இதுகுறித்து திண்டுக்கல் வட்டாரத்தில் விசாரித்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.“அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் இருக்கும் நிலையில்… அடுத்து அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரணை திரும்பியது. அப்போது அமலாக்கத் துறையின் அடுத்த டார்கெட் இவர்தான் அவர்தான் என்று தற்போதைய அமைச்சர்களில் சிலரின் பட்டியலும் ஊடகங்களில் வெளியானது. ஆனால் அமலாக்கத்துறை அமைதியாக இருந்தது. இப்போதைக்கு அமலாக்கத்துறை வேறு யார் மீதும் திரும்பும் நிலையில் இல்லை என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
காரணம் செந்தில்பாலாஜி என்ற மெகா டார்கெட்டை சிறையில் வைத்தபோதும் அவரை கஸ்டடி எடுப்பதற்கு இன்று வரை உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை. செந்தில்பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும், நீதிமன்ற நடவடிக்கைகளால் அமலாக்கத்துறை தன் கடமையை செய்ய முடியாமல் போகிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.
இதையடுத்து செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத் துறை கஸ்டடி வழங்கலாமா வேண்டாமா என்ற தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதேநாளில்தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனின் கொங்கு நகர் வீடு- அலுவலகம், அவரது க.முத்துப்பட்டி தோட்ட வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு பத்து நாள் வந்தால் மூன்று மாதங்கள் நிறைவடையப் போகின்றன. ஆனால் இன்னமும் அவருக்கு நெருக்கமானவர்களைத் தேடித் தேடி அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
யார் இந்த வீரா சாமிநாதன், ஏன் இந்த ரெய்டு…
பல வருடங்களாக திமுக ஒன்றிய செயலாளராக இருக்கும் வீரா சாமிநாதன் அடிப்படையில் ஒரு ரஜினி ரசிகர். வீரா படம் வந்தபோது தன் பெயரோடு வீராவை சேர்த்துக் கொண்டார். அதுவே பெயராகிவிட்டது.
கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சாமிநாதன் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குக்கு மிகவும் நெருக்கமானவர். ஆரம்ப காலத்தில் விழுப்புரம் -பாண்டிச்சேரி சாலையில் பர்னிச்சர் கடை , பிறகு சென்னையில் எண்டர்பிரைசைஸ் நடத்தி வந்த சாமிநாதன் பிறகு ஃபைனான்ஸ் தொழிலில் இறங்கினார். மதுரை, சென்னை, கோவை, ஓசூர் என்று இவரது ஃபைனான்ஸ் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது.
இதெல்லாம் விட செந்தில்பாலாஜி அமைச்சரானதும் அசோக்கின் நெருக்கத்தைப் பயன்படுத்தி திண்டுக்கல், தேனி முதல் மதுரை வரை என ஐந்தாறு மாவட்டங்களில் பார் பொறுப்பு முழுதையும் கவனித்து வந்தவர்.
இத்தனை நாள் கழித்து ஏன் இவரைக் குறி வைத்து திடீர் ரெய்டு என்று அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘செந்தில்பாலாஜி பற்றி பிரதமர் அலுவலகமே சிறப்பு கவனம் எடுத்து விசாரித்து வருகிறது. காரணம் அவரைப் பற்றி டெல்லிக்கு சென்றிருக்கும் தகவல்கள்தான்.
சில மாதங்கள் முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார். திமுக 2024, 2026 தேர்தலை எதிர்கொள்வதற்கான பொருளாதார பலமாக செந்தில்பாலாஜி இருக்கிறார்.
அவரை முடக்கிவிட்டால் திமுகவின் பொருளாதார பலத்தில் அடித்தமாதிரிதான் என்று அதிமுகவினர் அமித் ஷாவிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்குப் பிறகு பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்த தகவல்கள் எடப்பாடி சொன்னதை விட ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்திருக்கின்றன.
செந்தில்பாலாஜி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல… தென்னிந்திய மாநிலங்களிலும் திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறுவதற்கு பொருளாதார ரீதியாக உதவ மெகா ப்ளான் போட்டிருக்கிறார். அதன் எதிரொலியாக 2024 தேர்தலுக்குப் பிறகு திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸோ அல்லது காங்கிரஸ் ஆதரவோடு மாநிலக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரோ ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படும்.
அந்தக் கூட்டணி ஆட்சியில் ஸ்டாலினை துணை பிரதமர் ஆக்க வேண்டும். அதற்கான செயல்திட்டங்களை தேர்தலுக்கு முன்னே வகுத்து தென்னிந்தியா முழுமைக்கும் திமுக சார்ந்திருக்கும் அணிக்கு பொருளாதார வியூகங்களை வகுத்து வந்தார் செந்தில்பாலாஜி.
இந்தத் தகவல் கிடைத்த நிலையில்தான் செந்தில்பாலாஜியின் தென்னிந்திய நெட்வொர்க் பற்றி அதிரடியாக ஆராய்ந்தது அமலாக்கத்துறை.
செந்தில்பாலாஜியின் தென்னிந்திய நெட்வொர்க்கில் ஒருவர்தான் இந்த வேடசந்தூர் வீரா சாமிநாதன் என்றால் நம்ப முடிகிறதா? இவருக்கு திண்டுக்கல், கோவை முதல் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா வரை ஃபைனான்ஸ் நெட்வொர்க் இருக்கிறது.
இந்த பின்னணி எல்லாம் அறிந்துகொண்டுதான் செந்தில்பாலாஜியின் கடைசி கரன்சி நரம்பு வரை விடக் கூடாது என்ற பிரதமர் அலுவலகத்தின் உத்தரவோடு வேடசந்தூர் வரை தேடி வந்திருக்கிறது அமலாக்கத்துறை” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக