செவ்வாய், 27 ஜூன், 2023

மதிமுக எம்.எல்.ஏ பூமிநாதன் ராஜினாமா?

minnambalam.com -Selvam : : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தனது தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பணிகள் எதுவும் நடைபெறாததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் இருப்பதாக மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியில் 19-ஆவது மாமன்ற கூட்டம் இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை தாங்கினார்.
கூட்டம் துவங்கியதும் ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசி வந்தனர்.
மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் பேசும்போது, “எனது வார்டில் சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை பணிகளையும் இதுவரை துவங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் எதுவும் சொல்லவில்லை. துணை மேயர் என்ற பொறுப்பு பெருமைக்கா? துணை மேயராக இருக்கும் எனக்கே இந்த அவலநிலை நீடிக்கிறது” என்று கோபத்துடன் பேசி அமர்ந்தார்.

அவரை தொடர்ந்து மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் பேசும்போது, “எனது தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாமன்ற கூட்டங்களில் பல முறை பேசியும் மாநகராட்சி அதிகாரிகள், மேயர் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அந்த பகுதிகளுக்கு செல்லும் போது மக்கள் முற்றுகையிடுகின்றனர். இந்த பிரச்சனையை முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன்.

மக்களுக்கு சேவை செய்ய தான் இந்த பதவிக்கு வந்தேன். சேவை செய்ய வழியே இல்லாத நிலையில் பதவியை ராஜானிமா செய்யும் மனநிலையில் உள்ளேன்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி வெளியேறினார்.

மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ராஜினாமா செய்யப்போவதாக பேசியதால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

செல்வம்

கருத்துகள் இல்லை: