tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : சிவகங்கை: ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றிடலாம், குடும்ப அட்டை இல்லாத வெளி மாநில தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பல மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு பணிகள், மென் பொருள் நிறுவன பணிகளுக்காக வரும் ஊழியர்களை கடந்து, கட்டுமானப் பணிகள், உணவக ஊழியர்கள், சலூன் கடைகள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதற்காகவும், புதிய தொழில் தொடங்குவதற்காக தினசரி தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
Other state people can apply for Ration cards - Sivagangai district collector
இந்த நிலையில் வெளி மாநிலத்தவர்களுக்காக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது, “வெளி மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு, eShram Portal என்ற இணையதள தரவு தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர் உரிய படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து தொடர்புடைய குடிமைப் பொருள் தனி வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நிரந்தரமாக தங்கி உள்ளவரிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சிவகங்கை மாவட்டத்திற்கு தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்தோ வந்து, அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், eShram Portal மூலம் விண்ணப்பிக்கும், மனுதாரர் உரிய படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை வட்ட வழங்கல் அலுவலகங்களில் அளிக்கவும், அவ்வாறு பெற்ற மனுவினை அவர்களது சொந்த மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகம் மூலமாக அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளஎப்படும்.
புதிய குடும்ப அட்டை பெற்றவர்கள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் எந்த ஒரு ரேஷன் கடையிலும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்று பயன்பெறலாம். எனவே சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் குடும்ப அட்டை இல்லாத புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டையை eShram Portal மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.” என்று கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக