/thesamnet. அருண்மொழி : குரங்குகள் கொள்வனவிலும் வல்லரசு போட்டி – சீனாவை அடுத்து அமெரிக்காவுக்கும் பறக்கவுள்ள இலங்கை குரங்குகள் !
இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் குரங்குகளைப் பெற சீனா தயாராகி வரும் நிலையில் , அமெரிக்காவும் இலங்கையில் இருந்து குரங்குகளைப் பெற விண்ணப்பித்துள்ளது.
எனினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளின் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் , சீனாவுக்கு 100,000 குரங்குகளை வழங்குவதற்கான வழிமுறைகளை தயாரிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர,
இந்நாட்டு குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே பொருத்தமானது எனவும்,அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் என எவரும் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் 30 இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருவதாகவும், அதிகரித்து வரும் குரங்குகளின் எண்ணிக்கையினால் பயிர்கள் அதிகளவில் சேதமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குரங்குகளின் மனித குணங்கள் காரணமாக, மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த விலங்குகளுக்கான தேவை அதிகமாக உள்ளது.
மேலும் இந்த வணிகத்தின் வருமானமானது குரங்குகளை உயிரியல் பூங்காக்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது
மேலும், குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் குரங்குகளின் சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் இந்நாட்டில் வாழும் சில குரங்கு இனங்கள் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தினால் (IUCN) அழிந்து வரும் விலங்கினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS), சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ), சுற்றுச்சூழல் அமைப்புகளின் கூட்டமைப்பு (FEO) மற்றும் பல அமைப்புகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக