வகுப்பில் இருக்கக்கூடிய ஒருவருடைய நிலத்தை அபகரிப்பது, செல்லக்கூடிய வழியைத் தடுப்பது 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உட்பட்டதாகும். மேலும், பணம் கொடுக்காமல் கொடுத்ததாகத் தயாரிக்கப்பட்ட போலி பத்திரம் மோசடி குற்றமாகும். இவ்வளவு குற்றங்களையும் ஒரு குறிப்பிட்ட நபர் செய்து வருகின்ற பொழுது மாநிலத்தினுடைய வருவாய்த் துறையோ, காவல்துறையோ இன்று வரையிலும் ஏன் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது? அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட இன்னல்கள் குறித்து கேள்விப்பட்டவுடன், இன்று சேலம் மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு முழு விபரத்தையும் விளக்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.

சாதியை குறிப்பிட்டு சம்மன்.. விவசாயிகளை மிரட்டிய அமலாக்கத்துறை? விசாரணையை தொடங்கியது சென்னை போலீஸ்!சாதியை குறிப்பிட்டு சம்மன்.. விவசாயிகளை மிரட்டிய அமலாக்கத்துறை? விசாரணையை தொடங்கியது சென்னை போலீஸ்!

தமிழகக் காவல்துறையைத் தனது கீழ் வைத்திருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எவ்வித தயவு தட்சணம் பாராமல் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் சேலம் கிழக்கு மாவட்ட பாஜக பொறுப்பாளர் குணசேகரனை கைது செய்ய வேண்டும். கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் ஆகியோர் தங்களுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய ஏதுவாக அவர்களுக்கு காவல்துறை முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

பாஜக கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து துன்புறுத்தல் கொடுத்து வரும் கிரிமினல் பின்னணி கொண்ட குணசேகரனை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் உடனடியாக நீக்கிட வேண்டும்.

மேலும், ஒரு ஏழையின் நிலத்தை அபகரிப்பதற்குத் திட்டமிடும் குணசேகரன் என்பவர் பிஜேபிகாரர் என்ற காரணத்திற்காகவே அமலாக்கத்துறை தவறாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அமலாக்கத்துறை எதற்காக ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது என்பது குறித்தும் தேசிய அமலாக்கத்துறை இயக்குநரகம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் சாதியின் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பிய அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இந்தப் பிரச்சனையில் சேலம் மாவட்ட வருவாய்த் துறையும், காவல் துறையும் தயவு தாட்சண்யமின்றி குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரிகள் எவரேனும் குணசேகரனுக்கு உடந்தையாக இருந்திருந்தால் அவர்கள் மீதும் அமலாக்கத் துறையின் இயக்குநர் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஆத்தூர் ராமநாயக்கன்பாளையம் கிருஷ்ணன், கண்ணையன் மற்றும் பிற விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கிப் போராட வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் எச்சரிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: