minnambalam.com -Selvam : டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (ஏப்ரல் 16) ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இது தேசிய அரசியலில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மதுபான ஊழல்!
2021-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்தில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லியில் 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுபான விற்பனை செய்ய உரிமங்கள் வழங்கப்பட்டது.
மதுபான உரிமங்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். இதனை தொடர்ந்து புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்பட்டது. புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை காலை 11 மணிக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்த நிலையில்… கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் சிக்கியது எப்படி?
அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், “மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான Indo Spirits நிறுவனர் சமீர் மகேந்துருவிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ காலில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயர் ஏற்பாடு செய்துள்ளார்.
சமீர் மகேந்துருவிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ”விஜய் நாயர் நம்முடைய ஆள் தான். நீங்கள் அவரை நிச்சயமாக நம்பலாம். மதுபான உரிமம் வாங்குவதற்காக அவர் உங்களுக்கு உதவிகள் செய்வார்” என்று கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் செளத் குரூப் தொழிலதிபர்கள் குழு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை விஜய் நாயருக்கு கொடுத்துள்ளது. இந்த பணத்தை 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியுள்ளது. இதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்கப்படும்.
இந்த செளத் குரூப்பில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, சரத் ரெட்டி, சமீர் மகேந்துரு, அருண் ராமச்சந்திர பிள்ளை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் மகுந்தா ஸ்ரீனிவாசலா ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுந்த்ரா, அபிஷேக் போயினபள்ளி, புட்ச்சி பாபு கொரண்டலா ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர்.
ஒஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகுந்தா ஸ்ரீனிவாசலா ரெட்டியை அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் சந்தித்து மதுபான விற்பனை செய்ய உள்ளதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
கவிதாவின் கணக்காளர் புட்ச்சி பாபுவிடம் நடத்திய விசாரணையில், “இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினர் கவிதா ஆகிய மூவருக்கும் அரசியல் ரீதியான புரிதல் உள்ளது.
2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் விஜய் நாயரை கவிதா சந்தித்து மதுபான உரிமம் வாங்குவது தொடர்பாக பேசினார்.” என்று கூறியுள்ளார்.
மணிஷ் சிசோடியாவின் உதவியாளர் அரவிந்திடம் நடத்திய விசாரணையில், “அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வைத்து மதுபான கொள்கை வரைவு அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். இந்த சந்திப்பின் போது அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் ஆகியோர் இருந்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அப்போது மதுபான கொள்கை தொடர்பான முக்கிய விவாதங்கள் ஏதேனும் நடைபெற்றதா என்று அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் பிப்ஹாவ் குமாரிடம் நடத்திய விசாரணையில் 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2022-ஆம் ஆண்டு ஜூலை வரை மூன்று முறை தனது தொலைபேசி எண்ணை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் – பாஜக சொல்வது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசு உச்சி முதல் பாதம் வரை ஊழலால் நிறைந்துள்ளது. சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால் அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டம் முடிவடைந்து விடாது” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா கூறுகையில், “மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் சிக்கியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ், சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் ஆகிய மூவரும் ஒரே சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் சவுத்ரி, “அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதன் மூலம் இந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் சிறைக்கு செல்லும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
சிபிஐ வழக்கில் சிக்கிய முதல்வர்கள், அமைச்சர்கள்!
இதற்கு முன்பாக செராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் 2010-ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் அமைச்சராக இருந்த அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார். 2015-ஆம் ஆண்டு அமித்ஷாவை இந்த வழக்கில் இருந்து மும்பை நீதிமன்றம் விடுவித்தது.
2012-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான வசுந்தரா ராஜே அரசில் அமைச்சராக இருந்த ராஜேந்திர ரத்தோரை ரவுடி தாரா சிங்கின் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ கைது செய்தது.
கர்நாடகா பெல்லாரியில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில் பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசில் அமைச்சராக இருந்த கலி ஜனார்தன ரெட்டியை 2011-ஆம் ஆண்டு சிபிஐ கைது செய்தது.
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் சுரங்க உதவிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக 2012-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பாஜக முதல்வராக இருந்த எடியூரப்பா, அவரது மகன்கள் பி.ஒய்.விஜேயந்திரா, ராகவேந்திரா, மருமகன் ஆர்.என்.சோகன் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து 2016-ஆம் ஆண்டு எடியூரப்பா விடுவிக்கப்பட்டார்.
உத்தரபிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான அரசில் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்த பாபு சிங் குஷ்வாஹா மீது தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல் செய்தாக 2012-ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் 2017-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி அரசு 2011-ஆம் ஆண்டு ஜிந்துஜா குழுமம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஜெகன் மோகன் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக