திங்கள், 4 செப்டம்பர், 2023

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

minnambalam.com - christopher : செந்தில் பாலாஜி ஜாமின் மனு: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என உயர் நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 4) உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கோரி, கடந்த மாதம் 28ஆம் தேதி எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டது என்பதால், இது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி அல்லி, ”இந்த வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றமே ஜாமின் மனுவையும் விசாரிக்கும்” என்றார்.

அதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, “அமலாக்கத் துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்படும் ஜாமின் மனுவை விசாரிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி வாருங்கள்” என செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து இரு நீதிமன்றங்கள் இடையே வழக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ”சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. செந்தில்பாலாஜி வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு. எனவே செந்தில்பாலாஜியின் மூல வழக்கு மற்றும் ஜாமின் வழக்கு இரண்டையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும். இந்த வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் செந்தில்பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஜாமின் மனுவை முதன்மை நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: