Dhinakaran Chelliah : சாதி வாங்கலையோ சாதி!
தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் ஆதிக்கம் எப்படியோ, அப்படித்தான் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களின் ஆதிக்கமும்.
தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான இடைநிலைச் சாதிகள் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் “யழ்ப்பாணக் குடியேற்றம்” எனும் ஆய்வு நூல்.
கேரளம்,ஆந்திரம்,கன்னடம்,துளுவம்,கலிங்கம்,
ஒரியா, என பல பிரதேசங்களிலிருந்து மக்கள் குடியேறிய பகுதியே யாழ்ப்பாணம் என்பதை மிகத் தெளிவாக “யாழ்ப்பாணக் குடியேற்றம்”ஆய்வு நூல் ஆசிரியர் திரு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்
(முதற் பதிப்பு 1982).கேரளத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு பற்றி இந்நூல் தரவுகளுடன் குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வு நூலை எழுதுவதற்கு 36 தமிழ் நூல்களையும்,5 வடமொழி நூல்களையும்,36 ஆங்கில நூல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர் சென்னை லொயாலாக் கல்லூரி தலைமைத் தமிழ் விரிவுரையாளர் மற்றும் இளைப்பாரிய அராவி இந்துக் கல்லூரி அதிபருமாவார்.
வேற்று சாதியினர் பலர் பணம் கொடுத்து வெள்ளாளர் ஆன வரலாற்றை ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;
இடைச்சாதிகளைச் சேர்ந்த பலர் தங்கள் சாதிப் பட்டங்களை மறைத்து வேளாளருக்குரிய பிள்ளை முதலி என்னும் பட்டங்களைத் தமது பெயரோடு வைத்து வேளாளராக முயன்றனர் என்பதைப் பின்வரும் நாட்டுப் பாடலால் அறியலாம்.
‘கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர்
மெள்ள மெள்ள வெள்ளாள ராயினர்.’
இந்தச் சூழ்நிலையிற் படைவீரர்களாகிய மழவர், பாணர் முதலியோர் தாம் தொண்டை
நாட்டிலிருந்து விசேட அழைப்பின் பேரில் வரவழைக்கப்பட்ட உயர்குடி வேளாளர் என்று வாய்ப்பேச்சாலும், நூல்கள் மூலமும் பிரசாரஞ் செய்தனர். அவ்வகைப் பிரசாரத்துக்காக எழுந்த நூல்களே வையாபாடல், கைலாய மாலை, யாழ்ப்பாண வைபவமாலை என்பன.
போத்துக்கேயர் காலம்(கி.பி 1621-1658);
போத்துக்கேயர் ஆட்சிக்கு வந்தபோது அவர்களது மதக்கொள்கைகளும், ஆட்சிமுறைகளும்,
நாகரிகமும் சாதிக் கட்டுப்பாட்டைச் சிதறச்செய்தன.”எவருக்கும் கிறிஸ்துமதம் அநுட்டித்தாலன்றி அதிகாரத் தலைமை உத்தியோகங்கள் கிடையா” என்று அவர்கள் கட்டளை பிறப்பித்தபோது மக்கள் உள்ளுக்குச் சைவராகவும்,வெளித் தோற்றத்திற் கிறீஸ்தவராகவும் நடித்து உத்தியோகங்களைப் பெற்றனர்.
போத்துக்கேயர் சாதிக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினதின் விளைவாகச் சாதிகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.காணிகளைப்பற்றிய விபரங்கள் அடங்கிய ஏடுகள் (தோம்புகள்) முதல்முதல் கி. பி. 1623இல் எழுதப்பட்டபோது உயர்ந்த உத்தியோகங்களிலிருந்த பாணர், மழவர் முதலியோர் அவற்றில் தங்களை வேளாளர் என்று பதிந்து கொண்டனர். அவர்களைப் பின்பற்றி மற்றச் சாதிகளும் தங்கள் சாதிப்பட்டத்தை மறைத்து வேளாளர் என்று பதிந்து கொண்டனர். அரசாங்க ஏடுகளில் வேளாளர் என்று பதியப்பட்டது இதுவே முதன்முறையாகும். பெருந்தொகையான மக்கள் தங்களை வேளாளர் என்று பதிய முன்வருவதை உத்தேசித்து அரசினர் வேளாளர் சாதிப்பட்டப் பெயராகிய முதலிப்பட்டத்தை 18 இறைசாலுக்கு விற்கத்தொடங்கினர். பெருந்தொகையான மக்கள் அப்பட்டத்தை விலைக்கு வாங்கி தம்மை வேளாளராக்கிக் கொண்டனர். இதன் விளைவாகக் கி. பி. 1690 இல் 10170 ஆக இருந்த வேளாளர் சனத்தொகை கி:பி. 1796 இல் 15796 ஆக உயர்ந்தது. இவ்விதச் சாதிமாறல்களால் தாழ்ந்தசாதிகள் சிலவற்றைத்தவிர மற்றைய சாதிகள் பல மறைந்து போயின. இதற்கிடையில் போத்துக்கேயர் ஆட்சிக்காலம் கி.பி. 1657 இல் முடிவடைந்தது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலம் கி. பி. 1658 இல் தொடங்கியது.
ஒல்லாந்தர்(டச்சு)ஆட்சிக்காலம் (1658-1795);
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் கி.பி. 1658 இல் தொடங்கியபோது ‘றிக் லொப் வான் கூன்ஸ்' என் னும் தளபதியின் கட்டளைக்கிணங்க (31-10-1658)வேளாளருக்கு உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டன. வேளாளர் அரசினருக்குப் பணியாமல் கர்வங்கொண்டு கலகம் விளைத்தனர். இதனால் வேளாளருடைய செல்வாக்குக் குறைந்தது. இது தக்கசமயம் எனக்கருதி தாமும் வேளாளருக்குச் சமம் என்றும், தமக்கும் உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்றும் மடப்பளியார் வாதாடினர். அதன் பலனாக 1694 ம் ஆண்டு உத்தி யோகங்கள் எல்லாச் சாதிகளுக்கும் கொடுக்கப்பட்ட போது வேளாளர் திரும்பவும் கலகஞ் செய்தனர். இக்கலகத்தின் பின்னர் மடப்பளியாரின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது. மடப்பளி அதிகாரிகள் தமது சாதிப்பட்டமாகிய மடப்பம் என்னும் பெயரை தோம்பில் பதியத் தொடங்கினர். அவர்களைப் பின் பற்றி எல்லாரும் பதியத் தொடங்கினர். அரசினர் வருமானத்தை நோக்கி அப்பட்டத்தை 100 இறைசாலுக்கு விற்றனர். பெருந்தொகையான மக்கள் அப்பட்டத்தை வாங்கினர். மடப்பளியாரின் சனத்தொகை 5520 ஆக உயர்ந்தது. மீன்குத்தகையை வேளாளர் வாங்க மறுத்தபடியால் கரையாருக்கும் வேளாளருக்குரிய முதலிப் பட்டம் கொடுக்கப்பட்டது. மடப்பளியாரும் கரையாரும் வேளாளரோடு உத்தியோகப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டபடியால் வேளாளருடைய செல்வாக்கு அதிகம் பாதிக்கப்பட்டது. வேளாளர் தமது செல்வாக்கை உயர்த்த எண்ணித் தாம் விசேட அழைப்பின்பேரில் குடியேற்றப்பட்ட உயர்குடித் தொண்டை மண்டல வேளாளர் என்னும் தகுதியைத் தாபிக்க இடைவிடாது மேலும் முயன்றனர்.அந்த முயற்சியின் பயனாகக் கடைசியாகத் தோற்றிய நூலே யாழ்ப்பாண வைபவ மாலையாகும்.
இப்படியாக 18 இறைசாலுக்கும் பின்னர் 100 இறைசாலுக்கும் வெள்ளாளர்களாக சாதிமாறியவர்கள் பலர். இறைசால் என்பது இன்றைய தேதியில் எவ்வளவு பணம் என்பது தெரியவில்லை.
யாழ்ப்பாண வெள்ளாளர்களின் ஆதிக்கத்தை குறிப்பிடும் சமகால நூல்களில் “கேரள டயரீஸ்” எனும் நூலும் முக்கியமானது. இதிலுள்ள “வெள்ளாளர்கள்,யாழ்ப்பாணத்தின் துயரம்” எனும் கட்டுரை பல தகவல்களைத் தருகிறது.
“ஆதிசைவ வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வேளாளர், சைவ வேளாளர், அசைவ வேளாளர், காக்கட்டு வேளாளர் என இந்திய வேளாளரில் ஆயிரத்தி எட்டுப் பிரிவுகள் இருக்கும்போது, யாழ்ப்பாணத்தில் மட்டும் எப்படி எல்லாரும் ஒரே வெள்ளாளர் ஆகினர்.(சைவவேளாளர், கிறித்தவ வேளாளர் காமெடியை விடுங்கள்)
உண்மையில் ஆதிக்க சாதிகளாக இருந்த வெள்ளாளர், மறவர், வன்னியர், கள்ளர், அகம்படியார் போன்ற பல ஜாதிகள் ஒன்றாகி காலப்போக்கில் வெள்ளாளராகினர். தூய்மை வாதம் பேசிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்களால் ஜீரணிக்க முடியாத உண்மை இது. "கள்ளர், மறவர், கனத்த அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்" என்பது யாழ்ப்பாணத்தின் மூத்த மொழி. அதை நாங்கள் மறக்கக் கூடாது.”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக