மின்னம்பலம் -christopher : மணிப்பூர் நிவாரண முகாம்களில் அடிப்படை வசதியின்றி மக்கள் படும் துயரங்களை காணும் போது மனதை உருக்குவதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் மணிப்பூர் கலவரத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை அறிவதற்காக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று (ஜூலை 29) டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து திமுக எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி ஆகியோரும் சென்றுள்ளனர்.
மதியம் 12 மணிக்கு இம்பால் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் சுராசந்த்பூர் நிவாரண முகாமுக்கும், பின்னர் கார் மூலம் பிஷ்னுபூர், மெய்ராங்க் உள்ளிட்ட 4 நிவாரண முகாம்களுக்கும் சென்றனர்.அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் பிரச்சனைகளையும் கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய், “இந்தியா கூட்டணி மட்டுமே மணிப்பூருக்குத் தொடர்ந்து வருகை தரும் ஒரே குழு. இங்கு நாங்கள் அமைதியை நிலைநாட்ட விரும்புகிறோம்.
மணிப்பூர் மக்களின் கவலைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம். பாதிக்கப்பட்ட மக்களும் அமைதியை தான் விரும்புகின்றனர், அனைவரும் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறார்கள்.
விரைவில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 2வது குழுவும் மணிப்பூர் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார்கள்” என்று தெரிவித்தார்.
மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அங்கு நிலவும் மோசமான நிலை குறித்தும் வேதனை தெரிவித்துள்ளனர்.
அங்கு சுமார் 500 பேர் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கழிப்பறை வசதியே இல்லை. குழந்தைகளுக்கு சாப்பிட எதுவும் கிடைக்காத சூழல் நிலவுகிறது. இத்தகைய முகாம்களில் மக்கள் வாழும் விதம் மனதை உருக்குகிறது. இதுகுறித்து மாநில பாஜக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி பூலோதேவி நேதம் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் மணிப்பூர் பயணத்தை சுற்றுலா என்று பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் குழு ஆளுநர் அனுசுயா உய்கே வசிக்கும் ராஜ்பவன் சென்றடைந்துள்ளது. அவரிடம் பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை 21 எம்பி.க்கள் கையெழுத்திட்டு அளிக்க உள்ளனர். மேலும் மாநிலத்தின் மோசமான நிலைமை குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் தெரிவிக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்த உள்ளனர்.
இதற்கிடையே மெய்தி இளைஞர்களால் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குக்கி பெண்களுக்கு மணிப்பூர் கவர்னர் நேற்று ரூ. 10 லட்சம் காசோலைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக