ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

திராவிட இயக்கங்களின் இலவசங்களால் பாய்ச்சல் வேகத்தில் முன்னேறிய தமிழ்நாடு .. புள்ளிவிபரங்கள்

 tamil.goodreturns.in 'இலவசங்கள்' மூலம் தமிழ்நாட்டுக்கு என்ன பலன்..? தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு எப்படி உதவியது..?!
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து பொருளாதார வல்லுநரும், ஸ்கைமேன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான கே ராஜேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் முக்கியமான பதிவை பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இலவசங்கள் மீது ஒரு பொருளாதாரப் பார்வையை கே ராஜேஷ் முன்வைத்துள்ளார். இவருடைய பதிவை இதுவரையில் 18,100 பேர் பார்த்துள்ளனர்.
"இலவசங்கள் தேவை" என்று ஒரு சாரார் (சமூகநீதிக் கொள்கையாளர்கள்) அதை ஆதரிக்க, "இலவசங்கள் தேவையில்லை" என்று எதிர்க் குரல்களும் கேக்கவே செய்கின்றன. அரசியல் மற்றும் சமூக நீதிப் பார்வையோடு பார்க்கையில், மக்கள் நலனுக்காகவும், அவர்களது விடுதலைக்காகவும், இது மிக முக்கியத் தேவை என்பதே நிதர்சனம். இந்த இலவசங்கள் செய்தது என்னவென்று சற்றே பொருளாதாரக் கண்ணாடி கொண்டு பார்ப்போமா?

மதிய உணவுத் திட்டம் - தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை 1925 முதல் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தான் இதன் ஆரம்பப் புள்ளி. அதன் பின்னர், முதல்வராக இருந்த காமராஜர் அவர்கள், இதனை மாநிலம் முழுவதற்கும் செயல்படுத்த, அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கலைஞர், ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு விரிவு படுத்தினார்.



கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்காக மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கொண்டுவரப்பட்டது தான் இந்த மதிய உணவுத் திட்டம். இந்த திட்டத்தின் விளைவு கிட்டத்தட்ட 100 வருடங்கள் கழித்து, கல்வியில், தொழிற்துறையில், ஜிடிபி வளர்ச்சியில் மேம்பட்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இலவச அரிசி - அறிஞர் அண்ணா தொடங்கி வைத்த "ரூபாய்க்கு மூன்று படி அரிசி" திட்டம். மாநில அரசுகள் ஒன்றிய அரசின் "Food Corporation of India" வை நம்பியே இருந்ததால், நம் மாநிலத்திற்கு கிடைக்கவேண்டிய பங்கினை போராடியே பெறவேண்டியதாக இருந்தது. அண்ணாவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் மனதில் உதித்ததுதான் "Tamil Nadu Civil Supplies Corporation".

ஒன்றிய அரசின் கையையே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலையை கண்டு, பொது விநியோகத்திற்காக ஒரு முழு நிறுவனத்தை தொடங்கினார். விளைவு: பசி என்கிற பிணி போக்கப்பட்டு, கல்வி மற்றும் தொழிற்துறையில் இன்று வரையில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாடு. குடும்பத்தின் உணவுத் தேவைக்காக உழன்று கொண்டிருந்த மக்கள் இப்பொழுது அதைப் பற்றி கவலையில்லாமல் தங்களது பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றனர். இதுவே ஒரு பெரிய மாற்றமென்று நம்புகிறேன் என கே ராஜேஷ் பதிவிட்டுள்ளார்.

இலவச மகளிர் பெருந்துப் பயணம் - தற்போதைய முதலமைச்சர், திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தது இந்த திட்டம். மேலோட்டமாக பார்த்தால், இது வெறும் இலவசப் பயணமாக தெரியும். ஆனால் நிஜத்தில்? இதுவொரு மாபெரும் பொருளாதாரப் புரட்சி.

பெண்கள், குறிப்பாக, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் வசிப்பவர்களுக்கு, வேலைவாய்ப்பிற்கு, அவர்களது சொந்த கிராமம் / சிறு நகரமே ஒரே வாய்ப்பாக இருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான மகளிர்க்கு வேலை கிடைக்காமலோ அல்லது மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு போகும் சூழலோ இருந்தது.

வேறு ஊருக்கு சென்று வேலை பார்ப்பதென்றால், பேருந்துப் பயனச் செலவே பெரும்பான்மையாக இருக்கும். ஆகையால், தங்கள் ஊர்களை விட்டு வெளியே செல்லாமலே இருந்தனர். இந்த இலவச பெருந்துப் பயணம் அப்படிப்பட்ட மகளிர்க்கு, சிறகுகளை கொடுத்துள்ளது. இனி அவர்கள் எங்கு வேண்டுமானாலும் வேலைக்குச் செல்லலாம். அதிக சம்பளம் எங்கு கிடைக்கிறதோ, அங்கு வேலைக்குச் செல்லலாம்.

இதன் விளைவாக பெண்கள் அவர்கள் சார்ந்த குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தன்னிறைவு, தொழிற்சாலைகளுக்கும், நிறுவனங்களுக்கும் அதிக அளவில் women power கிடைத்தல், அதன் வாயிலாக அரசிற்கு வரி வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு வருமானம் கிடைக்கும்.

மேற்கண்ட திட்டங்களைப் போல், குறுகிய காலத்தில் இதனுடைய பயனை தெரிந்துகொள்ள முடியாது. இது ஒரு சிறிய பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு மட்டுமே. அது புயலாக மாறுவது எப்பொழுது என்பதை ஒரு சில மக்களால் கண்டுகொள்ள முடியாது.

மகளிர் உரிமைத் தொகை - மகளிரைத் தவிர மற்ற அனைவரும் இதைப்பற்றி பேசுகின்றனர். பணம் இருக்கின்றதே என்று அனைவருக்கும் கொடுத்து விடாமல், சரியான பயனாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மட்டுமே சென்று சேரும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது இந்த திட்டம். இந்த உரிமைத் தொகையை பெரும் மகளிர்க்கு, இது ஒரு உயிர் காக்கும் தொகையே அன்றி வேறெதுவுமில்லை.

மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச அரிசித் திட்டங்களில் ஏற்பட்ட பயன்களை 50 வருடங்கள் கழித்து GDP வளர்ச்சியாகவும், GER வளர்ச்சியாகவும், தொழில்துறை வளர்ச்சியாகவும் பார்க்கிறோம். மகளிர் இலவச பேருந்துப் பயணம் மற்றும் உரிமைத் தொகைகளின் சாதகங்களை நாம் கண்டறிய போதுமான தரவுகள் கிடைக்க நமக்கு இன்னும் 10 வருடங்களாவது ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Economics of Freebies in Tamilnadu; How does it Help Tamilnadu people and economy

கருத்துகள் இல்லை: