வியாழன், 10 ஆகஸ்ட், 2023

‛‛9 மணி’’.. ஆமாவா.. இல்லையா! செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரிப்பது எப்படி? பரபர தகவல்

 tamil.oneindia.com  - Nantha Kumar R   : சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருதவாக மோசடி செய்த புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று 4வது நாளாக விசாரணை நடக்க உள்ள நிலையில் அதுபற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்த்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது.


இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போதுநெஞ்சு வலிப்பதாக அவர் கதறிய நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்ததோடு அவரை கைது செய்தனர்.

இதையடுத்து இதயத்தில் இருந்த அடைப்பு காரணமாக அவருக்கு தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியை வரும் 12ம் தேதி வரை மொத்தம் 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கடந்த 7 ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அன்று இரவிலேயே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணையை தொடங்கியது.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று 4வது நாள் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அமலாக்கத்துறை விசாரணை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வழக்கு குறித்து பல்வேறு கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேள்விகள் கேட்டுள்ளனர். இதில் ஆம், இல்லை என்ற அடிப்படையிலான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் செந்தில் பாலாஜிக்கு செந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் நில ஆவணங்கள், ரூ.22 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதுபற்றியும், பினாமிகளின் பெயர் விபரங்கள் பற்றியும், தம்பி அசோக் எங்கு உள்ளார்? என்பது பற்றியும் அமலாக்கத்துறையினர் கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு செந்தில் பாலாஜி அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக அமலாக்கத்துறை விசாரணை என்பது ஒருவரிடம் 12 மணிநேரத்தையும் தாண்டி நடக்கும். ஆனால் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவரிடம் 9 மணிநேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இரவு 9 மணிக்கு மேல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டாம் என அவரது உடல்நலத்தை பரிசோதிக்கும் இஎஸ்ஐ மருத்துவமனை டாக்டர்கள் அமலாக்கத்துறையினரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: