வியாழன், 8 டிசம்பர், 2022

ஹிமாச்சலில் காங்கிரஸ் வெற்றி! கேம் சேஞ்சிங்? குஜராத் பாஜக வெற்றியை மறக்கடித்த செய்தி

hjk

nakkheeran.in : காங்கிரசுக்கு ஆக்சிஜன் அளித்த ஹிமாச்சல் வெற்றி; கேரள ஸ்டைலில் ஆட்சியை திருப்பி போட்ட மக்கள்
நடந்து முடிந்த குஜராத், ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் காலை முதலே வெளியாகி வரும் நிலையில் தற்போது பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.
குஜராத், இமாச்சல் மாநிலத்தின் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையிலான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் குஜராத்தில் 120 சீட் வரை பாஜக ஜெயிக்கலாம் என்ற கருத்துக்கணிப்பை உடைத்து 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று 7 முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.


 அந்த வகையில் யாருமே எதிர்பாராத வண்ணம் வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்து கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பொய்யாக்கியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மீண்டும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக முடிசூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவித்திருந்த நிலையில், பாஜக தரப்பு அதிர்ச்சி அடையும் வகையிலும், காங்கிரஸ் தரப்பு மகிழ்ச்சி அடையும் வகையிலும் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டு இருக்கிறது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கைகளில் 39 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை முன்னணியில் இருந்து வருகிறது. கடந்த 1985ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததில்லை. அந்த வகையில் கேரள மக்கள் எப்படி ஆளும் கட்சியை அடுத்த முறை வெற்றிபெற வைப்பதில்லையோ அதே போல இமாச்சல் மக்களும் இந்த முறை ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்கள்.


ஆனால் இந்தமுறை கள நிலவரம் என்பது காங்கிரஸ் வெற்றிபெறும் என்று சொல்வதற்குரிய எந்த அறிகுறிகளும் இல்லாமலே இருந்து வந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் பாஜகவே 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கியுள்ளது. வழக்கம்போல் எதிர்க்கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளனர்.

தோல்வியில் தொடர்ந்து தத்தளித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஆக்சிஜனாக இந்த வெற்றி பார்க்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்றது போல் குதிரை பேரம் நடந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்குமா அல்லது அரசியல் விளையாட்டை இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக அரங்கேற்றுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
 

கருத்துகள் இல்லை: