வெள்ளி, 30 ஜூன், 2023

சுவீடனில் நேற்று குர் ஆன் எரித்து ஆர்ப்பாட்டம்; ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்தவரின் செயற்பாடு

 வீரகேசரி : சுவீடனில் நேற்று குர் ஆன் எரித்து ஆர்ப்பாட்டம்; ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்தவரின் செயற்பாடு
சுவீடனில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது, புனித குர் ஆன் நூல் எரிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் புனித குர் ஆன் தீக்கிரையாக்கப்பட்டது.
சல்வான் மோமிக்கா எனும் 37 வயதான நபரே இவ்வாறு குர் ஆன் நூலின் சில பக்கங்களை எரித்தார். இவர் சில வருடங்களுக்கு முன்னர் ஈராக்கிலிருந்து சுவீடனுக்கு வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சல்வான் மோமிக்கா அனுமதி கோரியிருந்தார். சுவீடன் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கியிருந்தனர்.


எனினும் ஓர் இனக்குழுமத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தமை தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக வெப்பம் காரணமாக, தீமூட்டுவதற்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டடுள்ள தடையை மீறியமை தொடர்பிலும் அவர் விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குர் ஆன் எரிப்பு ஆர்ப்பாட்டம் உட்பட இரு ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கும் பொலிஸாரின் தீர்மானத்தை சுவீடன் மேன் முறையீட்டு நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் நிராகரித்திருந்தது.

மேற்படி சம்பவத்துக்கு துருக்கி, ஈராக் உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நேட்டோ அமைப்பில் சுவீடன் இணைவதற்கு துருக்கி அங்கீகாரம் வழங்க மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் சுவீடனில் குர் ஆன் எரிக்கப்பட்ட சம்பவமும் துருக்கியின் எதிர்;ப்புக்கு காரணமாகும்.

கருத்துகள் இல்லை: