BBC News, தமிழ் : இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுமா என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
அதற்கு சிங்கள மொழியில் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதிலின் ஊடாக, இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக வெளிப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் இந்த இருவருக்கும் இடையே நடந்த கேள்வி - பதில் உரையாடலின் விவரம்:
கேள்வி (விஜித்த ஹேரத்):- தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியில், இந்திய படகுகள் நாட்டிற்குள் வந்தால், துப்பாக்கி சூடு நடத்தப்படும் என மன்னாரில் சென்று கூறியிருந்தார். தற்போது அவர் ஜனாதிபதி. இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற விதத்தில் அமல்படுத்த முடியுமா?
பதில் (டக்ளஸ் தேவானந்தா):- அவர் எனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளார். நான் அதனை செயற்படுத்துகின்றேன்.
உண்மை என்ன?
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு வினவியது. "இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை," என டக்ளஸ் தேவானந்தா பதில் அளித்தார். இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முழு அதிகாரத்தையே ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் சிங்கள மொழியில் பதிலளித்தமையினால் ஏற்பட்ட மொழி பிரச்சினையே, தனது பதில் திரிவடைவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். அதைவிடுத்து, துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அதிகாரம் தனக்கு வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக