வெள்ளி, 16 ஜூன், 2023

போட்டி ஆட்சி நடத்துகிறாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?

  aramonline.in : செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போட்டி அரசா ஆளுநர் மாளிகை? அல்லது எதிர்கட்சி அரசியல் தலைவராகும் ஆசையா? அல்லது அவ்வப்போது கவனம் கவரும் அதிரடி அரசியல் ஆசையா? சட்டப் பூர்வமான ஆட்சியை சாய்த்து, சனாதன ஆட்சிக்கான வேட்கையா..? என்ன தான் திட்டம் வைத்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி?
2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், எதிர்க்கட்சி மாநில அரசுகளை எல்லாம் ஆளுநர்கள் ஆட்டி வைக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு முரணானது.
காங்கிரசின் ஆட்சி காலத்தில், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களில் ஆளுநர்கள் இப்போது நடப்பது போல செயல்படவில்லை. குஜராத்தில் மோடி ஆண்ட போது, அங்கே இருந்த ஆளுநர், இப்பொழுது ஆளுநர்கள் செயல்படுவது போல செயல்படவில்லை.   எப்போதாவது அத்தி பூத்தாற் போல் முதல்வருக்கும் ஆளுநருக்கு பிரச்சனைகள் எழலாம். தமிழ்நாட்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டி அவர்களுக்கும் இருந்த பிரச்சனையை சுட்டிக் காட்டலாம்.

தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாட்டைக் கூட்டிய தமிழ்நாடு ஆளுநர் ரவி , அவரது எல்லையை கடந்து மீண்டும் பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடுகள் திரட்டுவது சம்பந்தமாக நையாண்டி செய்துள்ளார் ஆளுநர் ரவி. ”முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று கேட்பதாலோ, நேரில் சென்று பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்! மக்களிடம் பேசி விளம்பரம் செய்வதைப் போல அவர்களை நம்ப வைக்க முடியாது…” என்று ஒரு எதிர்கட்சி அரசியல் தலைவரைப் போல பேசியுள்ளார்  ஆளுநர்.

ஆளுநரின் இந்த அடாவடி பேச்சுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனடியாக வினையாற்றி  நச்சென பதில் தந்துள்ளனர். மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது, பல நாடுகளுக்கு மூலதனம் திரட்ட சென்றது பற்றி ஆளுநரின் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதாவது, ஆளுநர் ரவிக்கு ஒன்றிய அரசு தான் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தொழில் செய்யுமாறு அழைக்கலாம், மாநில முதல்வர்களுக்கு எல்லாம் அந்த உரிமை கிடையாது என்ற கருத்தோட்டம் உள்ளது. இது மாநில உரிமைகளை மறுப்பதாகும்.


நமக்கு அந்நிய முதலீடு வருவது பற்றி ஆட்சேபனை இல்லை. அந்நிய முதலாளிகளுடன் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – மாநில அரசு போட்டாலும், ஒன்றிய அரசு போட்டாலும் – வெளிப்படையாக மக்கள் முன் வைக்கப்பட வேண்டும். அரசின் இணையதளங்களில் அவைகளை  வெளியிடப்பட வேண்டும்.

அனைத்து தனியார் துறைகளிலும், அந்நிய முதலாளிகள் நடத்தும் துறைகளிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும். குறிப்பாக, பொதுத்துறைகள் அனைத்தும் மூடப்பட்டு தனியார் துறைக்கு தாரைவாக்கப்படும் நிலையில், இந்த கோரிக்கையை உறுதியாக வைக்க வேண்டும். சமூக நீதி பேசும் திராவிட மாடல் தமிழ்நாடு அரசு முன் மாதிரியாக இருந்து இந்த கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசும், பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் தானே அகில இந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சென்று இந்தியாவிற்கு வழிகாட்டியது.

”திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்கினால் மட்டுமே, அந்நிய முதலீடுகளை கவர முடியும்” என்கிறார் ஆளுநர். அதாவது வெளி நாட்டு நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப உயிருள்ள கச்சா பொருளாக இளைஞர் சமுதாயத்தை அவர் பார்க்கிறார்! அந்த கச்சா பொருளை உற்பத்தி செய்து தரும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களை அவர் பாவிக்கிறார். இதைத் தான் நாம் ‘கல்வி குறித்த கார்ப்பரேட் பார்வை’ என்கிறோம்.

இந்தியாவின் வட மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. சிறந்த தரத்தில் உள்ளன! ஆனால், இதைப் பற்றிய எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல் ஆளுனர், தானே ஒரு தப்பபிப்ராயத்தை உருவாக்கிக் கொண்டு, அவ்வப்போது குதர்கமாகப் பேசி வருகிறார். எதைப் பற்றியுமே திறந்த மனதோடு தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக தன்னை நினைத்துக் கொண்டு, உளறிக் கொட்டுகிறார். கல்விப் புலத்தில் தமிழ்நாட்டிற்கான சில தனித்துவங்கள் முற்றாகத் தகர்க்கப்பட்டு, தேசிய கல்விக் கொள்கை இடம் பெற வேண்டும் என்பது அவரது தணியாத தாகமாக உள்ளது. இதையே அவர் துணைவேந்தர்கள் மாநாட்டிலும் பேசியுள்ளார்.


தமிழக அரசின் செலவில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களின் கூட்டத்தை கூட்டி, அதில் சம்பந்தமே இல்லாமல் தமிழக ஆட்சியாளார்களை விமர்சிப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

பல்கலைக் கழகங்கள் மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் தான் இருக்கின்றன. “பல்கலைக்கழகங்கள்” அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில பட்டியலில் தான் உள்ளன. தமிழ்நாடு சட்டசபை தான் பல்கலைக் கழகங்களை உருவாக்கி, சட்டங்களை இயற்றியுள்ளது. அப்படி சட்டங்களை இயற்றிய பொழுது, முந்தைய அரசுகள் செய்த தவறாலேயே அந்த சட்டங்களில் பல்கலைக் கழகத்தின் வேந்தராக ஆளுநர் இருப்பார் என்று ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

அந்த சட்டங்களை திருத்தி, மாநில அரசுக்கு அந்த அதிகாரத்தை அளிக்கும் சட்ட திருத்தத்தை சட்ட சபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினாலும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் வருட கணக்கில் வெறுமனே அமர்ந்திருக்கிறார் ஆளுநர். அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு அளிக்கும் அதிகாரத்தை காலில் போட்டு மிதிக்கிறார் ஆளுநர்.

தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ரவி இவ்வாறு தான் செயல்பட்டு வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி நமது மாநிலம் ‘தமிழ்நாடு’ என்று அழைக்கப்பட்டாலும், தமிழ்நாடு என்று அழைக்க மறுப்பது, மாநில அரசு தயாரித்த  உரையில், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், போன்ற பெயர்களை சட்டசபையில் உச்சரிக்க  மறுத்து, வெளி நடப்பு செய்தது… போன்றவை அவருக்குள்ள இந்திய மேலாதிக்க மனோபாவத்தையும், தமிழ்நாட்டின் தனித்துவத்தை ஏற்க மறுப்பதையுமே உறுதிபடுத்துகிறது.

தற்போதைய ஆளுநர் ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும், திமுக அரசும் உறுதியுடன் போராடி, அவரை நாகாலாந்தில் இருந்து விரட்டியதைப் போல தமிழ்நாட்டில் இருந்தும் மூட்டை, முடிச்சோடு அனுப்ப வேண்டும். அதற்கான காலம் வந்து விட்டது என்பதை  ஆளுநரின் சமீபத்திய பேச்சு- முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றது பற்றிய பேச்சு- உணர்த்துகிறது.

கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி

சென்னை உயர்நீதிமன்றம்

கருத்துகள் இல்லை: