அதுவரை நாம் பார்த்து பழகிய விதங்களில் இருந்து ஒரு மாறுதல். அந்த மாறுதல் ஸ்டைலாக இருந்தது.
புதிய உலகம் போல தெரிந்தது. பிபிசி செய்திகளின் தரம் அதில் தெரிந்தது.
ஆச்சரியமாய்ப் பார்த்திருக்கிறேன்.
NDTV என்ற பெயரை இந்தியாவெங்கும் அவர்கள் பரப்பிய காலம் அது.
செய்திகளாக மட்டுமல்லாமல் அதன் பின்னணியைப் பற்றி பேசுவார்கள்.
குறிப்பாக தேர்தல் சமயத்தில் அவர்கள் ஒவ்வொன்றையும் அலசுகிற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எத்தனையோ ஆங்கில செய்திஊடகங்கள் இந்த இருபதாண்டு காலங்களில் வந்துவிட்டன.
ஆனால் அதற்கான முன்னோடியாக என்டிடிவி இருந்திருக்கிறது. இந்த என்டிடிவிக்கு நேர்ந்த கதை தான் எல்லோராலும் பரபரப்பாய் பேச வைத்துவிட்டது.
ஒரு நாட்டின் ஆரோக்கியம் என்பது அது எப்படி கேள்விகளை எதிர்கொள்கிறது என்பதில் தான் இருக்கிறது. கேள்விகள் இல்லையென்றால், அங்கு பிரச்சனையே இல்லை என்ற அர்த்தமல்ல,
கேள்விகள் கேட்கபப்டுவதில்லை என்று அர்த்தம். அப்படி கேள்விகளை இல்லாமல் ஆக்குவதற்கு பதிலாக கேள்வி கேட்பவர்களை இல்லாமல் செய்துவிடுதல் எளிமையானது என்று ஒரு அரசு நினைக்கிறது. அதன் விளைவு தான் ஊடகங்கள் ஒவ்வொருக்கும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தி அதனை அமைதியடையச் செய்வது. சில நேரங்களில் இடத்தைக் கொடுக்கவில்லை என்றால் மடத்தைப் பிடுங்கும் கதையும் நடக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகளை நடத்துவது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கும்படி மாறி விட்டது.
ஊடக தர்மம் போன்ற தார்மீகங்களையெல்லாம் கடந்து இலாபமே ஊடகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஊடகங்களின் இப்பொருளாதார நிலையிலிருந்து அவற்றை கைதூக்கி விடுவது அரசால் மட்டுமே சாத்தியம். அரசு அளிக்கும் விளம்பரங்களே ஊடகங்களை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன என்பது யதார்த்தம்.
குறிப்பாக கொரொனா ஊடகங்களின் முதுகெலும்பை முறித்தே விட்டது. முரண் என்னவென்றால் ஊடகங்களுக்கு செய்திகள் கிடைத்துக் கொண்டே இருந்தான். ஆனால் அதை வெளியிடுவதற்கான நடைமுறை ஒத்துழைக்கவில்லை. விளம்பரதாரர்கள் இருந்தால் தானே ஊடகம் நடத்த முடியும். வியாபாரம் ஆகவில்லை எனும்போது விளம்பரதாரர்கள் எப்படி ஊடகங்களுக்கு விளம்பரம் தருவார்கள்?
இப்படி கடுமையான பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த ஊடகங்களுக்கு மத்திய அரசு விளம்பரங்களின் வாயிலாக ஆண்டுக்கு 2500 கோடியை வழங்கிக் கொண்டிருந்தது. எல்லா அரசுகளுமே, விளம்பரங்களை வைத்து, ஊடகங்களை வளைக்க முயற்சி செய்தன என்றாலும், மோடி அரசு, ஊடகங்களை விளம்பரங்களை வைத்து மிரட்டி, அவர்களை அடி பணிய வைத்தது. மோடிக்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு விளம்பரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது நேரடியாக உணர்த்தப்பட்டது.
ஏறக்குறைய அனைத்து ஊடகங்களுமே, அரசு சொல்வதை கேட்கத் தொடங்கின. இந்நிலையில் ஒரு மாறுபட்ட குரலாக, மக்களின் குரலாக, அரசின் நெருக்கடிகளுக்கு அடிபணியாமல் இருந்த ஒரு தொலைக்காட்சி செய்தி நிறுவனம் தான் NDTV.
கொரோனா காலகட்டத்தில் இந்தியத் தலைநகரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் தவித்தபோது பிஜேபி அமைச்சர்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை வைப்பதற்கு இடமில்லாமல் நாங்கள் திண்டாடுகிறோம். அதை வைப்பதற்கு கூட டெல்லி அரசு எங்களுக்கு இடம் தரவில்லை என்று கூசாமல் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் மரணமடைந்தவர்களை எரியூட்டக்கூட சுடுகாட்டில் இடமில்லாமல் மக்கள் சடலங்களை வைத்துக் கொண்டுவரிசையில் நின்றனர். கொரோனா இறப்பு என்பதை மாற்றி ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்பு என்று தொடர்ந்து அந்த நேரத்தில் செய்தியை வெளியிட்டுக் கொண்டுருந்தது என்டிடிவி. அந்த நேரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது நீதிபதிகள் மத்திய அரசிடம் என்டிடிவியில் காட்டப்பட்ட காட்சிகளையும் செய்திகளையும் கொண்டே கேள்விகளை முன்வைத்தார்கள்..அந்தக் காட்சிகளை வைத்து தான், “உண்மை நிலை இப்படியிருக்க..நீங்கள் ஏன் மாற்றிப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். Delhi’s 9 days of Covid Hell என்று அந்த நேரத்தில் என்டிடிவியால் எடுக்கப்பட்ட செய்திக் காட்சிகள் பல இலட்சக்கணக்கானவர்களை அடைந்தது. டெல்லியின் மறைக்கப்பட்ட உண்மை நிலையை களத்தில் நேரடியாக நெருக்கமாக நின்று நமக்குக் காட்டினார்கள். அதற்காக என்டிடிவிக்கு ஊடகத்துறையின் உயரிய விருதுகளும் வழங்கப்பட்டன.
போலி செய்திகளும் கள நிலவரங்களும் என்கிற தலைப்பில் என்டிடிவி தொடர்ந்து புலனாய்வு உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை ‘லவ் ஜிகாத்’ என்கிற பெயரில் ஏமாற்றுகிறார்கள் என்பது பெருமளவில் போலி செய்திகளாக பரப்பப்பட்டன. உண்மையில் என்ன தான் நடக்கிறது என்று என்டிடிவி இறங்கி படம்பிடித்தார்கள். இந்தப் போலி செய்திகள் முழுவதும் தேர்தல் நேரத்துக்காக பரப்பப்பட்டன என்பதை ஆதாரத்துடன் விளக்கினார்கள்,
இவை இரண்டும் சமீப காலத்தில் அதிகம் பேசப்பட்ட என்டிடிவியின் புலனாய்வு செய்திகள்.
NDTV அரசின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது என்பதும் உண்மை.
NDTVயை எப்படியாவது மிரட்டி பணிய வைக்க வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதை உறுதியாகவே NDTV எதிர்கொண்டது.
2014
முதல், இந்திய ஊடகங்கள் அத்தனையும், பிஜேபியின் ஊதுகுழலாக மாறி, அரசுக்கு
துதிபாடிக்கொண்டும், மதவெறியைத் தூண்டிக் கொண்டும் இருக்கையில், NDTV
மட்டும் ஒரு இரும்புத் தூண் போல உறுதியாக அனைத்து அழுத்தங்களையும்
எதிர்த்து நின்றது உண்மையே.
இந்த
வாரம், மோடியின் நெருங்கிய நண்பரும், ஆசியாவின் பெரும் பணக்காரர்களில்
ஒருவருமான அதானி NDTV குழுமத்தின் பங்குகளை வாங்கியதை அடுத்து,
அந்நிறுவனத்தை உருவாக்கிய பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் NDTV
நிறுவனத்திலிருந்து ராஜினாமா
செய்துள்ளனர்.
NDTV இந்தியின் பிரபல செய்தியாளர் ரவீஷ் குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.
அதானி NDTV நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்தி, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதானிக்கும், மோடிக்குமான நட்பு 20 ஆண்டுகளுக்கும் அதிகமானது என்பது வெளிப்படையாக அனைவரும் அறிந்த உண்மை. அதானியின் வளர்ச்சியில் மோடியின் பங்கு உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. ஏறக்குறைய மோடி மற்றும் அதானியின் வளர்ச்சி ஒன்றாகவே நடந்தது.
2014ல் மோடி பிரதமரான பிறகு, அதானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பிராந்திய மொழி ஊடகங்களை ஒப்பிடுகையில், ஆங்கில ஊடகங்கள் 10 ஆண்டுகள் முன்பு வரை ஊடகங்களாக செயல்பட்டு வந்தன.
2014 முதல், இந்திய ஊடகங்கள் ஒரு சார்பாக செய்திகள் வெளியிடுவதையும், அது தேர்தல் உட்பட பல்வேறு நிலைகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் பல ஆய்வுகளும் நூல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சாதாரண இந்திய குடிமக்களின் இடையே, சிறுபான்மையினர் குறித்த வெறுப்புணர்வு வளர்ந்ததில் இந்திய ஊடகங்கள் ஆற்றிய பங்கு என்பது மிகப் பெரிது. அவர்கள் ஊடகம் குறித்த அத்தனை தார்மீகங்களையும் காற்றில் பறக்க விட்டு விட்டு, ஒரு சார்பாக பாசிசத்தன்மையோடு, அரசின் துதிபாடிகளாக மாறிப் போனதை நாம் அனைவருமே பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.
NDTV ஒரு கடைசி பற்றுகோலாக இருந்து வந்ததையும் நாம் அறிவோம். அந்நிறுவனம் கடனில் சிக்கி, அதானி மற்றும் அம்பானி போன்ற மோடியின் முதலாளிகளின் வலையில் வீழ்ந்ததற்கு, மோடியும் பிஜேபியும் மட்டுமே காரணம் அல்ல. அதன் உரிமையாளர்கள், பிரணாய் மற்றும் ராதிகா ராயின் பல்வேறு தவறான முடிவுகளும் காரணமே.
NDTVயின் வீழ்ச்சி நம் அனைவருக்குமே ஒரு பெரும் மனச்சோர்வையும், அவநம்பிக்கையையும், ஏற்படுத்துகிறது என்பது உண்மையே. அடுத்து என்ன என்ற பெரும் கேள்வியும் எழுகிறது. 2024 மக்களவைத் தேர்தல் என்ற இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு பெரும் போர்க்களம் நம்மை எதிர்கொண்டுள்ள இந்தச் சூழலில்,NDTVக்கு நேர்ந்திருப்பது ஒரு பின்னடைவே. தேசிய அளவில், எதிர்க்கட்சிகளின் செய்திகளையும் சொல்ல, உண்மைச் செய்திகளை சொல்ல, நமக்கென்று ஒரு ஊடகம் இல்லை என்பது வேதனையே. ஊடக முதலாளிகளும் சரி, பெரும்பான்மையான ஊடகங்களும் சரி, காற்றடிக்கும் போக்கில் பயணிப்போம் என்ற முடிவுக்கு வந்திருப்பது நமக்கு ஒரு இழப்புதான். ஆனாலும் முழுமையாக நம்பிக்கை இழந்து விடும் சூழல்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இன்று இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது, டேவிட்டுக்கும் கோலியாத்துக்குமான யுத்தம். ஒரு புறம் அரசு, அதிகாரம், செல்வம், படைகள் என அனைத்து ஆயுதங்களோடும் கோலியாத். மறுபுறம், எவ்விதமான ஆயுதங்களும் இல்லாமல், டேவிட்களாக நாம்.
இந்த யுத்தத்தில் வெல்ல முடியுமா என்ற அவநம்பிக்கை நமக்கு ஏற்படுகையில் எல்லாம் நமக்கு நம்பிக்கை ஊட்டுவது, ரவீஷ் குமார் போன்ற டேவிட்களே.
Mainstream ஊடகங்கள் நம்மை கைவிடும் இந்த நேரத்தில், ரவீஷ்குமார்கள் நம்பிக்கை ஏற்படுத்துகிறார்கள்.
NDTV
நிறுவனத்தின் பிரபலமான செய்தியாளர் ரவீஷ் குமார், தனது யுட்யூப் சேனலில்
தான் ராஜினாமா செய்த விபரத்தை அறிவித்து, ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள
ஆபத்தை காக்கும் வகையில், உண்மையை பேசும் செய்தியாளர்களுக்கு
ஆதரவளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகாரத்துக்கும், அடக்குமுறைக்கும், மிரட்டல்களுக்கும், பணத்துக்கும் நான் அஞ்சவும் மாட்டேன், அடிபணியவும் மாட்டேன் என்று முரசறைந்து கூறுகிறார்கள் ரவீஷ்குமார்கள். அந்த ரவீஷ்குமார்கள் தனியாக இல்லை நாங்கள் இருக்கிறோம் என்று இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட லட்சக்கணக்கானோர் ஆதரவுக்கரம் நீட்டுகிறார்கள்.
NDTV எப்படியும் அதானியின் கட்டுப்பாட்டுக்குள்தான் செல்ல இருக்கிறது என்பதை உணர்ந்த ரவீஷ்குமார், ஜூன் 2022ல் தனக்கென்று ஒரு YouTube சேனலை தொடங்குகிறார். 30 நவம்பர் 2022 அன்று ரவீஷ்குமார் ராஜினாமா செய்கையில் அவர் சேனலின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 7 லட்சம்.
இன்று இந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 24 லட்சம்.
இதை விட நமக்கு நம்பிக்கை ஒளி வேண்டுமா என்ன ? இந்நாட்டின் மக்கள் நம்மோடு இருக்கிறார்கள். நியாய உணர்வுள்ள போராளிகள் நம்மோடு இருக்கிறார்கள். ஜனநாயகவாதிகள் நம்மோடு இருக்கிறார்கள். நாம் இந்த அதிகார வெறியையும், பாசிசத்தையும் எதிர்த்து நடத்தும் போரில் தனியாக இல்லை. இந்நாட்டின் மக்கள் அனைவரும் நம்மோடு இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். நம்பிக்கை இழந்து புலம்ப எதுவுமே இல்லை.
நாம் நியாயத்தின் பக்கம் நிற்கிறோம். தர்மத்தின் பக்கம் நிற்கிறோம். மனிதத்தின் பக்கம் நிற்கிறோம். இணைந்து நிற்கிறோம்.
நமக்கு தோல்வியே இல்லை. இந்த பாசிச எதிர்ப்பு போரில், நாம் ஒவ்வொருவரும், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்துவோம்., பாசிச எதிர்ப்பு போரில், நாம் அனைவரும் கடமையாற்றுவோம் என்பதே NDTV விவகாரத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், படிப்பினை, எல்லாமும்.
போராடுவோம். பாசிசத்தை வீழ்த்தும் வரை போராடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக