tamil.goodreturns.in - Prasanna Venkatesh : சர்வதேச வர்த்தகத்தில் டாலர் ஆதிக்கமாக இருக்கும் வேளையில் ஒவ்வொரு நாடும் தனது ஏற்றுமதி இறக்குமதிக்கு சொந்த நாணயத்தை டாலராக மாற்ற பேமெண்ட் செய்து வந்தது. இதனால் டாலருக்கான டிமாண்ட் அதிகரித்து பிற நாணயங்களின் மதிப்பு சரிய துவங்கியது.
இந்த நிலை ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு தலைகீழாக மாறியுள்ளது. முதலில் ரஷ்யா அரசு தான் விற்பனை செய்யும் கச்சா எண்ணெய்-க்கு யுவான் மற்றும் ரூபாயில் செலுத்த சீனாவுக்கும் இந்தியாவுக்கும் வழிவகை செய்தது. இதன் மூலம் ரஷ்யா சர்வதேச பொருளாதார தடைகளை தகர்த்து தொடர்ந்து உலக நாடுகள் உடன் வர்த்தகம் செய்ய முடியும்.
ரஷ்யாவுக்கு இது பெரிய அளவில் பலன் கொடுத்த நிலையில் உள்நாட்டு நாணயங்களில் பணத்தை செலுத்த இந்தியா, சீனாவுக்கு மட்டும் அல்லாமல் தான் ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் இந்த சலுகையை வழங்கியது. பின்னாளில் உலக நாடுகளுக்கு தனக்கு விருப்பமான நாணயத்தில் பேமெண்ட் செலுத்தவும் சலுகை வழங்கியது.
இதை தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்தில் நிலுவையில் பணத்தை டாலருக்கு பதிலாக சீனாவின் யுவான் நாணயத்தில் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் படி தற்போது பங்களாதேஷ் நாட்டில் கட்டப்பட்டு வரும் ரூப்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு (Rooppur power plant) செலுத்த வேண்டிய 110 மில்லியன் டாலர்களை யுவான் நாணயத்தின் வாயிலாக செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளின் De-Dollarisation முயற்சிகள் தீவிரம் அடைந்து வரும் வேளையிலும், பிரிக்ஸ் நாடுகள் பொதுவான பிரிக்ஸ் நாணய பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வரும் வேளையில் பங்களாதேஷ் இந்த அறிப்பை வெளியிட்டு உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை உள்ளது.
அமெரிக்கா தலைமையிலான ஜி7 நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக நிற்கும் வேளையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அள்ளி வீசியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச வங்கி அமைப்பில் இருந்து ரஷ்யா முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.
பேமெண்ட் வழிமுறைக்காக பல மாதங்கள் போராடிய ரஷ்யா கொண்டு வந்த திட்டம் தான் De-Dollarisation முயற்சிகள். இதன் ஒரு பகுதியாக தான் உள்நாட்டு நாணயத்தில் பேமெண்ட்-ஐ ஏற்கிறது ரஷ்யா. ரஷ்யா மற்றும் பங்களாதேஷ் நிதி அமைச்சகத்தின் உயர்மட்டக் குழு ஒன்று கடந்த வாரம் யுவான் நாணயத்தில் பேமெண்ட் செலுத்தலாம் என்று ஒப்புக்கொண்டது.
பங்களாதேஷின் நிதியமைச்சகத்தின் பொருளாதார உறவுப் பிரிவின் (ERD) கூடுதல் செயலாளர் உத்தம் குமார் கர்மேக்கர் கூறுகையில் ரஷ்ய வங்கிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் காரணமாக, எங்களால் அமெரிக்க டாலரில் பணம் செலுத்த முடியவில்லை. ரஷ்யா அவர்களின் கரன்சியான ரூபிள்களில் பணம் செலுத்தச் சொன்னது, ஆனால் அது சாத்தியமில்லை என்பதால் நாங்கள் யுவான் நாணயத்தை தேர்ந்தெடுத்தோம் என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக