சனி, 10 செப்டம்பர், 2022

கவிஞர் கபிலன் மகள் தூரிகை தற்கொலை என்ன காரணம்? என்ன நடந்தது? - முதற்கட்ட தகவல் என்ன?

tamil.oneindia.com  - Vignesh Selvaraj  :  சென்னை : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தூரிகை தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூரிகை தற்கொலைக்கான காரணம் குறித்து முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.
பாடலாசிரியர் கபிலனின் மகளும், ஆடை வடிவமைப்பாளருமான தூரிகை சற்று முன் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். 2001ல் விக்ரம் நடிப்பில் வெளியான, 'தில்' படத்தில் இடம்பெற்ற 'உன் சமையல் அறையில்' என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கபிலன்.

சூப்பர்ஹிட் பாடலாசிரியர்
தொடர்ந்து, விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார். அவரது ஏராளமான பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் சூப்பர்ஹிட்டாகி உள்ளன. கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் நடித்தும் இருக்கிறார் கபிலன்.

கபிலன் மகள்
கபிலன் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது மகள் தூரிகை சற்றுமுன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இளம் வயதில் தூரிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தூரிகை
கபிலனின் மகள் தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து வந்தார். முன்னணி ஆங்கில ஊடகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்த தூரிகை, 'Being Women Magazine' எனும் இதழையும், 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். பல்வேறு திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி இருக்கிறார் தூரிகை.

பாசிட்டிவான பெண்
'பீயிங் வுமன் மேகசின்' தொடக்க விழாவின்போது, "பெண்ணாக இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காக தான் பெண்களை மையமாக வைத்து இந்த பத்திரிகையை தொடங்கினேன். பெண்கள் குறித்த அவர்களுடைய பாசிட்டிவ்வான பக்கங்களை வெளிப்படுத்தவே இந்த பத்திரிகையை தொடங்கினேன். பெண்களைக் கொண்டாடுவதற்கு தான் இந்த பத்திரிகை" எனப் பேசியிருந்தார் தூரிகை.

தற்கொலை
இந்நிலையில், தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் தூரிகையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தற்போது தூரிகையின் உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட தகவல்
தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் நடத்தும் விசாரணையில் மேலதிக தகவல்கள் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: