hindutamil.in : ராகுல் காந்தி நடைபயணம் குமரியில் இன்று தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
நாகர்கோவில்: குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.
இதில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து விமானத்தில் நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸார் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர், இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வருகிறார். அங்கு ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு ராஜீவ் தியாக பூமியில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார். அங்கு வீணை காயத்ரியின் இசை அஞ்சலி நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து ராஜீவ் காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் ராஜீவ் காந்தியுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வருகிறார். மாலை 4 மணி அளவில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். காமராஜர் நினைவு இல்லத்திலும் காந்தி மண்டபத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் இருந்து நடைபயணத்தை ராகுல் தொடங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ராகுலிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். அங்கிருந்து 600 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்லும் ராகுல் காந்தி, அங்கு திரண்டிருக்கும் தொண்டர்களிடையே பேசுகிறார்.
பொதுக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வில்லை.
கூட்டம் முடிந்ததும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வரை நடைபயணமாக செல்லும் ராகுல், இன்றிரவு அங்கு தங்குகிறார். நாளை (8-ம் தேதி) முதல் 10-ம் தேதி வரை 4 நாட்கள் குமரி மாவட்டத்தில் 56 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு, ஒரு லட்சம் பேரை சந்திக்கிறார். காஷ்மீர் வரை மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணத்தின்போது ஒரு கோடி பேரை ராகுல் சந்திக்க உள்ளார்.
118 இளைஞர்கள் தேர்வு
ராகுல் காந்தியுடன் 118 இளைஞர்கள் தொடக்கம் முதல் கடைசி வரை பயணிக்கின்றனர். உடல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த விஜேந்திர சிங் (58) என்பவர் அதிக வயதானவர். மற்றவர்கள் 38 வயதுக்கு உட்பட்டவர்கள். அருணாசல பிரதேசத்தை சேர்ந்த அஜம் ஜாம்லா, பெய்ம்பாய் என்ற 25 வயதான இரட்டையர்களும், மகளிர் காங்கிரஸை சேர்ந்த 28 பெண் தொண்டர்களும் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். இதுதவிர எந்த மாநிலத்தில் நடைபயணம் செல்கிறதோ, அந்த மாநில எல்லை வரை உள்ளூரைச் சேர்ந்த 100 பேர் ராகுலுடன் செல்வர்.
50 கேரவன் வேன்கள்
நடைபயணத்தில் செல்வோருக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க தனித்தனி குழுக்களும் செல்கின்றன. அவரவர் விருப்பத்தை பொறுத்து உணவு, சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபயண குழுவினர் ஓய்வெடுக்க, அனைத்து வசதிகளும் கொண்ட 50 கேரவன் வேன்களும் செல்கின்றன. கட்சியின் தகவல் தொழில்நுட்பக் குழுவினரும் உடன் சென்று நடைபயணத்தின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபயண குழுவினர் தினமும் 20 முதல் 25 கி.மீ. நடக்க உள்ளனர். காலை 6 முதல் 10 மணி வரையும், மாலையில் 4 முதல் 7 மணி வரையும் நடக்க உள்ளனர். நடைபயணத்தின்போது பொதுமக்களுடன் ராகுல் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ராகுலின் நடைபயணத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி வருகையையொட்டி ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கட்சியின் தேசியத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் கன்னியாகுமரியில் முகாமிட்டு உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக