புதன், 26 ஜூலை, 2023

கை கழுவும் ஸ்டாலின்? ...சிறையில் செந்தில்பாலாஜி மௌன விரதம்!

 minnambalam.com  -  Aara :  வைஃபை ஆன் செய்தவுடன் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பான சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் நடந்த விசாரணை தொடர்பான அப்டேட்டுகள் இன்பாக்சில் இடம் பிடித்திருந்தன.
“ஆகஸ்டு 8 வரை இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தால் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே   புழல் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு பிரிவினர் மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுத்து வந்த செந்தில்பாலாஜி தற்போது சிறையில் உள்ள பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


காவேரி தனியார் மருத்துவமனையில் பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்ட செந்தில்பாலாஜி கடந்த ஜூலை 17 ஆம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். உயர் பாதுகாப்பு பிரிவில் இருப்பவர்களுக்கான மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார் செந்தில்பாலாஜி.

அதன் பின் திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர், இரண்டு ஆண் செவிலியர்களை ஷிப்ட் முறையில் கவனித்துக்கொள்ள டெபுடேஷனாக அனுப்பி வைத்தார்.

அவர்கள் தினந்தோறும் செந்தில் பாலாஜியை சந்தித்து ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை (பிபி) ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்கிறார்கள். இதய சிகிச்சைக்கான மருந்துகளான  Aspirine , clopilet. Atrovastine  காம்பினேஷனாக  மாத்திரை கொடுத்து வருகிறார்கள்.

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் ட்ரசிங் ஏதும் செய்வது இல்லை. காவேரி மருத்துவ மனையில் கொடுத்த ஆயில்மென்ட்டை  தனக்குத் தானே தினம்தோறும் அப்ளை செய்துகொள்கிறார்  செந்தில்பாலாஜி. வியர்க்காத அளவுக்கு நடை பயிற்சி மேற்கொள்ளும் செந்தில்பாலாஜி… மருத்துவர்கள், சிறை அதிகாரிகளிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறாரே தவிர மற்ற அனைத்து நேரத்திலும் மௌனமாகவே இருந்து வருகிறார்.

காலை எழுந்ததில் இருந்து இரவு உறங்கச் செல்வது வரை அவர் பேசும் வார்த்தைகளை ஒன்று, இரண்டு என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க மௌனமாகவே இருக்கிறார்.

அவர் புழல் சிறைக்கு வந்ததில் இருந்து குடும்பத்தினர் அவரை சந்திக்கவில்லை. கட்சியினர் யாரும் சென்று மனு போட்டு சந்திக்கவில்லை. ஏற்கனவே ஜூன் 13 அன்று நள்ளிரவு ஜூன் 14 அதிகாலை செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது ஓமந்தூரார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அப்போது முதல்வரில் இருந்து உதயநிதி, சபரீசன் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் சென்று பார்த்தனர். ஆனால் காவேரி மருத்துவமனையில் அவர் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு கட்சியினர் யாரும் செந்தில்பாலாஜியை ஒரு நோயாளி என்ற அடிப்படையில் கூட சென்று பார்க்கவில்லை.

செந்தில்பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று பார்க்கலாமா என்று சில அமைச்சர்கள் அப்போது முதலமைச்சரிடம் அனுமதி கேட்டபோது கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இப்போது புழல் சிறைக்கு சென்ற பிறகும் அவரை மனு போட்டு சந்திக்க திமுகவினர் யாரும் அங்கே செல்லவில்லை. அமைச்சர்கள் சிறைக்கு சென்று சந்திப்பதில் அரசியல் ரீதியான சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் கூட சென்று பார்க்கவில்லை.

காவேரியில் மருத்துவமனையில் இருந்தபோதே முதல்வரிடம் சில விஷயங்களை சொல்ல முயற்சித்தார் செந்தில்பாலாஜி. ஆனால் முடியவில்லை.  இந்த நிலையில் ஆரம்பத்தில் செந்தில்பாலாஜி மீது காட்டிய பிடிமானத்தை திமுக தலைமை மெல்ல மெல்ல தளர்த்தி வருகிறதோ என்ற என்ணம் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. இதே எண்ணம் செந்தில்பாலாஜிக்கும் ஏற்பட்டுள்ளதால்தான் அவர் சிறையில் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்கிறார் என்கிறார்கள் சிறை வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: