ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

இளையராஜா அம்பேத்கர் நரேந்திர மோடி ராகதேவன் சங்கியாகி விட்டாரா?

 B.R.அரவிந்தாக்ஷன்  -  ஊடகவியலாளர்  :  இளையராஜாவுக்கு ஒரு கடிதம்!
அன்புக்குரிய இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு வணக்கம்,
பாபாசாகேப் Dr.அம்பேத்கரின் ஜெயந்தியை முன்னிட்டு BlueKraft Digital Foundation என்ற அமைப்பு வெளியிட்ட "Ambedkar & Modi - Reformer’s Ideas, Performer’s Implementation" என்ற புத்தகத்திற்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை தமிழகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளதை அறிவீர்கள்.
உங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்,, சமூகவலைத்தளங்களில், உங்களை கடுமையாக விமர்சித்துவரும் நபர்களை  கொஞ்சமும் கண்டுகொள்ளாதீர்கள்.
அவர்களுக்கு பிடிக்காத நரேந்திரமோடியை,அவர்களுக்கு பிடித்த அம்பேத்காரோடு நீங்கள் ஒப்பிட்டு எழுதியதை அவர்களால் ஏற்கவே முடியவில்லை.


அதனால் தாறுமாறாக விமரிசித்து வருகின்றனர்.
உண்மையில்,,பிரதமர் நரேந்திரமோடியை நீங்கள் அம்பேத்காரோடு ஒப்பிட்டு எழுதியதில் எந்த தவறும் இல்லை.
எத்தனையோ மத குருமார்கள்,சாமியார்கள் தங்களை கடவுளோடு ஒப்பிடுகிறார்கள்,அவ்வளவு ஏன் நானே கடவுள் என்று கூட கூறிக்கொள்கிறார்கள்.
அதையே நம்பும் கோடிக்கணக்கான  முட்டாள்கள் நிறைந்த இந்த உலகில்,
குஜராத் பல்கலைக்கழகத்திலேயே இல்லாத  
 “Entire Political Science “என்ற  பாடத்தை படித்து பட்டம் வாங்கியதாக கூறும் நரேந்திரமோடியை, அம்பேத்கார் போன்ற ஒரு மாமேதையோடு,,
ஒப்பிட்டு எழுதியது அவ்வளவு ஒன்றும் மோசமான செயல் அல்ல.
மதிப்புக்குரிய இளையராஜா அவர்களே,
நீங்கள் முன்னுரை எழுதியிருக்கும் புத்தகத்தை வெளியிட்டிருக்கும்  BlueKraft நிறுவனம் பிரதமர் மோடியின் புகழ்பாடும் புத்தகங்களை வெளியிடுவதற்காகவே உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதை அறிவீர்களா ?
அந்நிறுவனம் நீங்கள் முன்னுரை எழுதிய புத்தகத்தோடு சேர்த்து இதுவரை
6 புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.
அதன் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராஜேஷ் ஜெயின்  என்பவர் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு சோஷியல் மீடியா பிரச்சாரம் மேற்கொண்ட மிக முக்கியமான நபர்.
May 25, 2017-ம் ஆண்டு குடியரசு தலைவர் மாளிகையில் 'Mann Ki Baat: A Social Revolution on Radio’ என்ற புத்தகம் அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாபிமுகர்ஜியால் வெளியிடப்பட்டது.
புத்தகத்தை எழுதியவர் என்ற இடத்தில ராஜேஷ் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால்,அந்த ராஜேஷ் ஜெயின் என்ன சொன்னார் தெரியுமா ?
நான் இப்படி ஒரு புத்தகத்தை எழுதவே இல்லை என்று தெறித்து ஓடினார்.
இப்படி ஒரு கூத்து உலகில் எங்காவது நடக்குமா யோசித்துப்பாருங்கள் இளையராஜா அவர்களே ?
அதாவது இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையில் வெளியிடப்பட்ட புத்தகம் யாரால் எழுதப்பட்டது என்ற கேள்விக்கு இப்போது வரை பதில் இல்லை.
இந்த நாட்டின் முக்கியமான அமைச்சகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பிரபலப்படுத்திய புத்தகத்தை எழுதியது யார் என்றே யாருக்கும் தெரியாது
கடைசியில் ஒரே மானக்கேடாக இருக்கிறது என்று Author என்ற இடத்தில BlueKraft Digital Foundation என்றே அச்சிட்டுக்கொண்டது அந்நிறுவனம்.
இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட நிறுவனம் வெளியிட்ட புத்தகத்திற்கு தான் நீங்கள் முன்னுரை எழுதியுள்ளீர்கள்.
ஆச்சர்யம் என்னவென்றால்,முதன் முறையாக ஒரு புத்தகத்திற்கு நீங்கள் எழுதியுள்ள முன்னுரை இது தான்.
இதற்கு முன் வேறு யாருடைய புத்தகத்திற்கும் நீங்கள் முன்னுரை எழுதியதாக தெரியவில்லை.
கடந்த 16/02/22 அன்று உங்களுடைய சகோதரர் கங்கைஅமரன் உங்களை சந்தித்த போது பிரதமர் குறித்த புத்தகத்திற்கு உங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கலாம்.
நீங்களும் உங்களிடம் கொடுக்கப்பட்ட பிரதியை படித்து அதில் உள்ள கட்டுரைகளின் அடிப்படையில் முன்னுரை எழுதி கொடுத்திருக்கலாம்.
ஆனால்,,‘குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை கண்டு அம்பேத்கரே பெருமைகொள்வார் என்று எழுதியுள்ளீர்கள் அல்லவா !
அதில் தான் சிக்கலே...
உங்களுக்கு "குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற திட்டத்தில் என்ன நடந்தது,என்ன நடக்கிறது என்று ஏதாவது தெரியுமா
இன்னிசை வேந்தரே !?
மிகவும் பிஸியான இசையமைப்பாளரான நீங்கள் திட்டம்  பற்றி முழுமையாக தெரிந்துகொண்டிருக்கவேண்டுமென்று அவசியமில்லை.
ஆனால்
அந்த திட்டத்தை குறிப்பிட்டு பாராட்டி எழுதி இருக்கிறீர்கள் அல்லவா!
அதனால் இதை கேட்க உள்ளது
2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த திட்டத்திற்கு 2020-ம் ஆண்டுவரை ஒதுக்கப்பட்ட 622.48 கோடி ரூபாயில்,
விளம்பரத்திற்காக மட்டுமே 446.72 கோடி ருபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
அதாவது,பெண் குழந்தைகளுக்காக என ஒதுக்கப்பட்ட தொகையில் 80% சதவிகிதத்தை பிரதமருடைய படம் போட்டு விளம்பரம் செய்ததை தவிர வேறு எதையுமே செய்யவில்லை
ஆனால்,இந்த திட்டத்தை தான் குறிப்பிட்டு நீங்கள் பிரதமர் மோடியை
அண்ணல் அம்பேத்காரோடு ஒப்பிட்டுள்ளீர்கள்.
இதுவாவது, பரவாயில்லை,,அதே "பெண் குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி சட்டத்திற்கு முரணாக, மக்களிடம் நன்கொடை வசூலித்து வருவதாவது உங்களுக்கு தெரியுமா ?
Namo App என்ற செயலியின் மூலமாக நீங்கள் பாராட்டி தள்ளியிருக்கும் பிரதமர் பெண்குழந்தைகளுக்காக, மக்களிடம் நன்கொடை வசூலிக்கிறார்.
ஆனால்,அந்த பணம் யாருக்கு போகிறது தெரியுமா ?
பாரதீய ஜனதா கட்சிக்கு போகிறது
ஆச்சர்யம் என்ன தெரியுமா திரு.இளையராஜா அவர்களே
பிரதமர் மோடி அவரது பெயரில் Namo App என்ற செயலியை அவரே அறிமுகப்படுத்துகிறார்.
அந்த Namo App  மூலம் நீங்கள் உச்சிமுகர்ந்த "பெண் குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம்"திட்டத்திற்க்காக, பிரதமர் மக்களிடம் நன்கொடை வசூலிக்கிறார்.
ஆனால்,,அந்த  Namo App -ஐ உருவாக்கியவர் யார்,
யார் அதன் உரிமையாளர் என்ற எந்த தகவலும் இந்திய அரசாங்கத்திடம் இல்லை.
எப்படி இருக்கிறது பாருங்களேன் கதை,,
ஆனால்,
இந்த நாட்டில் சாதாரண ஒரு பெட்டிக்கடை வைப்பதற்கு கூட அரசின் அனுமதி தேவை.
பிரதமர் மட்டும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் இந்த நாட்டில்.
எப்படி ?
இப்படிப்பட்ட நேர்மையின் சிகரமான,உண்மையின் சொரூபமான பிரதமர் மோடியை தான் நீங்கள் அம்பேத்கார் என்ற தலைவரோடு ஒப்பிட்டு முன்னுரை எழுதியுள்ளீர்கள்.
தவறில்லை. அது உங்கள் கருத்து.அதை சொல்ல உங்களுக்கு உரிமையும் இருக்கிறது.
எனக்கு என்ன சந்தேகம் என்றால்,
அருணகிரிநாதரையும்,ரமணா மகரிஷியையும் இதர ஆன்மீக வரலாற்றையும் நன்கு அறிந்த நீங்கள் அம்பேத்கார் குறித்து அறவே படிக்கவில்லையோ எனத்தோன்றுகிறது  
இன்னிசை வேந்தர் இளையராஜா அவர்களே,,
டாக்டர் அம்பேத்கார் இந்த நாட்டில் "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற நம்பிக்கையை அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக விதைத்தவர்.
ஆனால் இப்போது,,யாருக்காக சட்டங்களை நாடாளுமன்றம்  இயற்றுகிறது என்ற கேள்வியை உச்சநீதிமன்றமே கேட்கும் வகையிலான ஆட்சியே இப்போது நாட்டில் நடந்துவருகிறது.
இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதி, இந்துக்களுக்கு ஒரு நீதி என இந்த நாடே தலைகீழாக மாறி இருப்பதை அறிவீர்களா..?
இளமைக்காலம் முதல் இப்போது வரை இசையையே மூச்சாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு அரசியலின் தந்திரங்கள் புரியாமல் இருக்கலாம்.
2024 நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி நடந்து வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கான பில்டப் பிரச்சாரத்திற்கு நீங்கள் சிறு கருவியாகியிருக்கிறீர்கள் அவ்வளவே.
பாவலர் சகோதரர்கள் என்ற பெயரில் இளம் வயதில் எளிமக்களின் பிரச்சனைகளை மேடை நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தி   ஆயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய நீங்கள்,,
இன்று  நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வாழ்ந்து வருவது மிகவும் பரிதாபத்துக்குரியது. வருத்தமளிக்கிறது.
பிரதமர் மோடியை பார்த்து அம்பேத்காரே பெருமை கொள்வார் என்று தானே எழுதியுள்ளீர்கள்..!?
உண்மை என்னவெனில்,,
அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்துக்கொண்டிருப்பது யார் என்று தெரிந்துகொள்ள
நீங்கள் ஒன்றே ஒன்றை செய்ய வேண்டும்!
கோடிக்கணக்கான மக்கள் உங்களை கொண்டாடித்தீர்ப்பதால் பல ஆண்டுகளாக நீங்கள் வானத்திலேயே மிதந்து கொண்டிருக்கிறீர்கள் ?
இனி யாருடைய புத்தகத்திற்காவது முன்னுரை எழுதுவதற்கு முன்..
கொஞ்சம் எதார்த்த உலகத்தையும் எட்டிப்பாருங்கள்..
B.R.அரவிந்தாக்ஷன்
ஊடகவியலாளர்
16-04-22

கருத்துகள் இல்லை: