செவ்வாய், 5 செப்டம்பர், 2023

சட்டமன்ற தேர்தலுக்கும் தயாராக வேண்டும்: துரைமுருகன்

minnambalam.com -  Kavi  : நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தலுக்கும் சேர்ந்தே தயாராக வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று (செப்டம்பர் 4) காட்பாடியில் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “திமுக ஆரம்பித்து 75 ஆண்டு காலம் ஆகிறது. இதில் 4ஆவது பொதுச் செயலாளராக இருக்கிறேன்.
அண்ணா, நாவலர், பேராசிரியர் ஆகியோருக்கு அடுத்து, உங்கள் ஆதரவால் நான் பொதுச்செயலாளராக இருக்கிறேன்.
திமுக வரலாற்றை எழுதுகிறபோது, நான்காவது பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். எனக்கும், என் பரம்பரைக்கும் இது ஒன்றே போதும்” என்றார்.


“வேலூர் மாவட்டத்தில் தான் முதலில் கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று தலைவரிடம் கோரிக்கை வைத்தேன்.
அதற்கு அவர், ‘அண்ணன் கோபித்து கொள்ளக் கூடாது, சரியான நேரத்தில் சரியான விழாவை தருகிறேன்’ என்று சொன்னார். பிறகு பிற மாவட்டங்களில் விழா எடுத்தார்கள்.

தொடர்ந்து முகவர் கூட்டங்கள் நடத்தினோம். இதையும் நான் கேட்டேன். தருமபுரி, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு,கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்ட முகவர்கள் கூட்டத்தை வேலூரில் நடத்தலாம் என்று கேட்டேன். அப்போதும், அதற்கு வேறு இடம் தயார் செய்திருக்கிறேன் என்றார்.

சரி இருக்கட்டும் என்றிருந்தேன், கடைசியாக சொன்னார், ‘அண்ணா கலைஞரின் நூற்றாண்டு விழா மட்டுமல்ல, திமுகவின் முப்பெரும் விழா மட்டுமல்ல, திமுகவின் பவளவிழா வருகிறது. அதை வேலூர் மாவட்டத்தில் நடத்தலாம் என்று சொன்னார்.  இப்படியொரு பெரிய விழாவை வேலூருக்கு கொடுத்திருக்கிறார்.
பவள விழாவை வேலூர் மாவட்டத்தில் கொண்டாடினார்கள் என்று திமுக வரலாற்றில் எழுத வேண்டும்” என்று குறிப்பிட்டார் துரைமுருகன்.

தொடர்ந்து பேசிய அவர், “மோடி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அவர் ஆட்சியை நடத்த போகிறாரா அல்லது அமெரிக்காவைப் போல் பிரசிடெண்ட் டைப் ஆப் கவர்மெண்ட் கொண்டு வரப் போகிறாரா… தேர்தலை உடனே கொண்டு வரப் போகிறாரா அல்லது தள்ளி வைக்கிறாரா… என்னன்னு தெரியல திடீர்னு பார்லிமென்ட் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது தேர்தல் விரைவில் வர இருக்கிறது சட்டமன்றமும் பாராளுமன்றமும் சேர்ந்து வருமா என்பது மட்டும்தான் இப்போது கேள்விக்குறி.
நாம் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் சேர்ந்து தேர்தல் வருவதாக நினைத்தே பணியாற்ற வேண்டும். நான் விரைவில் தேதி தருகிறேன் ஒவ்வொரு தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தி நிலைமைகளை அறிந்து செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.
தேர்தல் வருகிறதோ இல்லையோ… வழியிலே போகும் போது உஷாராக கையிலே ஒரு கம்பை எடுத்துக் கொண்டு போவது சிறந்தது என்று ஊரில் சொல்வார்கள். அப்படி நாம் அதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் விரைவில் உங்களைத் தொகுதி கூட்டங்களிலே சந்திக்கிறேன்” என்றார்.
பிரியா

கருத்துகள் இல்லை: