கிருஷ்ணகிரி அருகே தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்ட சுபாஷ்.
கிருஷ்ணகிரி அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மகனை அவரது தந்தையே வெட்டிக் கொன்றதாகவும் தடுக்க முயன்ற தனது தாயையும் அவர் கொலை செய்ததாகவும் அவரது தாக்குதலில் படுகாயமடைந்த மருமகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ், திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது உடன் பணிபுரிந்த, வேறு சாதியைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணை அவர் காதலித்துள்ளார்.
சாதியை காரணம் காட்டி மகனின் காதலுக்கு தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதலைக் கைவிடுமாறு சுபாஷிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், தந்தையின் வார்த்தைகளை நிராகரித்து விட்ட சுபாஷ் இரண்டு வாரங்களுக்கு முன்பு அனுசுயாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மணமாகி 15 நாட்களுக்குப் பிறகு, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று சொந்த ஊரான அருணபதி கிராமத்தில் தனது பாட்டி கண்ணம்மா(தண்டபாணியின் தாய்) வீட்டுக்கு சுபாஷ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இதை அறிந்து அங்கு சென்ற தண்டபாணி, அரிவாளைக் கொண்டு தனது மகன் சுபாஷ், மருமகள் அனுசுயாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதைத் தடுக்க முயன்ற தனது தாய் கண்ணம்மாவையும் தண்டபாணி தாக்கியுள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் தண்டபாணி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்தத் தாக்குதலில் தண்டபாணியின் மகன் சுபாஷ் மற்றும் அவரது தாய் கண்ணம்மா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மருமகள் அனுசுயா படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகனையும், தாயையும் ஆணவக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தண்டபாணி
அனுசுயா காயங்களுடன் தப்பியது எப்படி?
பாட்டி கண்ணம்மாவின் வீட்டிற்குச் சென்ற மகன் சுபாஷையும் மருமகள் அனுசுயாவையும் தண்டபாணி சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது, வெட்டுக்காயங்களுடன் ஒருவழியாக வீட்டை விட்டு வெளியே தப்பி வந்த அனுசுயாவை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர். மக்கள் கூடுவதைக் கண்டதும் தண்டபாணி தப்பி ஓடிவிட்டார் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
அனுசுயாவை மீட்ட பொதுமக்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கே தீவிர சிசிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, மருத்துவமனைக்குச் சென்று அனுசுயாவிடம் வாக்குமூலம் பெற்றார்.
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அனுசுயா, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டபாணியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவின் கீழ் வழக்கு, கொலை வழக்கு, உள்ளிட்ட (307, 302) மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணை அதிகாரி ஆய்வாளர் பார்த்தீபன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
சுபாஷ். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக