திங்கள், 31 ஜூலை, 2023

தென் மாவட்ட திமுகவில் சாதி மோதல் அபாயம்: ஸ்டாலினிடம் எச்சரித்த நிர்வாகிகள்!

 /மின்னம்பலம் - Aara :  மணிப்பூர்  விவகார கண்டன ஆர்பாட்டத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து… திமுகவில் தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சிவபத்மநாதனை கடந்த ஜூலை 26 ஆம் தேதி பதவியில் இருந்து நீக்கி முரசொலியில் அறிவிப்பு வெளியானது. தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்படுகிறார் என்றும் அந்த அறிவிப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயபாலன் அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை ஜூலை 28 ஆம் தேதி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வழக்கமாக புதிய மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படும்போது அவர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம்தான். ஆனால் தென்காசி விவகாரத்தில் வழக்கத்துக்கு மாறாக நடந்தது என்னவென்றால்…புதிய மாவட்டப் பொறுப்பாளரை சந்தித்த சில நிமிடங்களிலேயே, நீக்கப்பட்ட மாசெ-வான சிவபத்மநாதனையும் சந்தித்துள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்.



தென்காசி மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அமைதியாக இருந்த சிவபத்மநாதனையும் அறிவாலயத்துக்கு வரச் சொல்லி உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் தகவல் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். மூலமாக சிவபத்மநாதனுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சமீபத்தில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ நீக்கப்பட்ட அப்துல் வகாப், ஆவடி நாசர் உள்ளிட்ட யாரையும் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சந்தித்துவிடவில்லை. ஆனால் தென்காசி சிவபத்மநாதனை மட்டும் ஏன், புதிய மாவட்டப் பொறுப்பாளரை சந்திக்கும் அதே நாளில் வரச் சொல்லியிருக்கிறார் என்ற கேள்வி தென்காசி திமுகவில் விவாதமாகியது.

தகவல் வந்ததும் சிவபத்மநாதன் தனது ஆதரவு ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், அணி அமைப்பாளர்கள் என்று 40 மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
28 ஆம் தேதி பகல் தென்காசி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஜெயபாலனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த சில நிமிடங்களில்… நீக்கப்பட்ட சிவபத்மநாதனை அழைத்தார்.

அவர் உள்ளே சென்றபோது இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ஆகியோர் உடன் இருந்தனர். சிவபத்மநாதன் தன் கையில் வைத்திருந்த விளக்க கடிதத்தை முதல்வரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட முதல்வர், பத்து நிமிடங்கள் சிவபத்மநாதனிடம் பேசிவிட்டு அனுப்பினார். இதன் அடுத்த திடீர் திருப்பமாக சிவபத்மநாதனோடு வந்த 40 நிர்வாகிகளையும் உள்ளே அழைத்தார் ஸ்டாலின்.

உள்ளே தென்காசி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் சென்றனர்.

அவர்களிடம், ‘600 கிலோ மீட்டர் தாண்டி வந்திருக்கீங்க. அங்க என்ன நடந்துக்கிட்டிருக்கு கட்சியில?’ என்று பொதுவாகக் கேட்டுவிட்டு… சுந்தர மகாலிங்கத்தைப் பார்த்தார். அதற்கு அவைத் தலைவர், ‘தலைவரே… அன்னிக்கு நடந்த சம்பவத்துல மாவட்டச் செயலாளருக்கு எந்த சம்பந்தமும் இல்லீங்க தலைவரே… ரொம்ப நாளா திட்டம்போட்டு மாவட்டத்துக்கு எதிராக செய்யணும்னு கட்சிக்கு எதிரா அப்படி ஒரு சம்பவத்தை செஞ்சிருக்காங்க. அதுமட்டுமில்ல தலைவரே… இதுல சாதியும் முக்கிய காரணமா இருக்குது. நீங்க கவனிச்சு தலையிடலேன்னா வம்பாயிடும் தலைவரே… ’ என்று கூறியிருக்கிறார்.

மாவட்ட மகளிரணி இணைச் செயலாளரான கனிமொழி முதல்வரிடம், ‘தலைவரே…அந்த தமிழ்ச்செல்வி என்னோட வார்டுக்கெல்லாம் நிதியே ஒதுக்கறதில்லை. அதனால நான் எதிர்த்துக் கேட்டேன். நான் மாவட்டம் சொல்லிதான் செய்யுறதா அந்த அம்மா தப்பா நெனைச்சிட்டாங்க. மகளிரணி பதவியும் அவங்க கேட்டாங்க. அது கெடைக்காததால இப்படி பண்ணியிருக்காங்க’ என்றார். இப்படியாக பலரும் சிவபத்மநாதனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.

அப்போது அன்பகம் கலையிடமும், பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆரிடமும் பேசிய ஸ்டாலின், ‘ஆளுங்கட்சியோட மாவட்டச் செயலாளர் எவ்வளவு முக்கியமான பதவி. அதுலயும் தென்காசிக்கு அமைச்சரும் இல்ல. மாவட்டம் தான் மந்திரி. அந்த ஆர்ப்பாட்டத்துல அப்படி சம்பவம் நடந்திருக்கக் கூடாது. கனிமொழியும் மாவட்ட செயலாளர மாத்தியாகணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க ’ என்றார். அதன் பிறகு அனைவரையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

புதிய மாவட்டப் பொறுப்பாளர் ஜெயபால் ஆதரவாளர்களோ, ” நிர்வாகிகள் ஆதரவு இருக்கிறது என்பதற்காக மாவட்டப் பொறுப்பாளருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று சிவபத்மநாதனை அழைத்து முதல்வர் கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார்” என்கிறார்கள்.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளரை அழைத்து சந்தித்ததோடு இல்லாமல்… நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதனையும் அழைத்து முதல்வர் சந்தித்தது தென்காசி மாவட்ட திமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: