வியாழன், 4 ஜனவரி, 2024

அதானி - ஹிண்டன்பர்க் : செபிக்கு உச்ச நீதிமன்றம் 3 மாதங்கள் கெடு

BBC News தமிழ் :  அதானி vs ஹிண்டன்பர்க் : செபிக்கு உச்ச நீதிமன்றம் 3 மாதங்கள் கெடு
ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை, ஜனவரி 3) தீர்ப்பளித்துள்ளது.
இதில் அதானி குழுமத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் தொகுப்பை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
இந்த மனுக்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கோரியிருந்தன.
இந்த பிரச்னையை விசாரிக்க கடந்த ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எம்.சப்ரே தலைமையில் ஒரு குழுவை நீதிமன்றம் நியமித்திருந்தது. அதே சமயம் இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (செபி) நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

கடந்த மே மாதம், அதானிக்கு எதிராக முதன்மையான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று ஏ.எம்.சப்ரே குழு கூறியிருந்தது. ஆனால் இந்தக் குழு பாரபட்சம் காட்டுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.

இந்த வாதத்தை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.

அதானிக்கு எதிரான 24 வழக்குகளில் 22 வழக்குகளில் செபி விசாரணையை முடித்துள்ளது. "செபி விசாரணைகளை [மீதமுள்ள வழக்குகளில்] 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்துகிறோம்," என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

‘The Organized Crime and Corruption Reporting Project’ என்ற குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணைகளை செபியிடம் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டிருந்தனர்.

ஆனால் அப்படி விசாரணையை மாற்ற எந்தக் காரணமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. "மூன்றாம் தரப்பு அமைப்பின் அறிக்கையை... உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது," என்று நீதிமன்றம் கூறியது. "இந்த வழக்கின் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற எந்த அடிப்படையும் இல்லை," என்றும் நீதிமன்றம் கூறியது.

மேலும், ஷார்ட் செல்லிங் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் ஏதேனும் சட்ட மீறல் இருந்தால், செபி மற்றும் நாட்டின் புலனாய்வு முகமைகள் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது
பின்னணி என்ன?
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குச்சந்தை பகுப்பய்வு நிறுவனம் அதானி குழுமம் வரலாறு காணாத மோசடியில் ஈடுபடுவதாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது.
அதானி குழுமத்துக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கும் இடையே அறிக்கை வாயிலான மோதல்கள் நடந்தன.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது என்ன?
106 பக்கங்கள், 32,000 சொற்கள், 720க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்டது ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை.

அது சுருக்கமாகச் சொல்வது என்னவெனில், "அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது."

அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மிகக் குறிப்பாக, மொரிஷியஸ், கரீபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதானி நிறுவனங்களுக்கு ‘கணிசமான கடன்’ இருப்பதாகவும் இது முழு குழுமத்தையும் ஆபத்தான நிதி நிலையில் வைத்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறியிருந்தது.

அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன
அதானி குழுமம் கூறிய பதில் என்ன?
இந்த அறிக்கையை நிராகரித்திருந்த அதானி குழுமம், இது முற்றிலும் ஆதாரமற்றது என்று கூறியது.
ஹிண்டன்பர்க் கேட்டிருந்த 88 கேள்விகளில், 21 கேள்விகள் ஏற்கனவே பொதுத் தளத்தில் இருந்தவை என்று அதானி குழுமம் கூறியிருந்தது.

ஹிண்டன்பர்க் தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை தயாரித்திருப்பதாகக் கூறியது தவறு என்றும், 2015 முதல் வெவ்வேறு தருணங்களில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்றும் அதானி நிறுவனம் கூறியிருந்தது. அந்த அறிக்கை தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியிருந்தது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் கொடுத்த விளக்கம் என்ன ?

அதானியின் மறுப்பைத் தொடர்ந்து "ஆய்வறிக்கையில் நாங்கள் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் அதானி குழுமம் பதிலளிக்கவில்லை,” என்று கூறியிருந்தது ஹிண்டன்பர்க்.

“நாங்கள் முன்வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நிரூபிக்கத் தேவையான ஆவணங்களை கைவசம் வைத்திருக்கிறோம். அதானி குழுமம் விரும்பினால், அமெரிக்க நீதிமன்றங்களில் கூட வழக்கு தொடுக்கலாம். அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார்,” என்றும் சவால் விடும் ரீதியில் பதில் கொடுத்திந்தது ஹிண்டன்பர்க்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன்
ஹிண்டன்பர்க் என்பது என்ன? அது என்ன செய்கிறது?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து இயங்குகிறது ஹிண்டன்பர்க் முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம்.
அந்நிறுவனம் ஒரு ‘ஷார்ட் செல்லர்’ என்று அழைக்கப்படுகிறது. தன்னிடம் இல்லாத பங்குகளை விற்பது தான் ஷார்ட் செல்லிங் எனப்படும். பங்குகளின் விலை குறையும் என்று கணித்தால், அதை குறித்த நேரத்தில் தரகர் மூலமாக வாங்கி விற்று லாபம் ஈட்டுவதைத்தான ஷார்ட் செல்லிங் என்கிறார்கள்.

முதலீட்டுத் துறையில் பல தசாப்தங்களாக அனுபவம் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறுகிறது.
பங்குச் சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதே தங்களது நோக்கமாகும் என்று அந்நிறுவனம் கூறிக்கொள்கிறது.

தன் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளின் மூலம் முன்னரே பல நிறுவனங்களின் பங்குகளின் விலைகளை இறக்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளம் கூறியுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க் 2020-ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: