ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

அரிவாளெடுத்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு - வழக்கறிஞர் அருள்மொழி அண்ணாமலை திராவிடர் கழகம்

 Annamalai Arulmozhi  :  அரிவாளெடுத்த மாணவர்களின் பெற்றோருக்கு!
உங்களைப் போன்ற பெற்றோர்களில் ஒருவராக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
எந்தப்பிழையும் செய்யாத இரண்டு இளம் குருத்துகள் சாதியின் பெயரால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் கிடக்கிறார்கள்.
அவர்களைப் பெற்ற தாயின் வயிறும்  தன்னந்தனியாக அவர்களை வளர்த்த அந்த உயிரும் எப்படித் துடிக்கும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
நீங்கள் அதன் மறுமுனையில் நிற்கிறீர்கள். உங்கள் பிள்ளைகள் கொலைவெறித் தாக்குதலை நடத்தியவர்கள்: இன்று சிறையில் இருக்கிறார்கள்.
நாளை அவர்கள் நிலை என்னவாகும் என்ற கவலை உங்கள் மனதையும் நடுங்கச் செய்யும் என்றே நம்புகிறேன்.


அதே வேளையில்  உங்களைச் சுற்றி இந்நேரம் சிலபேர் சூழ்ந்திருக்கக்கூடும். “அட விடப்பா நம்ம வமுசம், நம்ம ரெத்தம்;  கொஞ்சம் சூடுதேன்! “என்று உங்களுக்கு தைரியம் சொல்லி இன்னும் யாரை உசுப்பேத்தலாம் என்று திட்டமிடும் ஜாதி வீரர்கள் அவர்கள்.
இந்தநேரத்தில் நான் என்ன சொல்லமுடியும் உங்களுக்கு என்று நினைக்கிறேன் .ஆனால் சொல்வதற்கு சில செய்திகள் இருக்கின்றன. அதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஏனெனில், உங்கள் பிள்ளைகள் மயிரிழையில் “கொலைகாரன்” என்ற பட்டத்தைத் தவறவிட்டார்கள். அதற்காக நீங்கள் நிம்மதி அடையலாம். ஆனால் சிலகேள்விகள் உங்கள் மனதிற்குள் குடைந்துகொண்டுதான் இருக்கும். எப்படி என் மகன் கொலைகாரனாக முடிவெடுத்தான்?
இந்தக்குற்ற மனப்பாண்மை ஏன் அவனுக்குள் இறங்கியது? கொலை செய்யத் துணிந்தவன் கொஞ்சம் படிக்கத் துணிந்திருக்கலாமே ?
இந்தக்கேள்விகள் உங்களைப் போன்ற பெற்றவர்களுக்கு எழுமானால் இன்னும் சில சிறுவர்கள் கொலைகாரர்களாக மாறுவதைத் தடுக்க முடியும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன்.
இவை விடையில்லாத கேள்விகள் அல்ல. பிறந்தநாள் முதல் காதில் கேட்டது சாதிப்பெருமை. கடவுள் படத்துக்கு அருகில் சாதித் தலைவர்கள் படம். காதில் கேட்டு வளர்ந்தது
பெண்களைப் பற்றிய கேவலமான கொச்சைப் பேச்சுகள், பெரியவர்கள் பெருமையாகப் பேசியவை கெட்டவார்த்தைகள்…பாராட்டிப்பேசியது சாதிக்கொலைகளை… இன்னும் என்ன மிச்சம்? ஒரு குழந்தையை குற்றவாளியாக்க இவை போதாதா ?

உங்களுக்குத் தெரியுமா ? வீட்டில் படமாக வைத்துப் பின்பற்றுவதற்கு உரிய தலைவர்கள் ஒவ்வொரு சாதியிலும் இருந்தார்கள். அவர்களால்தான் அந்தச் சமூகங்கள் உயர்நிலையை அடைந்தன. அப்படி ஒருவரை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக சொல்லிக்கொடுங்கள் .
சிவகங்கையில் பிறந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் இராமச்சந்திரனார் என்ற தலைவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?

அவர் பெயரில் சிவகங்கையில் ஒரு பூங்கா இருக்கிறது. பல நீதிபதிகளை, மருத்துவர்களை, ஆட்சித்துறை அதிகாரிகளை, (IAS), பொறியாளர்களை, பேராசிரியர்களை , அரசியல் தலைவர்களை உருவாக்கிய குடும்பத்தின் ஊற்றுக்கண் அவரே. அக்குடும்பம் இன்னும் பல நூற்றுக்கணக்கான வெற்றியாளர்களை உருவாக்கியது. அவரது மூத்த மகன் இராமசுப்பிரமணியம் அவர்கள் தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். அவரது மகள் இராமலட்சுமி அம்மையாரின் கணவர் வழக்கறிஞர் சிவகங்கை சண்முகநாதன் அய்யா அவர்கள் தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் எனும் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். அவரால் முன்னேறியவர்கள் எண்ணிக்கை அதிகம். இவை அனைத்திற்கும் அடிப்படையான அய்யா சிவகங்கை ராமச்சந்திரனார் அவர்கள்தான் தன் சாதிப் பெயராகிய ‘ சேர்வை’ என்பதை நீக்கி , பெயருக்குப் பின்னால் சாதிப்பட்டம் போடுவதில்லை என்ற தீர்மானத்தை 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முன்மொழிந்தவர்.

அதற்கும் முன்பே 1928 ஆம் ஆண்டு என்னை விக்டோரியா அரங்கில் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார் . அம்மாநாட்டுத் தீர்மானங்களை உருவாக்கியதில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அந்தத் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் இன்றைய தேவைக்கும் மருந்தாகக் கூடியது.
 6. “ எல்லாப் பொதுப்பள்ளிக் கூடங்களிலும், ஆண் பெண் என்கின்ற வித்தியாசம் இல்லாமலும், உயர்வு தாழ்வு என்கின்ற வித்தியாசம் இல்லாமலும் , கட்டாயப் படிப்பு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கின்றது.”
 7. “ தாழ்த்தப்பட்ட மக்கள்( தீண்டத்தகாதார்) என்கின்றவர்களுக்கு இலவசக் கட்டாயக்கல்வி கற்பித்து அவர்களுக்கு இலவச்ச் சாப்பாடு போட்டு , புத்தகம் முதலிய கல்விச் சாதனங்களும் இலவசமாய் அளிக்கப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது”  
அவரது வரலாற்றில் இது ஒரு துளிதான். அய்யா சிவகங்கை இராமச்சந்திரனார் அவர்கள் “சுயமரியாதைச் சுடரொளி” யாக தன் சமூக முன்னேற்றம் என்பது அனைத்து சாதி மக்களின் முன்னேற்றம்தான் என்பதை நிறுவினார்.
இன்னொற்றையும் தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஆற்றிய சீர்திருத்தப் பணிகளுக்காக  அவர் சொந்த ஜாதியினரால் விமர்சிக்கப்பட்டார். வர்ணாசிரம வாதிகளால் தாக்கப்பட்டார். அதையெல்லாம் தாங்கி நின்றதால் அவரால் பல குடும்பங்கள் கல்வி வெளிச்சம் பெற்றன. அவர் பெயர் சிவகங்கை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சூட்டப்பட்டது.
“அரிவாள் அல்ல. கல்வி அறிவே நம் அடையாளம் “
என்று காட்டிய சிவகங்கை இராமச்சந்திரனார் என்ற அந்தத் தலைவரைப்பற்றி,  அரிவாளெடுத்து வெட்டிய மாணவர்களின் பெற்றோராகிய உங்களுக்கும் உங்களைப் போன்ற பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இனியேனும் தெரிந்துகொள்ளுங்கள் . உங்கள் பிள்ளைகள் குற்றவாளிகளாக அல்ல சிறைத்துறை அதிகாரிகளாக வரவேண்டும். அனைத்து மக்கள்மீதும் அன்பு காட்டும் இராமச்சந்திரனார் போல் உயர வேண்டும் என்று வழிகாட்டுங்கள்.
 ‘நாங்குநேரி ‘ என்ற ஊரின் அடையாளமாகிவிட்ட அந்தப் படிக்கட்டுகளின் இரத்தக்கறை அழியட்டும். அதற்கு முதல்படியாக சுயமரியாதைச் சுடரொளி இராமச்சந்திரனாரைப் படியுங்கள். நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுப்போம் என்று முடிவெடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை: