tamilmurasu : உக்ரேனின் தென்துறைமுக நகரான மரியபோலை தமது படைகள் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்தார்.
மரியபோல் நகரிலுள்ள மிகப் பெரிய அஸவ்ஸ்தால் எஃகு ஆலை தவிர்த்து, அந்நகரின் மற்ற அனைத்துப் பகுதிகளும் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் செர்கே ஷோய்கு தெரிவித்தார்.
“மரியபோல் போன்ற தென்பகுதியிலுள்ள முக்கியமான மையத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருப்பது ரஷ்யப் படைகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி,” என்று ஷோய்குவுடன் சேர்ந்து தொலைக்காட்சிவழி உரையாற்றியபோது திரு புட்டின் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட தனது இரண்டு மாதகாலப் படையெடுப்பில் ரஷ்யா கைப்பற்றியுள்ள ஆகப் பெரிய உக்ரேனிய நகரம் மரியபோல் எனக் கூறப்படுகிறது. டோன்பாஸ் வட்டாரத்தில் ரஷ்யா தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த இந்த வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
“மரியபோல் விடுவிக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய உக்ரேனியப் படைகள் அஸோவ்ஸ்தால் ஆலைப் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளன,” என்று திரு ஷோய்கு கூறினார்.
முன்னதாக, ஈராயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரேனியப் படையினர் இருப்பதாகக் கூறப்படும் எஃகு ஆலைப் பகுதிக்குள் ரஷ்யப் படையினர் அதிரடியாகப் புகுவது தேவையற்றது என்று திரு புட்டின் கூறிவிட்டார். ஆனாலும், ஓர் ஈ கூட அங்கிருந்து தப்பிக்க முடியாதபடி அப்பகுதியை அடைத்துவிடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மரியபோல் நகரில் இருந்து நான்கு பேருந்துகள் மக்களை ஏற்றிக்கொண்டு வெளியேறிவிட்டதாக உக்ரேனிய துணைப் பிரதமர் ஐரினா வெரெஸ்சுக் நேற்று தெரிவித்தார். அங்கிருந்து பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரை வெளியேற்றும் பணி தொடரும் என்றும் அவர் கூறினார்.
கியவ் வட்டாரத்திலுள்ள பிண அறைகளில் 1,020 அப்பாவிகளின் உடல்கள் இருப்பதாக உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அணுவாயுத ஏவுகணைச் சோதனை
இதற்கிடையே, கண்டம்விட்டுக் கண்டம் பாய்ந்து, அணுவாயுதத்தைச் சுமந்து சென்று தாக்கவல்ல ஏவுகணையை ரஷ்யா சோதித்துப் பார்த்துள்ளது.
இதனை ‘உலகிலேயே ஆகச் சிறந்தது’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மார்தட்டினார்.
“இந்தத் தனிச்சிறப்புமிக்க ஆயுதம் நமது படைகளின் போர்த்திறத்தை வலுப்படுத்தும்; புற அச்சுறுத்தல்களில் இருந்து ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்; ஆக்ரோஷமாகப் பேசி நம்மை அச்சுறுத்த முயலும் எதிரிகளை இருமுறை யோசிக்க வைக்கும்,” என்று தொலைக்காட்சி வழி உரையாற்றியபோது அதிபர் புட்டின் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய ‘சர்மாத்’ ஏவுகணையில் பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆயுதங்களை ரஷ்யா பொருத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக இந்த ஏவுகணையை உருவாக்கும் முயற்சியை ரஷ்யா மேற்கொண்டு வந்ததால் மேற்கத்திய நாடுகளுக்கு இச்சோதனை வியப்பளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும், இப்போதைய போர்ச் சூழலில் இந்த ஏவுகணைச் சோதனை இடம்பெற்றது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக